search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உருவாகிறது புதிய கொடைக்கானல்: சுற்றுலா பயணிகளை கவர ட்ரீ வாக்
    X

    உருவாகிறது புதிய கொடைக்கானல்: சுற்றுலா பயணிகளை கவர ட்ரீ வாக்

    கொடைக்கானல் பைன் பாரஸ்ட் பகுதியில் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக ‘ட்ரீ வாக்’ அமைக்கப்பட உள்ளது.
    திண்டுக்கல்:

    மலைகளின் இளவரசி என வர்ணிக்கப்படும் கொடைக்கானல் தமிழகத்தின் தலை சிறந்த சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. இங்கு தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் அனைத்து மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.

    ஆண்டு தோறும் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொடைக்கானல் நகரை பார்வையிட்டு செல்கின்றனர். இங்கு நட்சத்திர ஏரி, பிரையண்ட் பூங்கா, பைன்மரக்காடுகள், மோயர்பாயிண்ட், குணாகுகை, தொப்பி தூக்கி பாறை, பேரிஜம் ஏரி, வெள்ளி நீர்வீழ்ச்சி, குறிஞ்சி ஆண்டவர் கோவில் போன்றவை சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து இழுக்கிறது.

    இருப்பினும் கொடைக்கானலில் மேலும் சுற்றுலா வளர்ச்சி ஏற்படுத்த சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனையடுத்து வனத்துறை சார்பில் புதிய திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. பைன் மரக்காடுகள் பகுதியில் மரங்களுக்கு இடையே மரக்கட்டைகளால் நடைபாதை பாலம் போல் அமைத்து ‘ட்ரீ வாக்’ அமைக்கப்பட உள்ளது.

    இது சுற்றுலா பயணிகளுக்கு புதிய அனுபவத்தையும் புத்துணர்ச்சியையும் ஏற்படுத்தும். ‘ட்ரீ வாக்’ என்பது மரங்களிடையே மரக்கட்டைகள் மீது நடக்கும் வகையில் அமைக்கப்படும் பாலமாகும். முதலில் தரையில் இருந்து தொடங்கி சிறிது சிறிதாக உயரம் அதிகரிக்கப்பட்டு அதிகபட்சமாக 2 மீட்டர் உயரம் வரை 800 மீட்டர் தூரத்தில் இவை அமைக்கப்படும். வரும் மார்ச் 2018-க்குள் இதனை முடிக்க திட்ட மதிப்பீடு செய்து அரசுக்கு வனத்துறையினர் அனுப்பியுள்ளனர்.

    இதே போல கொடைக்கானலில் பிரசித்தி பெற்ற குணா குகையை அருகில் சென்று ரசிக்கும் விதமாக அப்பகுதியை மேம்படுத்தும் பணிகள் நடைபெற உள்ளது. பண்ணைக்காடு- தாண்டிக்குடி செல்லும் பாதையில் உள்ள எதிரொலி பாறை அருகே டிரைபல் ஸ்டோன் எனப்படும் ஆதிவாசிகளின் வாழ்விடம் புதிய சுற்றுலா தலமாக அமைக்கப்பட உள்ளது.

    பேரிஜம் ஏரிக்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் நலன் கருதி அங்கு கழிவறை அமைக்கப்பட உள்ளது. இதன் மூலம் வரும் கோடை விழாவிற்குள் உருவாக உள்ள புதிய கொடைக்கானல் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கொடைக்கானல் பைன் மரக்காடுகள் பகுதியில் அமைய உள்ள ‘ட்ரீ வாக்’ மாதிரி வடிவம்.
    Next Story
    ×