search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    713 பேரின் வக்கீல் பதிவை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்: பார் கவுன்சிலுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
    X

    713 பேரின் வக்கீல் பதிவை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்: பார் கவுன்சிலுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

    திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் நேரடியாக எம்.ஏ. பட்டம் பெற்று, சட்டப்படிப்பை முடித்து பதிவு செய்த 713 பேரின் வக்கீல் பதிவை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பார் கவுன்சிலுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
    சென்னை:

    ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி நிர்வாகம் தொடர்பான ஒரு வழக்கு ஐகோர்ட்டு நீதிபதி என்.கிருபாகரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, கல்லூரி நிர்வாகத்தையும், சொத்தையும் அபகரிக்க வக்கீல்கள் என்று கூறிக்கொண்டு சிலர் செயல்பட்டது நீதிபதியின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது.

    இதையடுத்து, அந்த கும்பல் மீது போலீசார் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? கட்டப்பஞ்சாயத்து கும்பலுடன் போலீசார் கைகோர்த்து செயல்படுகின்றனரா? சொத்துகளை அபகரிக்கும் செயல்களில் தொடர்ந்து ஈடுபடும் வக்கீல்கள் யார்? என்பன உள்பட 25 கேள்விகளை போலீசாருக்கும், பார் கவுன்சிலுக்கும் நீதிபதி கேட்டிருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதி என்.கிருபாகரன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலின் கவுரவ தலைவரும், அட்வகேட் ஜெனரலுமான விஜய் நாராயண், அகில இந்திய பார் கவுன்சில் சார்பில் மூத்த வக்கீல் எஸ்.பிரபாகரன், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் சார்பில் மூத்த வக்கீல் சிங்காரவேலன் உள்ளிட்டோர் ஆஜராகி வாதிட்டார்கள். இதையடுத்து நீதிபதி பிறப்பித்த இடைக்கால உத்தரவில் கூறியிருப்பதாவது:-

    வெளி மாநிலங்களில் செயல்படும் ‘லெட்டர்பேடு’ சட்டக்கல்லூரிகளிடம் இருந்து எளிதாக சட்டப்படிப்புக்கான சான்றிதழை பெற்று, பார் கவுன்சிலில் பதிவு செய்து, வக்கீலாகி விடும் நிலைமை தற்போது நிலவுவதாக வக்கீல்கள் வாதிட்டார்கள். குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள், முறையான கல்வி தகுதிகள் இல்லாதவர்கள் கூட வக்கீலாக மாறி விடுகின்றனர். இவர்கள் சொத்துகளை அபகரிக்கும் கூலிப்படையினராகவும் பயன்படுத்தப்படுகின்றனர். இதனால் ஒட்டுமொத்த வக்கீல் தொழிலுக்கே களங்கம் ஏற்படுகிறது.

    அட்வகேட் ஜெனரல் வாதிடும் போது, எந்த ஒரு கல்வி சான்றிதழும் இல்லாமல், 42 பேர் வக்கீலாக பதிவு செய்துள்ளதாகவும், இவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியும், 2 பேர் மட்டுமே விளக்கம் அளித்துள்ளனர். அதிலும், ஒருவர் 2 முறை பார் கவுன்சிலில் வக்கீலாக பதிவு செய்துள்ளார் என்று கூறினார்.

    6-ம் வகுப்பு கூட படிக்காதவர்கள், திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் நேரடியாக எம்.ஏ. பட்டம் பெற்று, அதன் அடிப்படையில் சட்டப்படிப்பை முடித்து, 713 பேர் வக்கீல்களாக பதிவு செய்துள்ளனர்.

    எனவே, இந்த 713 பேரின் வக்கீல் பதிவை ரத்து செய்யும் விதமாக, அவர்களுக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் நோட்டீஸ் அனுப்பி, நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்வி சான்றிதழ்கள் இல்லாமல், வக்கீலாக பதிவு செய்த 42 பேர் குறித்து போலீசில் புகார் செய்து, குற்ற நடவடிக்கைகளையும் பார் கவுன்சில் எடுக்கலாம்.

    முறையாக கல்வி சான்றிதழ் இல்லாத, குற்றப்பின்னணி கொண்ட வக்கீல்களை பார் கவுன்சிலை விட்டு வெளியேற்றி, உண்மையான வக்கீல்களை கொண்டு, பார் கவுன்சிலுக்கு தேர்தல் நடத்த வேண்டும். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்துடன், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலின் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளின் பதவி காலம் முடிந்து விட்டது. மறுதேர்தல் நடத்தி, நிர்வாகிகள் தேர்வு செய்யும் வரை, பார் கவுன்சின் கவுரவ தலைவராக அட்வகேட் ஜெனரல் பதவி வகிப்பார். நிர்வாக குழு உள்ளிட்ட பல குழுக்கள் அமைக்கப்பட்டு, அந்த குழுக்கள் பார் கவுன்சிலின் அன்றாட பணிகளை மேற்கொள்கிறது. இந்த குழுக்களில் முன்னாள் நிர்வாகிகள் இடம் பெற்றுள்ளனர்.

    சுப்ரீம் கோர்ட்டு கடந்த மே மாதம் பிறப்பித்த தீர்ப்பில், பார் கவுன்சில் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள், இதுபோன்ற குழுக்களில் இடம் பெறக்கூடாது என்று கூறியுள்ளது. எனவே, தேர்தலில் போட்டியிட விரும்பும் நபர்கள், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் உள்ள குழுக்களில் இருந்து வெளியேற வேண்டும். இந்த குழுக்களுக்கு புதிய உறுப்பினர்களை, விதிகளின் படி பார் கவுன்சில் பிறப்பிக்க வேண்டும்.

    இவ்வாறு நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டார்.

    இந்த வழக்கு இன்று (வியாழக்கிழமை) மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
    Next Story
    ×