search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பா.ஜ.க.வினரை தாக்கினால் பதிலடி கொடுப்போம்: கரூர் கூட்டத்தில் தமிழிசை சவுந்திரராஜன் பேச்சு
    X

    பா.ஜ.க.வினரை தாக்கினால் பதிலடி கொடுப்போம்: கரூர் கூட்டத்தில் தமிழிசை சவுந்திரராஜன் பேச்சு

    தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவின் எந்த மூலையிலும் பா.ஜ.க.வினரை தாக்கினால் நாங்களும் பதிலடி கொடுப்போம் என்று கரூர் கூட்டத்தில் தமிழிசை சவுந்திரராஜன் கூறினார்.
    கரூர்:

    கரூரில் இன்று நடைபெற்ற பா.ஜ.க. மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் பேசியதாவது:-



    பா.ஜனதா செயற்குழு கூட்டம் நடைபெறும் அரங்கம் முன்பே பிரச்சினை செய்கிறார்கள் என்றால் விடுதலை சிறுத்தை கட்சியினருக்கு எவ்வளவு துணிச்சல் இருக்கும். நாங்கள் அமைதியாக இருப்போம் என்று நினைக்காதீர்கள். அரசியல் ரீதியாக தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளை பா.ஜனதா சந்தித்து வருகிறது. போட்டி கூட்டங்களையும் நடத்தி வருகிறது. தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவின் எந்த மூலையிலும் பா.ஜ.க.வினரை தாக்கினால் நாங்களும் பதிலடி கொடுப்போம்.

    கேரளாவில் அராஜக கம்யூனிஸ்டு கட்சியின் ஆட்சி நடக்கிறது. அங்கு ஒரு மோசமான சூழ்நிலையை ஆட்சியாளர்கள் ஏற்படுத்தியுள்ளனர். பா.ஜனதா தொண்டர்கள் தொடர்ந்து தாக்கப்பட்ட நிலையில், பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா, கடந்த 3-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை கேரளாவில் பாத யாத்திரை மேற்கொண்டார். தமிழகத்தில் இருந்து மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    என்னை பார்த்து சிலர் ஜெயலலிதா போல் இருக்கிறீர்கள் என்கிறார்கள். ஆனால் தமிழகத்திற்கு மட்டுமல்ல இந்தியாவிற்கே நல்ல திட்டங்களை கொண்டு வரும் பிரதமர் நரேந்திர மோடிதான் இந்தியாவின் தாயாக இருக்கிறார்.

    தமிழக அமைச்சர்கள் கூட மோடி இருக்கும் வரை எங்களுக்கு பயம் இல்லை என்கிறார்கள். 120 கோடி மக்களுக்கும் பாதுகாப்பு நரேந்திரமோடிதான். தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை கொண்டு வர பா.ஜனதா தயாராகி வருகிறது. அ.தி.மு.க.வுக்கு மாற்று தி.மு.க.தான் என்று நினைத்து கொண்டு மு.க.ஸ்டாலின் எழுச்சி பயணம் போவதாக கூறுகிறார். இந்த பயணம் நித்திரையாக இருக்கலாம். கனவுகளை உருவாக்கலாம். ஆனால் எந்த பயனும் அளிக்காது. மு.க.ஸ்டாலினின் முதல்வர் கனவு பலிக்காது.

    தமிழகத்தில் நிலவும் விவசாயிகள் பிரச்சினை, மணல் கொள்ளை உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தி.மு.க.தான் காரணம். இதனால் தி.மு.க.வை மாற்றாக மக்கள் ஏற்று கொள்ளமாட்டார்கள். தமிழகத்தில் காவி ஆட்சி மலரும். ஆவியை பார்த்து பயப்படுவது போல் இப்போது காவியை பார்த்து பயப்படுகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.


    Next Story
    ×