search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கந்து வட்டி கொடுமையால் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் 4 பேர் தீக்குளிப்பு: மனைவி - 2 குழந்தைகள் பலி
    X

    கந்து வட்டி கொடுமையால் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் 4 பேர் தீக்குளிப்பு: மனைவி - 2 குழந்தைகள் பலி

    கந்து வட்டி கொடுமையால், நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தீக்குளித்தனர். அவர்களில் மனைவி மற்றும் 2 குழந்தைகள் பலி ஆனார்கள். கணவரின் உயிர் ஊசலாடுகிறது.
    நெல்லை:

    நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்த போது இந்த பரிதாப சம்பவம் நிகழ்ந்தது.

    நெல்லை மாவட்டம் தென்காசி அருகே உள்ள காசிதர்மத்தை சேர்ந்த பலவேசம் என்பவரின் மகன் இசக்கிமுத்து (வயது 28). கூலித் தொழிலாளியான இவருடைய மனைவி பெயர் சுப்புலட்சுமி (26). இவர்களுக்கு மதி ஆருண்யா (4), அக்‌ஷயா என்கிற பரணிகா(1½) என்ற இரண்டு பெண் குழந்தைகள்.

    நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு மனு கொடுப்பதற்காக, இசக்கிமுத்து தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் அங்கு வந்தார். அவர் வைத்து இருந்த பையில் 5 லிட்டர் மண்எண்ணெய் கேனும், கோரிக்கை மனுவும் இருந்தது.



    கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள வளர்ச்சிமன்ற கூட்ட அரங்கு முன்பு இசக்கிமுத்து சோகமே உருவாக குடும்பத்துடன் நின்று கொண்டு இருந்தார். மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தின் போது வழக்கமாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். அதன்படி நேற்று நடந்த கூட்டத்தின்போதும் அங்கு போலீசார் பாதுகாப்புக்காக நின்று கொண்டு இருந்தனர்.

    அப்போது புதிய தமிழகம் கட்சியை சேர்ந்தவர்கள் கோஷம் போட்டு கொண்டு கலெக்டர் அலுவலகத்துக்குள் நுழைந்தனர். இதைப் பார்த்த போலீசார் கோஷம் போட்டுக்கொண்டு வந்தவர்களின் அருகில் சென்றனர்.

    போலீசார் அந்த இடத்தில் இருந்து சென்றவுடன், இசக்கிமுத்து தனது பையில் வைத்து இருந்த மண்எண்ணெய் கேனை திடீரென்று வெளியே எடுத்தார். தனது மனதை கல்லாக்கிக் கொண்ட அவர், கண் இமைக்கும் நேரத்தில் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளின் உடலில் மண்எண்ணெய்யை ஊற்றினார். தொடர்ந்து தனது உடலிலும் மண்எண்ணெய் ஊற்றிக்கொண்டார்.

    பின்னர் தான் வைத்து இருந்த தீப்பெட்டியை எடுத்து தீக்குச்சியை உரசி தனது மனைவி மற்றும் குழந்தைகளின் மீது தீயை பற்ற வைத்து விட்டு தனது உடலின் மீதும் தீயை வைத்துக் கொண்டார். இதனால் அனைவரின் உடலிலும் தீ பற்றி எரிந்தது. தீயின் வேதனை தாங்காமல் கணவன், மனைவியும் 2 குழந்தைகளும் அலறி துடித்தனர்.



    தீ மள மளவென எரிந்ததால் சின்னஞ்சிறு குழந்தைகள் இரண்டும் ‘அம்மா’ ‘அம்மா’ என்று அலறியபடி அங்கும் இங்குமாக ஓடின.

    கண்இமைக்கும் நேரத்தில் நடந்து விட்ட இந்த கோர காட்சியை பார்த்து அங்கு இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக, அவர்கள் 4 பேர் மீதும் கொழுந்து விட்டு எரிந்து கொண்டு இருந்த தீயை அணைக்க முயற்சி செய்தனர். இதற்கிடையே, அங்கு பாதுகாப்புக்கு நின்று கொண்டு இருந்த போலீசாரும் ஓடி வந்து தீயை அணைக்க முயன்றனர்.

    4 பேர் மீதும் மண்ணை அள்ளி வீசி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஒரு குழந்தையின் மீது தண்ணீரையும் ஊற்றினார்கள். நீண்ட போராட்டத்துக்கு பின் தீ அணைக்கப்பட்டது.

    தீயில் கருகிய 4 பேரையும் போலீசார் உடனடியாக ‘ஜீப்’பில் ஏற்றி பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆபத்தான நிலையில் சேர்க்கப்பட்ட அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் நெல்லை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி, ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்று தீயில் கருகியவர்களை பார்த்தார்.

    கலெக்டருடன் நெல்லை மூன்றாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு நீதிபதி கார்த்திகேயனும் சென்றார். அவர் இசக்கிமுத்து மற்றும் அவரது மனைவி சுப்புலட்சுமி ஆகியோரிடம் மரண வாக்குமூலம் வாங்கினார்.

    இந்தநிலையில் சிகிச்சை பலன் இன்றி குழந்தை மதி ஆருண்யா மாலை 3.50 மணிக்கும், சுப்புலட்சுமி 4 மணிக்கும், குழந்தை அக்‌ஷயா என்கிற பரணிகா 5 மணிக்கும் அடுத்தடுத்து பரிதாபமாக இறந்தனர். அவர்களுடைய உடல்களை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர்.

    இசக்கிமுத்துவின் தம்பி கோபி துக்கம் தாங்காமல் சுவற்றில் முட்டிக்கொண்டு அழுததில் அவருக்கு தலையில் ரத்தக்காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

    இசக்கிமுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இசக்கிமுத்து குடும்பத்துடன் தீக்குளித்ததற்கான காரணம் குறித்து அவரது தம்பி கோபியிடம் மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி விசாரணை நடத்தினார்.

    அப்போது, கந்து வட்டி கொடுமையால் தனது அண்ணன் குடும்பத்துடன் தீக்குளித்ததாக கோபி தெரிவித்தார். தங்கள் ஊரைச் சேர்ந்த ஒரு பெண்ணிடம் தனது அண்ணன் இசக்கிமுத்து 2 ஆண்டுகளுக்கு முன் கந்து வட்டிக்கு ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் வாங்கி இருந்ததாகவும், இதுவரை அவர் ரூ.2 லட்சத்து 34 ஆயிரம் திருப்பி செலுத்தியுள்ள போதிலும், பணம் கொடுத்தவர் தரப்பில் தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டி வந்ததாகவும் அப்போது கோபி கூறினார்.

    இதுதொடர்பாக போலீசில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் ஏற்கனவே 5 முறை மனு கொடுத்து இருப்பதாகவும் இப்போது 6-வது முறையாக மனு கொடுப்பதற்காக வந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

    கலெக்டர் அலுவலகத்துக்கு தனது அண்ணன் இசக்கிமுத்து கையில் மண்எண்ணெய் கேனையும் எடுத்து வந்ததால், ஏதேனும் விபரீத முடிவை எடுத்து விடக்கூடாது என்பதற்காக தான் உடன் வந்ததாகவும், என்றாலும் சம்பவம் நடந்தபோது தான் அந்த இடத்தில் இல்லாததால் அவர் குடும்பத்துடன் தீக்குளித்ததை தன்னால் தடுக்க முடியவில்லை என்றும் கூறி விட்டு கோபி கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

    இசக்கிமுத்து குடும்பத்தினரை தற்கொலைக்கு தூண்டியதாக அவருக்கு வட்டிக்கு பணம் கொடுத்த காசிதர்மம் எம்.ஜி.ஆர், நகரை சேர்ந்த முத்துலட்சுமி, அவரது கணவர் தளவாய்ராஜ், மாமனார் காளி ஆகியோர் மீது பாளையங்கோட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கந்து வட்டி கொடுமையால், நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தொழிலாளி குடும்பத்துடன் தீக்குளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 
    Next Story
    ×