search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெங்கு காய்ச்சலுக்கு மேலும் ஒரு ஈரோடு சிறுமி பலி
    X

    டெங்கு காய்ச்சலுக்கு மேலும் ஒரு ஈரோடு சிறுமி பலி

    ஈரோடு மாவட்டத்தில் டெங்கு நோய் தடுப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. எனினும் டெங்கு காய்ச்சலுக்கு மேலும் ஒரு ஈரோடு சிறுமி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் டெங்கு நோய் தடுப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. எனினும் டெங்கு காய்ச்சலில் பலர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். உயிர் பலியும் ஏற்பட்டு வருகிறது.

    ஈரோடு அடுத்த வெள்ளோட்டை சேர்ந்த 6 வயது சிறுமி பூஜா டெங்கு நோய்க்கு நேற்று முன்தினம் பலியானார்.

    இந்த நிலையில் ஈரோட்டை சேர்ந்த மேலும் ஒரு சிறுமி டெங்கு நோய்க்கு பலியாகி உள்ளார்.

    ஈரோடு கருங்கல்பாளையம் கே.எஸ்.நகர் 6-வது வீதியை சேர்ந்தவர் உதயகுமார் (வயது 37). தனியார் பெட்ரோல் பங்கில் கேஷியராக பணி புரிகிறார். இவரது மனைவி திவ்யபாரதி (30). அஸ்மிதா (7) என்ற மகளும், சரவணன் (4) என்ற மகனும் உள்ளனர்.

    சிறுமி அஸ்மிதா 2-ம் வகுப்பு படித்து வந்தாள். கடந்த ஒரு வாரத்துக்கு முன் அவளுக்கு காய்ச்சல் ஏற்பட்டது. ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டாள்.

    பிறகு மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அஸ்மிதாவுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரியவந்தது.

    இதையொட்டி அவளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. 9 யூனிட் ரத்தம் செலுத்தப்பட்டது.

    எனினும் சிகிச்சை பலன் அளிக்காமல் சிறுமி அஸ்மிதா நேற்று இரவு பரிதாபமாக இறந்தாள்.

    டெங்கு நோய்க்கு பலியான சிறுமி அஸ்மிதா வீட்டுக்கு இன்று ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான முத்துசாமி சென்றார்.

    அங்கு அஸ்மிதா பெற்றோருக்கும், உறவினர்களுக்கும் அவர் ஆறுதல் கூறினார்.
    Next Story
    ×