search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தொகுதிக்கு திட்டங்கள் வரவிடாமல் அமைச்சர் எம்.சி.சம்பத் தடுக்கிறார்: சத்யா பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ.
    X

    தொகுதிக்கு திட்டங்கள் வரவிடாமல் அமைச்சர் எம்.சி.சம்பத் தடுக்கிறார்: சத்யா பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ.

    பண்ருட்டி தொகுதிக்கு திட்டங்கள் வரவிடாமல் அமைச்சர் எம்.சி.சம்பத் தடுக்கிறார் என சத்யா பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. குற்றம் சாட்டியுள்ளார்.
    பண்ருட்டி:

    கடலூரில் வெள்ளச் சேதம் ஏற்படாமல் தடுக்க அமைச்சர் எம்.சி.சம்பத் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கடலூர் மாவட்ட அ.தி.மு.க. எம்.பி.க்கள்- எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர்.

    இதுகுறித்து பண்ருட்டி தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. சத்யா பன்னீர்செல்வத்திடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    பண்ருட்டி தொகுதியில் நீண்ட நெடுங்காலமாக கலை மற்றும் அறிவியியல்கல்லூரி அமைக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர். இதற்கான தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த கல்வி ஆண்டில் அதற்கான அறிவிப்பு வர இருந்தது. இந்த நிலையில் உள்ளூர் அமைச்சராக இருக்கும் எம்.சி.சம்பத் பண்ருட்டி தொகுதிக்குகல்லூரி வரவிடாமல் தடுத்து விட்டார்.

    இதே போல பண்ருட்டி தொகுதியில் பெருகி வரும் போக்குவரத்தை சரி செய்ய கண்டரக்கோட்டை பெண்ணையாற்றங் கரையில் இருந்து கடலூர் வரை உள்ள கஸ்டம்ஸ் சாலையை அமைக்க ரூ.200 கோடி கேட்டு பெறப்பட்டது. அதற்கு இது நாள் வரைமுறையான டெண்டர் வைக்க விடாமல் அமைச்சர் எம்.சி.சம்பத் தடுத்து வருகிறார்.

    இதேபோல் பண்ருட்டி சென்னை சாலையில் நடைபெற்று வரும் ரெயில்வே மேம்பால பணியிணை அதிகாரிகளிடம் பேசிவேகமாக முடுக்கி விடாமல் தொகுதி எம்.எல்.ஏ.வுக்கு தொகுதி மக்களிடம் கெட்ட பெயர் வர வேண்டும் என்பதற்காக முடக்கி போட்டுள்ளார்.

    மேலும் 66 கிராம மக்களின் வாழ்வாதாரமாக திகழும் மலட்டாறை தூர்வார தொகுதி சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் நாங்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு தராமல் தடுத்து வருகிறார்.

    தொடர்ந்து இது போன்று பல நல்ல திட்டப்பணிகள் தொகுதிக்கு கிடைக்கவிடாமல் செய்து வருகிறார்.

    மாவட்டம் முழுவதும் உள்ள அ.தி.மு.க. எம்.எல்.ஏ க்கள், எம்.பி.க்கள் இவரது செயல்பாட்டால் கவலையடைந்துள்ளனர்.

    அரசு அதிகாரிகளை சுதந்திரமாக செயல்பட விடாமல் தடுத்து வருகிறார். அமைச்சரின் போக்கு தொகுதி மக்களிடம் கட்சிக்கும், ஆட்சிக்கும் கெட்ட பெயரை ஏற்படுத்தும் வகையில் இருந்து வருகிறது.

    எனவே இவரது செயலை கண்டித்து கடலூர் மாவட்டத்தில் உள்ள எம்.எல்.ஏ.மற்றும் எம்.பி.க்கள் இவரது நிகழ்ச்சிகளை புறக்கணித்து வருகிறோம். சட்டமன்ற தொகுதியில் நடைபெறும் மக்கள் நல திட்டங்களை செயல்படுத்த விடாமல் தடுக்கும் அமைச்சர் எம்.சி.சம்பத்தின் நடவடிக்கைகளை கண்டித்து தொடர்ந்து அமைச்சரின் நிகழ்ச்சிகளை புறக்கணிக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×