search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தொழிற்சாலையில் வி‌ஷவாயு தாக்கி பலியான 2 பேர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரண உதவி
    X

    தொழிற்சாலையில் வி‌ஷவாயு தாக்கி பலியான 2 பேர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரண உதவி

    வி‌ஷவாயு தாக்கி பலியான 2 பேர் குடும்பத்துக்கு தொழிற்சாலை நிர்வாகத்தினர் தலா ரூ.10 லட்சம் நிவாரண தொகை வழங்க வேண்டும் என்று தேசிய ஆதி திராவிட ஆணைய துணை சேர்மன், போலீஸ் உதவி கமி‌ஷனர் உத்தரவிட்டனர்.
    பூந்தமல்லி:

    போரூரை அடுத்த கொளப்பாக்கத்தில் சிமெண்டு ஓடுகள் தயாரிப்புக்கான மூலப் பொருட்களை தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை உள்ளது. இங்கு வடமாநிலத்தை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்கி வேலை பார்த்து வருகிறார்கள்.

    நேற்று முன்தினம் அங்குள்ள கழிவுநீர் தொட்டியை ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஊழியர்கள் சந்திர துவாஜ பிஜோய் (22), சுதர்சன் பிரதான் ஆகியோர் சுத்தம் செய்தனர். அப்போது வி‌ஷவாயு தாக்கி இருவரும் இறந்தனர்.

    இந்த நிலையில், தொழிற்சாலையில் தேசிய ஆதி திராவிட ஆணைய துணை சேர்மன் முருகன், சென்னை இயக்குனர் மதியழகன், தொழிலக அதிகாரி லிஸ்டர், போலீஸ் உதவி கமி‌ஷனர் கண்ணன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

    அப்போது தொழிற்சாலையில் தொழிலாளர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் இல்லை என்பதும் தெரிந்தது.

    இதையடுத்து வி‌ஷவாயு தாக்கி பலியான 2 பேர் குடும்பத்துக்கு தொழிற்சாலை நிர்வாகத்தினர் உடனடியாக தலா ரூ.10 லட்சம் நிவாரண தொகை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

    மேலும் தொழிற்சாலை உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை செய்தனர். இது தொடர்பான ஆய்வு அறிக்கையை மாவட்ட கலெக்டர் பொன்னையாவுக்கு சமர்ப்பிக்க உள்ளனர்.
    Next Story
    ×