search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காவியா
    X
    காவியா

    பேரணாம்பட்டு அருகே டெங்கு காய்ச்சலுக்கு சிறுமி உள்பட 2 பேர் பலி

    பேரணாம்பட்டு அருகே டெங்கு காய்ச்சலுக்கு சிறுமி உள்பட 2 பேர் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
    பேரணாம்பட்டு:

    வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு ரஷீதாபாத் பகுதியை சேர்ந்தவர் நஷீர். ஓட்டல் தொழிலாளி. இவரது மனைவி கவுசர் (வயது 34). இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். இந்த நிலையில், கடந்த 4 நாட்கள் முன்பு கவுசருக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது.

    பேரணாம்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் காய்ச்சல் குறையாமல் நெருப்பாய் கொதித்தது. அவருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டது. மேல் சிகிச்சைக்காக பேரணாம் பட்டு அரசு ஆஸ்பத்திரியில் இருந்து வேலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்சில் கொண்டு வரும் வழியில் கவுசர் பரிதாபமாக இறந்தார்.

    மற்றொரு சம்பவம்...

    பேரணாம்பட்டு அருகே கோக்கலூரை சேர்ந்தவர் குமரேசன். பெங்களூருவில் எலக்ட்ரீசியனாக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி மீனாட்சி. இவர் களுக்கு 3½ வயதில் காவியா என்ற மகள் உள்பட 2 மகள்கள் இருந்தனர்.

    இந்த நிலையில், சிறுமி காவியாவுக்கு காய்ச்சல் ஏற்பட்டு உடல் நிலை கடும் பாதிப்படைந்தது. பேரணாம் பட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட போது, டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

    இதையடுத்து, நேற்று மாலை 3 மணிக்கு வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் காவியா அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பலனின்றி மாலை 6 மணியளவில் அவர் உயிரிழந்தார்.

    பேரணாம்பட்டு நகர் முழுவதும், நகராட்சி கமி‌ஷனர் ஸ்டான்லி பாபு தலைமையில் துப்புரவு பணியாளர்கள், பொது சுகாதார பணியாளர்கள் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வீடு, வீடாக சென்று அபேட் கரைசலை தெளித்து, பொது மக்களுக்கு ஆலோசனை வழங்கி வருகிறார்கள்.

    ஆனாலும், ஒரே நாளில் டெங்கு காய்ச்சலுக்கு சிறுமி உள்பட 2 பேர் பலியான சம்பவம், பேரணாம்பட்டு மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.



    Next Story
    ×