search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டாக்டர்களின் சீட்டு இல்லாமல் மாத்திரைகள் கொடுக்கும் கடைக்காரர்கள் மீது நடவடிக்கை: கலெக்டர் எச்சரிக்கை
    X

    டாக்டர்களின் சீட்டு இல்லாமல் மாத்திரைகள் கொடுக்கும் கடைக்காரர்கள் மீது நடவடிக்கை: கலெக்டர் எச்சரிக்கை

    டாக்டர்களின் பரிந்துரை இல்லாமல் மருந்து மற்றும் மாத்திரைகள் கொடுக்கும் கடைக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் சுந்தரவல்லி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டை நகர எல்லையில் பாயும் ஆரணி ஆற்றை மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் நகர மையப் பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்கு சென்று குப்பைகளை ஊழியர்கள் தினந்தோறும் அள்ளுகிறார்களா? குழாய்களில் சுத்தமான குடிநீர் வினியோகிக்கப்படுகிறாதா என்று கேட்டு தெரிந்து கொண்டார்.

    மேலும் குடிநீர் தரத்தை அவர் பரிசோதனை செய்தார். அப்போது குப்பைகளை கண்ட இடங்களில் போட்டால் ரூ. 500 அபராதம் விதிதக்கப்படும் என்று கலெக்டர் எச்சரித்தார்.

    பின்னர் கலெக்டர் சுந்தரவல்லி நிருபர்களிடம் கூறியதாவது:-

    டெங்கு கொசுவை ஒழிக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் காரணமாக டெங்கு இறப்பு சம்பவங்கள் குறைந்துள்ளன.


    மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 23 பேர் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுகின்றனர். இதில் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் 19 பேர், கும்மிடிபூண்டியில் 4 பேர் உள்ளனர். மேலும் 225 பேர் சாதாரண காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆஸ்பத்திரிகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் 3 மாதங்களுக்கு தேவையான மருந்து மாத்திரைகள் தேவையான அளவுக்கு இருப்பில் உள்ளன.

    காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற வேண்டும். மருந்து கடைகளில் மருந்து மாத்திரைகளை வாங்கி உண்ண வேண்டாம்.

    டாக்டர்களின் சீட்டு இல்லாமல் மருந்து மாத்திரைகளை வழங்கும் மருந்து கடைகளின் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    போலி டாக்டர்கள் குறித்து மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளில் சரிவர சிகிச்சை அளிக்காவிட்டால் 1077 என்ற எண்ணுக்கு இலவசமாக தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.

    இவ்வாறு கலெக்டர் சுந்தரவல்லி கூறினார்.

    முன்னதாக சுருட்ப்பள்ளியில் ஆரணி ஆற்று குறுக்கே கட்டபட்டுள்ள தடுப்பு அணையை கலெக்டர் சுந்தரவல்லி பார்வையிட்டார்.

    இதைத் தொடர்ந்து சத்தியவேடு சாலையில் உள்ள ஆரணி ஆற்று பாசன கால்வாயை பார்வையிட்டார். அங்கு கோழி இறைச்சிகளின் கழிவுகள் போடப்பட்டிருந்ததை அவர் கண்டார். உடனே கடை உரிமையாளர்களை சந்தித்து இறைச்சிகளை கண்ட இடத்தில் போட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்.

    பின்னர் ஊத்துக்கோட்டை ஏரியை பார்வையிட்ட கலெக்டர் சுந்தரவல்லி ஏரியில் அனுமதியின்றி போடப்பட்டிருந்த மீன் வளர்ப்பு வலைகளை அகற்றுமாறு பொதுப் பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    ஆய்வின் போது ஊத்துக்கோட்டை தாசில்தார் கிருபாஉஷா, துணை தாசில்தார் கதிர்வேலு, வருவாய் அலுவலர் ராஜேஷ், பேரூராட்சி செயல் அலுவலர் தன்ராஜ், பொதுப் பணித்தறை இளநிலை பொறியாளர் புருத்வி பாலசுந்தரம் ஆகியோர் உடன் இருந்தனர்.


    கலெக்டர் சுந்தரவல்லி இன்று திருமுல்லைவாயலில் உள்ள வைஷ்ணவி நகர், தேவி நகர் ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். வீடு வீடாக சென்று பார்வையிட்ட அவர், கொசுக்கள் உற்பத்தி ஆகாத வகையில் சுத்தம் செய்து வைத்து இருக்க வேண்டும். நாளை விடுமுறை நாள் என்பதால் வீட்டில் உள்ள அனைவரும் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

    அப்போது 2 வீடுகளில் கொசு உற்பத்தியாகும் வகையில் தண்ணீர் தொட்டி இருந்ததால் அபராதம் விதித்தார்.

    Next Story
    ×