search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆசிதா மோகன்
    X
    ஆசிதா மோகன்

    கோவை உளவுத்துறை அதிகாரி என கூறி விமான நிலைய அதிகாரியை திருமணம் செய்த பெண்

    கோவை உளவுத்துறை அதிகாரி என கூறி விமான நிலைய அதிகாரியை திருமணம் செய்த பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கொழிஞ்சாம்பாறை:

    கேரள மாநிலம் கோட்டயம் குமரன் நகரை சேர்ந்தவர் ஆசிதா மோகன் (வயது 24). இவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பாலக்காடு நகரில் உள்ள வி.ஐ.பி.க்கள் வசிக்கும் நகரில் குடியேறினார். அப்போது மற்றவர்களிடம் தான் கோவை உளவுத்துறை போலீசில் முக்கிய அதிகாரியாக உள்ளதாக கூறினார்.

    அவரது நடை உடை, பாவனை மற்றும் ஸ்டைலாக இங்கிலீஸ் பேசியதை பார்த்த அங்கிருந்தவர்கள் அவரை உளவுத்துறை போலீஸ் அதிகாரி என்று நம்பினர். தினமும் காலையில் வீட்டில் இருந்து சொகுசு காரில் புறப்படும் ஆசிதா மோகன் இரவு வீடு திரும்பினார். இந்தநிலையில் கோவை உளவுத்துறையில் நானே முக்கிய அதிகாரி. வேலைக்கு ஆள் எடுக்கும்போது என் அனுமதியில்லாமல் யாரையும் பணிக்கு அமர்த்த முடியாது என்று கூறினார். மேலும் கோவை உளவுத்துறையில் வேலைக்கு ஆள் தேவைப்படுகிறது. வேலை வேண்டுமானால் ரூ.5 லட்சம் பணம் கொடுத்தால் வேலை ஆணையை உடனே கொடுத்து விடுவேன் என்று கூறினார்.

    இதனை நம்பிய 3 பேர் ரூ.3 லட்சம், ரூ.4 லட்சம், ரூ.5 லட்சம் என்று கொடுத்தனர். பணம் கொடுத்தவர்கள் வேலை கிடைத்துவிடும் என்று நம்பியிருந்தனர். ஆனால் நீண்ட நாட்கள் ஆகியும் ஆசிதா மோகன் வேலை வாங்கித்தரவில்லை. இதனால் பணம் கொடுத்தவர்கள் வேலை என்ன ஆச்சு? என்று நச்சரிக்க ஆரம்பித்தனர். இந்நிலையில் தான் கோவையில் இருந்து பொள்ளாச்சிக்கு பணி உயர்வு பெற்று செல்கிறேன். அங்கு சென்ற பின்னர் உங்களுக்கான வேலையை உடனே ஏற்பாடு செய்கிறேன் என்று கூறிவிட்டு அங்கிருந்து வீட்டை காலி செய்தார்.

    அதன்பின்னர் பணம் கொடுத்தவர்கள் ஆசிதா மோகனின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டபோது அவர் போனை எடுத்து பதில் கூறவில்லை. இதில் சந்தேகம் அடைந்த பணம் கொடுத்தவர்கள் பல முறை முயன்று தொடர்பு கொண்டனர். வேறு செல்போன் எண் மூலம் ஒருவர் நேற்று முன்தினம் தனக்கு தெரிந்த மேலும் ஒரு நபருக்கு வேலை வேண்டும். அதனால் பணம் உங்களிடம் கொடுக்க எங்கு வரவேண்டும் என்று ஆசிதா மோகனிடம் கேட்டனர். பணம் ஆசை கிளம்பியதும் ஆசிதா மோகன் வைக்கம் நகரில் உள்ள பஸ் நிலையத்திற்கு வந்து விடுங்கள். அங்கு வைத்து பேசிக்கொள்ளலாம் என்று கூறினார். அதன்படி பணம் கொடுத்த 3 பேரும் வைக்கம் நகர் பஸ் நிலையத்திற்கு வந்தனர். அங்கு ஆசிதா மோகன் தயாராக இருந்தார். வேலைக்கு பணம் கொடுக்க வரவில்லை. நாங்கள் கொடுத்த பணத்தை திருப்பி கேட்கவே வந்துள்ளோம் என்று கூறினர். ஏமாற்றமும் அதிர்ச்சியும் அடைந்த ஆசிதா மோகன் ஆத்திரமடைந்தார். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதனையடுத்து ஆசிதா மோகனை அவர்கள் வைக்கம் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பாலக்காடு நகரில் உள்ள விமான நிலைய அதிகாரி மோகன் என்பவரை கோவை உளவுத்துறை போலீஸ் அதிகாரி என்று கூறி திருமணம் செய்ததும் தெரியவந்தது. மோகன் தற்போது வெளிநாட்டில் உள்ளார்.

    இது குறித்து ஆசிதா மோகனின் மாமனார், மாமியாருக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். அவர்கள் போலீஸ் நிலையத்திற்கு பதறியடித்து ஓடிவந்தனர். தனது மருமகள் உளவுத்துறை போலீஸ் அதிகாரி என்று தான் தங்கள் மகனை திருமணம் செய்தார். 3 வருடங்கள் எனது மகனையும், எங்களையும் ஏமாற்றியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று கூறி அவர்களும் போலீசில் புகார் செய்தனர்.

    5 பேரின் புகாரையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ஆசிதா மோகனை கைது செய்தனர். மேலும் ஆசிதா மோகன் பல பேரை ஏமாற்றி ரூ.50 லட்சம் மோசடி செய்திருப்பதும் தெரியவந்தது. தொடர்ந்து அவர் மீது புகார்கள் குவிந்து வருகிறது. வெளிநாட்டில் உள்ள ஆசிதாவின் கணவர் மோகன் இது குறித்து தகவல் அறிந்ததும் கேரளா புறப்பட்டுள்ளார்.
    Next Story
    ×