search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரச்சலூரில் பிளஸ்-2 மாணவி தற்கொலை: உறவினர்கள் மறியல்
    X

    அரச்சலூரில் பிளஸ்-2 மாணவி தற்கொலை: உறவினர்கள் மறியல்

    அரச்சலூரில் ஆசிரியை கண்டித்ததால் பிளஸ்-2 மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    அரச்சலூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள கொத்தூரை சேர்ந்தவர் சேகர். இவரது மகள் தேவயானி (வயது 17).

    இவர் அரச்சலூர் கோபாலி பாறை என்ற இடத்தில் உள்ள தனது தாத்தா ராஜூ என்பவரது வீட்டில் தங்கியிருந்து அரச்சலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

    கடந்த 9-ந் தேதி தேவயானி வாந்தி, வயிற்றுப் போக்கால் அவதிப்பட்டார். எனவே அவரை சிகிச்சைக்காக நத்தக்கடையூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சையில் இருந்த போது தன்னை வேதியியல் ஆசிரியை செல்வலட்சுமி தன்னை கண்டித்து தாக்கியதாகவும், இதனால் மனம் உடைந்து கடந்த 8-ந் தேதி எலி மருந்து (வி‌ஷம்) குடித்ததாகவும் தேவயானி கூறினார்.

    அங்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த தேவயானி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து அரச்சலூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானபிரகாசம் விசாரணை நடத்தினார்.

    இந்த நிலையில் ஆசிரியை செல்வலட்சுமி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மாணவி தேவயானியை தற்கொலைக்கு தூண்டியதாக (305-வது பிரிவு) வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதைத் தொடர்ந்து ஆசிரியை செல்வலட்சுமி தலைமறைவானார்.

    இந்த நிலையில் ஆசிரியை செல்வலட்சுமியை கைது செய்யக்கோரி மாணவி தேவயானியின் உறவினர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சுமார் 50-க்கும் மேற்பட்டவர்கள் அரச்சலூர் பள்ளி முன்பு திரண்டனர். அவர்கள் ஈரோடு-காங்கயம் ரோட்டில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    தகவல் கிடைத்ததும் ஆர்.டி.ஓ. நர்மதாதேவி, பெருந்துறை போலீஸ் டி. எஸ்.பி. முருகன், அரச்சலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞான பிரகாஷ், சென்னிமலை போலீஸ் இன்ஸ் பெக்டர் வெங்கடாசலம் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

    போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆசிரியையை கைது செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.
    Next Story
    ×