search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னையில் இருந்து தீபாவளிக்காக 5½ லட்சம் பேர் வெளியூர் பயணம்
    X

    சென்னையில் இருந்து தீபாவளிக்காக 5½ லட்சம் பேர் வெளியூர் பயணம்

    தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் செல்வதற்காக சென்னையில் இருந்து இயக்கப்பட்ட பஸ்கள் மூலமாக 5 லட்சத்து 52 ஆயிரத்து 624 பயணிகள் பயணம் செய்தனர்.
    சென்னை:

    தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் செல்வதற்காக தமிழக அரசு சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. கடந்த 15, 16 மற்றும் 17-ந்தேதிகளில் சென்னையில் இருந்து 10,993 பஸ்கள் விடப்பட்டன.

    கோயம்பேடு, அண்ணா நகர், சைதாப்பேட்டை, தாம்பரம் சானடோரியம், பூந்தமல்லி ஆகிய இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் சென்றன.

    சென்னையில் இருந்து இயக்கப்பட்ட பஸ்கள் மூலமாக 5 லட்சத்து 52 ஆயிரத்து 624 பயணிகள் பயணம் செய்தனர். இதில் சென்னையில் இருந்து 85,813 பேர் முன்பதிவு செய்து பயணம் செய்துள்ளனர். தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 201 பயணிகள் முன்பதிவு செய்தனர்.

    தீபாவளி பஸ்கள் இயக்கியதன் மூலம் ரூ.5 கோடியே 1 லட்சத்து 43 ஆயிரம் வருமானம் கிடைத்துள்ளது. போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக 5 இடங்களில் இருந்து பஸ்கள் இயக்கப்பட்டதால் மக்கள் எளிதாக பயணம் செய்ய முடிந்தது. கோயம்பேடு பஸ்நிலையத்தில் நேற்று முன்தினம் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் வாகனங்கள் சென்றது.

    நெரிசல் ஏற்படக்கூடிய நகரின் முக்கிய பகுதியில் எவ்வித தடங்கலும் இன்றி வாகனங்கள் சென்றது.

    அனைத்து சிக்னல் பகுதியிலும் போலீசார் நின்று போக்குவரத்தை ஒழுங்கு செய்தனர். பெரும்பாலான சாலைகளில் வாகனங்கள் நெரிசல் இல்லாமல் சென்றதால் போலீசுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

    கோயம்பேடு, மதுரவாயல், பெருங்களத்தூர், கிண்டி, திருவான்மியூர் உள்ளிட்ட எந்த பகுதியிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.

    வழக்கமாக தீபாவளி நேரத்தில் மழை பெய்யும். அதனால் போக்குவரத்து பாதிக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு தீபாவளி நாளிலும், முந்தைய நாளிலும் மழை இல்லாததால் வாகன நெரிசல் இல்லாமல் கடைசி நேரத்தில் ஜவுளி, பட்டாசு, இனிப்பு வகைகளை வாங்கி சென்றனர்.

    தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் நகரத்தில் போக்குவரத்தை முறைப்படுத்த எடுத்த நடவடிக்கை கடந்த ஆண்டை காட்டிலும் இந்த வருடம் சிறப்பாக இருந்தது. அதற்கு மழை இல்லாதது ஒரு முக்கிய காரணமாகும்.

    வெளியூர் செல்லக்கூடிய எல்லா பஸ்களும் சுங்க சாவடி, நெரிசல் இல்லாமல் இருந்ததால் குறிப்பிட்ட நேரத்துக்குள் செல்ல முடிந்தது.

    Next Story
    ×