search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தஞ்சையில் கலெக்டர் அதிரடி ஆய்வு: கடைகள் - வீடுகள், நூலகத்துக்கு அபராதம்
    X

    தஞ்சையில் கலெக்டர் அதிரடி ஆய்வு: கடைகள் - வீடுகள், நூலகத்துக்கு அபராதம்

    தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு இடங்களுக்கு டெங்கு குறித்து ஆய்வு செய்த கலெக்டர் சுகாதாரமற்ற நிலையில் இருந்த கடைகள், வீடுகள், நூலகத்துக்கு அபராதம் விதித்தார்.
    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தவும், டெங்கு கொசுவை அழிக்கும் வகையிலும் கலெக்டர் அண்ணாதுரை தமிழக அரசு உத்தரவின் படி தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.

    இதைத் தொடர்ந்து கடந்த 14-ந் தேதி முதல் தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு இடங்களுக்கு கலெக்டர் சென்று டெங்கு குறித்து ஆய்வு செய்து வருகிறார். நீண்ட நாட்களாக டிரம்களில் வைத்திருந்த தண்ணீர் மற்றும் கடைகள், வீடுகளை சுற்றி இருக்கும் கழிவு பொருட்களை அப்புறப்படுத்த அந்தந்த உரிமையாளருக்கு உத்தரவிட்டும், அவர்களுக்கு அபராதமும் விதித்து தீவிர செயலில் ஈடுபட்டு வருகிறார்.

    இந்த நிலையில் இன்று கலெக்டர் அண்ணாதுரை தஞ்சை ராசா மிராசுதார் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று ஆய்வு செய்தார். பின்னர் அங்கு டெங்கு காய்ச்சலால் அனுமதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அவர்கள் எந்த எந்த பகுதிகளில் இருந்து வந்துள்ளனர் என்று கேட்டறிந்து அந்த இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.

    பின்னர் மாவட்ட நூலகம், மாதாக்கோட்டை போன்ற பகுதிகளுக்கு சென்று டெங்கு குறித்து ஆய்வு மேற்கொண்டார். பின்னர் மாவட்ட நூலகத்தில் ஆய்வு செய்த கலெக்டர் அங்கு சுகாதாரமற்ற நிலையில் பொருட்கள் இருப்பதையும், அங்கு டெங்கு கொசு உற்பத்தி யாகும் சூழ்நிலை இருப்பதும் கண்டறிந்தார். இதனால் நூலகத்திற்கு ரூ.1000 அபராதம் விதித்தார். சுகாதாரமற்ற நிலையில் நூலகத்தை வைத்திருப்பதற்காக துறைரீதியாக விளக்கம் குறித்து நோட்டீஸ் அனுப்ப அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    இதைத் தொடர்ந்து பழைய ராமேஸ்வரம் ரோடு பகுதியில் ஆய்வு செய்தார். அப்போது பசுபதி என்பவர் வீட்டில் பழைய டயர்கள் இருப்பது கண்டறியப்பட்டது. அதனால் அவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தார். அதன் பின்னர் அந்த பகுதியில் உள்ள திர்காஸ் நேத்தா என்பவர் கிரானைட் கற்கள் விற்பனை செய்து வருகிறார். அவரது வீட்டில் ஆய்வு செய்த போது கொசு புழுக்கள் இருப்பது தெரியவந்தது. உடனே அவரது கடைக்கு ரூ.5 ஆயிரம் அபராதமும், அவரது வீட்டிற்கு ரூ.5 ஆயிரமும் விதித்து உத்தரவிட்டார். அந்த பகுதியில் உள்ள பழைய பஞ்சர் கடையில் ஆய்வு செய்த போது டயர்களில் தண்ணீர் தேங்கி இருப்பது தெரியவந்தது. அதன் உரிமையாளருக்கு ரூ.500 அபராதம் விதித்தார்.

    பின்னர் ரெட்டி பாளையம் சென்ற கலெக்டர் அங்கு புதுத்தெரு பகுதியில் ஆய்வு செய்தார். அங்கு 2 வீடுகளுக்கு ரூ.100 அபராதம் விதித்து உத்தரவிட்டார். பின்னர் ரெட்டி பாளையம் மேட்டு தெருவில் உள்ள மருத்துவ முகாமிற்கு சென்று பொது மக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினார். இது தொடர்பாக கலெக்டர் அண்ணாதுரை கூறும் போது, தஞ்சை மாவட்டத்தில் 34 பேர் டெங்கு காய்ச்சல் பாதிப்பில் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    டெங்கு குறித்து தினமும் ஆய்வு மேற்கொண்டுள்ளோம். இன்று மட்டும் இதுவரை ரூ.21 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் டெங்கு கொசுவை தடுக்கும் வகையில் சுற்றுப்புறத்தை சுகாதாரமாக வைத்திருக்க உதவ வேண்டும் என்றார்.

    Next Story
    ×