search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிலவேம்பு கசாயம் பற்றி வதந்தி பரப்பினால் நடவடிக்கை: அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை
    X

    நிலவேம்பு கசாயம் பற்றி வதந்தி பரப்பினால் நடவடிக்கை: அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை

    நிலவேம்பு கசாயம் குறித்து தவறான தகவல் பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    சென்னை:

    தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி நூற்றுக்கணக்கானவர்கள் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டனர். 100 பேர் வரை பலியாகி இருப்பதாக அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டின. டெங்குவை கட்டுப்படுத்த தமிழக அரசின் சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

    முன் எச்சரிக்கை நடவடிக்கையாக உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் வகையில் சுகாதாரத்துறை சார்பிலும் பல்வேறு அரசியல் கட்சிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சார்பிலும் மக்களுக்கு நிலவேம்பு கசாயம் என்ற மூலிகை சாறு வழங்கப்பட்டு வருகிறது.



    இந்த நிலையில் நிலவேம்பு கசாயம் குடித்தால் ஆண்மை குறைபாடு, மலட்டுத்தன்மை ஏற்படும் என்று சமூக வலைதளங்களில் தகவல் பரப்பப்பட்டது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.

    நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டரில் சரியான ஆராய்ச்சி முடிவுகள் கிடைக்கும் வரை நம் இயக்கத்தார் நிலவேம்பு விநியோகத்தில் ஈடுபட வேண்டாம் என்று ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    இந்த நிலையில் நிலவேம்பு கசாயம் குறித்து தவறான தகவல் பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    திருச்சி மகாத்மா காந்தி தலைமை அரசு மருத்துவமனையில் சுகாதார துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களை பார்வையிட்டார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    டெங்கு காய்ச்சலுக்கு நிலவேம்பு கசாயம் நல்ல மருந்து. அது தீவிர பரிசோதனை செய்யப்பட்டது. ஆசியாவின் மிகப்பெரிய ஆய்வுகூடமான கிங்ஸ் இன்ஸ்டிடியூட்டும் நிலவேம்பு கசாயம் டெங்கு தடுப்பு மருந்தாக பயன்படுத்தலாம் என்று கூறியுள்ளது.

    நிலவேம்பு கசாயம் மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும் என்று சமூக வலைதளங்களில் பொய்யான தகவல் பரப்பப்பட்டு வருகிறது. முழுமுழுக்க நில வேம்பு ரசாயன முறையில் பரிசோதனை செய்யப்பட்ட பின்னே பரிந்துரைக்கப்படுகிறது.

    எனவே நிலவேம்பு கசாயம் குறித்து தவறான தகவல் பரப்புவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். டெங்குவை கட்டுப்படுத்த வருவாய் துறை உட்பட அனைத்து துறை அதிகாரிகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    தமிழக அரசின் நடவடிக்கையால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், சேலம் மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு குறைந்துள்ளது. ஆனால் திருச்சியில் பாதிப்பு சற்று அதிகமாக இருக்கிறது.

    பொது மக்கள் காய்ச்சல் என்று தெரிந்த உடனே அரசு மருத்துவமனையை அணுக வேண்டும், டெங்கு காய்ச்சலுக்கு ஊசி போடக்கூடாது என கடுமையாக கூறி வருகிறோம்.

    அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் டெங்கு பாதிப்பு இருக்கிறதா என ஆய்வு செய்யும் ரத்த அணுக்கள் பரிசோதனை கருவி அவசியம் வைத்திருக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளோம்.

    தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் ரூ.23 கோடியே 50 லட்சம் செலவில் 837 ரத்த அணுக்கள் பரிசோதனை செய்யும் கருவி வைத்துள்ளோம். அந்த மருத்துவமனையின் முதல்வர்கள் கேட்டுக்கொண்டால் கூடுதல் கருவிகளை அளிக்க தயாராக உள்ளோம்.

    தாமதமாக வராமல் உடனடியாக அரசு மருத்துவ மனையை நாடும் நோயாளிகள் முழுமையாக குணப்படுத்தப்படுகிறார்கள். டெங்கு இருக்கிறது என்று தவறான முடிவுகள் தரும் தனியார் ரத்த பரிசோதனை ஆய்வு மையங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×