search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கரூர் அமராவதி ஆற்றில் மூழ்கி பலியான தந்தை-மகன் உடல்களை படத்தில் காணலாம்.
    X
    கரூர் அமராவதி ஆற்றில் மூழ்கி பலியான தந்தை-மகன் உடல்களை படத்தில் காணலாம்.

    திருச்சி-கரூரில் ஆற்றில் குளிக்க சென்ற தந்தை-மகன் உள்பட 6 பேர் பலி

    திருச்சி-கரூரில் தீபாவளி பண்டிகையன்று காவிரி ஆற்றில் குளிக்க சென்ற தந்தை மற்றும் மகன் உள்பட 6 பேர் பலியாகினர்.
    திருச்சி:

    திருச்சி ஏர்போர்ட் வள்ளுவர் நகரை சேர்ந்தவர்கள் ஆண்ட்ரூஸ் (வயது 29), இஸ்மாயில் (19). இவர்களது நண்பர்கள் சதாம் உசேன் (23), சிவகுரு (24) உள்பட 12 பேர் நேற்று மதியம் தீபாவளியை முன்னிட்டு திருச்சி அருகே திருவளர்ச்சோலை பொன்னுரங்கபுரம் என்ற இடத்தில் காவிரி ஆற்றில் குளிக்க சென்றனர்.

    மதியம் 2 மணிக்கு அப்பகுதியில் மது அருந்திவிட்டு உற்சாகமாக இருந்துள்ளனர். பிறகு 4 பேரும் அங்கு குளிக்க ஆற்றில் இறங்கினர். மற்ற நண்பர்களுக்கு நீச்சல் தெரியாததால் அவர்கள் செல்லவில்லை.

    அந்த பகுதி மணல் குவாரி என்பதால் சில இடங்களில் புதைகுழிகள் இருந்துள்ளன. இதனை அறியாத அவர்கள் ஆற்றில் இறங்கிய போது சுமார் 20 அடி ஆளத்தில் மூழ்க தொடங்கினர். முதலில் ஆண்ட்ரூஸ், இஸ்மாயில், சிவகுரு ஆகியோர் தண்ணீருக்குள் மூழ்கியபடி சுழலில் சிக்கி நீந்த முடியாமல் மூச்சுத் திணறினர்.

    மேலும் தங்களை காப்பாற்றும்படி 3 பேரும் அபய குரல் எழுப்பினர். அருகில் இருந்த சதாம் உசேன் அவர்களை காப்பாற்ற முயன்றார். ஆனால் அவரும் அந்த சுழலில் சிக்கிக்கொண்டார். சிறிது நேரத்தில் 4 பேரும் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர்.

    நண்பர்கள் 4 பேரும் நீண்ட நேரமாகியும் கரைக்கு வராததால் சந்தேகம் அடைந்த மற்ற நண்பர்கள் குளிக்க சென்ற இடத்தில் தேடினர். ஆனால் 4 பேரையும் காணாததால் திடுக்கிட்டனர். இந்த சம்பவம் மதியம் 3.30 மணிக்கு நடந்துள்ளது.

    அதன்பிறகு இதுகுறித்து அக்கம்பக்கத்தில் உள்ள கிராமத்தினருக்கு தகவல் தெரிந்தது. கிராம மக்கள் அங்கு திரண்டு வந்தனர். ஸ்ரீரங்கம் தீயணைப்பு நிலையம் மற்றும் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் மூழ்கி 4 பேரின் உடல்களையும் தேடினர்.

    நேற்றிரவு 7 மணியளவில் ஆண்ட்ரூஸ் மற்றும் இஸ்மாயில் ஆகியோரது உடல்கள் மட்டும் மீட்கப்பட்டன. போதிய வெளிச்சம் இல்லாததால் மீட்பு பணி நிறுத்தப்பட்டது. இன்று காலை மீண்டும் அவர்கள் மூழ்கிய இடத்தில் பாதுகாப்பு வசதியுடன் தீயணைப்பு வீரர்கள் உடல்களை தேடினர்.

    இதில் இன்று காலை 7 மணிக்கு சிவகுரு உடல் மீட்கப்பட்டது. சதாம் உசேன் உடல் தொடர்ந்து தேடப்பட்டு வருகிறது. மீட்கப்பட்ட 3 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது.

    பலியானவர்கள் உள்பட நண்பர்கள் அனைவரும் ஒர்க் ஷாப், பிளம்பிங் போன்ற தொழில்கள் செய்து வந்தனர்.

    ஆற்றில் குளிக்க சென்ற நண்பர்கள் 12 பேரும் எப்போதும் ஒன்றாக இருப்பது வழக்கம். எனவே தீபாவளியை முன்னிட்டு அனைவரும் ஒரே கலரில் உடையணிந்து காவிரி ஆற்றுக்கு சென்றுள்ளனர். அங்கு ஆற்றில் இறங்கி குளித்த போது 4 பேர் பலியானது அவர்களது குடும்பத்தினரை மட்டுமின்றி திருச்சியையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    மற்றொரு சம்பவம்...

    கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுகாவிற்கு உட்பட்டது கொடையூர் கிராமம். இந்த ஊரைச்சேர்ந்தவர் சக்திவேல் (வயது 45). இவர் நேற்று காலை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புத்தாடை அணிந்து குழந்தைகளுடன் கொண்டாடினார்.

    தற்போது காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் மகள் கார்த்திகா (9), மகன் கதிரேசன் (7) ஆகியோருடன் குளிப்பதற்காக சென்றார். கிராமத்தையொட்டிய காவிரியின் கிளையான அமராவதி ஆற்றின் படித்துறையில் அமர்ந்து குளித்துக் கொண்டிருந்தார்.

    முதலில் மகன் கதிரேசன் ஆற்றில் இறங்கினான். அப்போது ஆற்றின் தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்தது. இதில் கதிரேசன் இழுத்துச் செல்லப்பட்டான். அவனது அலறல் சத்தம் கேட்டு மகனை மீட்க ஆற்றில் இறங்கிய தந்தை சக்திவேல் புதை மணலில் சிக்கிக் கொண்டார்.

    இதைப்பார்த்த கரையில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சக்திவேலின் மகள் கார்த்திகா செய்வதறியாமல் தவித்தார். தந்தையும், தம்பியும் ஆற்றில் இழுத்து செல்லப்பட்டதை கண்டு உரக்க கூச்சல் போட்டார். உடனே அக்கம் பக்கத்தில் இருந்த இளைஞர்கள் அங்கு ஓடிவந்தனர்.

    அவர்கள் ஆற்றில் குதித்து நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு சக்திவேல், கதிரேசன் இருவரையும் பிணமாக மீட்டனர். தகவல் அறிந்து அங்கு வந்த அரவக்குறிச்சி போலீசார் 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    தீபாவளி பண்டிகையன்று தந்தை, மகன் ஆற்றில் மூழ்கி பலியானது அப்பகுதியை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


     திருச்சி அருகே காவிரி ஆற்றில் மூழ்கி பலியானவரின் உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுத காட்சி.

    கரூர் அமராவதி ஆற்றில் மூழ்கி பலியான தந்தை-மகன் உடல்களை படத்தில் காணலாம்.

    Next Story
    ×