search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    15 ஆண்டுக்கு பிறகு தீபாவளி கொண்டாடிய மக்கள்
    X

    15 ஆண்டுக்கு பிறகு தீபாவளி கொண்டாடிய மக்கள்

    ஈரோடு அருகே வெள்ளோடு பறவைகள் சரணாலயம் பகுதியில் 15 ஆண்டுகளுக்கு பின்னர் பட்டாசு வெடித்து பொதுமக்கள் தீபாவளி கொண்டாடினார்கள்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் வெள்ளோட்டில் பறவைகள் சரணாலயம் உள்ளது. இங்கு பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் பறவைகள் இனப்பெருக்க காலத்தில் வருவது வழக்கம். அப்படி வரும் பறவைகள் பட்டாசு சத்தத்தால் அச்சப்பட்டு விடாமல் இருக்க இங்கு பட்டாசு வெடிப்பது தடை செய்யப்பட்டு இருந்தது. இதனால் வெள்ளோடு பறவைகள் சரணாலயம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தீபாவளி பண்டிகைக்கு கூட பட்டாசுகள் வெடிக்க முடியாத நிலையில் இருந்தனர்.

    தீபாவளி பண்டிகை நேரத்தில் வனத்துறையின் சார்பில் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது வழக்கம். இந்த வழக்கம் சுமார் 15 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது.

    இந்தநிலையில் கடந்த 2 ஆண்டுகளாக பருவ மழை பொய்த்ததால் வெள்ளோடு சரணாலய ஏரியில் தண்ணீர் வறண்டது. ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லாத நிலையில் மரங்கள் அனைத்தும் பட்டுப்போகும் நிலைக்கு தள்ளப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளாக பருவநிலை சரி இல்லாததால் பறவைகளும் இங்கு வருவது இல்லை.

    இந்தநிலையில் இந்த தீபாவளி பண்டிகையின் போது சரணாலயத்தில் பறவைகள் ஏதும் இல்லாததால் அந்த பகுதி பொதுமக்கள் பட்டாசு கொளுத்தி தீபாவளி பண்டிகையை கொண்டாட முடிவு செய்தனர். அதன்படி நேற்று சரணாலயத்தில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஈரோடு-வெள்ளோடு ரோடு பறவைகள் சரணாலய பிரிவு முனியப்பன் கோவில் அருகே பட்டாசுகள் வெடித்தனர்.

    இது குறித்து அந்த பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் கூறும்போது, ‘நாங்கள் சிறு வயதாக இருந்தபோது தீபாவளிக்கு பட்டாசு வெடித்து கொண்டாடினோம். பின்னர் பறவைகள் சரணாலயத்துக்கு அதிக அளவில் பறவைகள் வந்ததால் எங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. பறவைகள் நலன் கருதி கடந்த 15 ஆண்டுகளாக நாங்கள் வெடிகள் போடுவது இல்லை. தற்போது சரணாலயத்தில் பறவைகள் ஏதும் இல்லாதால் இந்த ஆண்டு பட்டாசு வெடித்தோம். அதுவும் சரணாலயத்துக்கு பாதிப்பு இல்லாத வகையில் வெடித்து இருக்கிறோம்.

    நீண்ட காலத்துக்கு பின்னர் பட்டாசு வெடித்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. மீண்டும் சரணாலயத்துக்கு தண்ணீர் வந்து பறவைகள் வந்துவிட்டால் பட்டாசுகள் வெடிக்க மாட்டோம்‘ என்றார்.

    Next Story
    ×