search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் நள்ளிரவு வரை நடந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
    X

    திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் நள்ளிரவு வரை நடந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

    திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் நள்ளிரவு வரை நடந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்கள். இந்த சோதனையின் போது பணம் மற்றும் தங்க காசுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
    திருச்சி:

    திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் குடிநீர் நிதி, பாதாள சாக்கடை, வருவாய் மூலதன நிதி ஆகிய பிரிவுகளின் கீழ் செய்யப்பட்ட பணிகளுக்கு ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்படும் ‘செக்’குகளுக்கு அதிக அளவில் கமி‌ஷனாக ரொக்கப் பணம் மற்றும் தங்க காசுகள் பெறப்படுவதாக திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு ராமச்சந்திரன் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் நவநீத கிருஷ்ணன், சக்திவேல், சேவியர்ராணி, அருள்ஜோதி ஆகியோர் அடங்கிய 9 பேர் கொண்ட குழுவினர் நேற்று மாலை 4 மணிக்கு மாநகராட்சி அலுவலகத்தில் நுழைந்து அதிரடியாக சோதனை நடத்தினர்.

    மாநகராட்சி அலுவலகத்தின் 3-வது தளத்தில் உள்ள கணக்கு பிரிவு அலுவலகத்தில் உதவி ஆணையராக உள்ள பிரபு குமார் ஜோசப் அறைக்குள் புகுந்து அதிரடியாக சோதனை நடந்தது. சோதனையின் போது மாநகராட்சி அலுவலர்கள் வெளியில் செல்ல அனுமதிக்கப்படவில்லை.

    மாலை 4 மணிக்கு தொடங்கிய சோதனை நள்ளிரவு 12.30 மணி வரை நடந்தது. பெண் அலுவலர்கள் மட்டும் வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

    இந்த சோதனையின் போது கணக்கு பிரிவு அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த ரூ.1 லட்சத்து 26 ஆயிரம் ரொக்கம், மற்றும் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் மதிப்புள்ள 32 தங்க காசுகள் ஆகியவை லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் கைப்பற்றப்பட்டது.

    இந்த பணம் மற்றும் தங்க காசுகள் கணக்கு பிரிவு அலுவலகத்திற்கு வந்தது எப்படி? எந்தெந்த ஒப்பந்ததாரரிடம் லஞ்சமாக பெறப்பட்டது என போலீசார் விசாரணை நடத்தினர்.

    அப்போது தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சிறப்பாக தூய்மையை கடைபிடிக்கும் பொதுமக்களுக்கு மாநகராட்சி சார்பில் தங்க காசுகள் அளிக்கும் திட்டத்தின் கீழ் வழங்குவதற்காக 32 தங்க காசுகள் வைக்கப்பட்டிருந்ததாக ஊழியர்கள் கூறினர்.

    ஆனால் இந்த தங்க காசுகள் தனியார் நிறுவனங்களிடமிருந்து பரிசு திட்டத்திற்காக இலவசமாக பெறப்பட்டதற்கான கடிதம், ஆவணங்கள் இல்லாததால் அவற்றை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர். சில ஊழியர்கள் மட்டும் வைத்திருந்த பணத்தை தீபாவளி செலவிற்காக ஏ.டி.எம். எந்திரத்தில் எடுத்ததற்குரிய ஆதாரத்தை லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் அளித்துள்ளனர்.

    நள்ளிரவு 12.30 மணிக்கு சோதனை முடித்த போலீசார் கைப்பற்றப்பட்ட நகை, மற்றும் தங்க காசுகளை எடுத்துச் சென்றனர். இன்று மாநகராட்சி கணக்கு அலுவலர் பிரபு குமார் ஜோசப் மற்றும் சில ஊழியர்களிடம் தொடர் விசாரணை நடைபெறுகிறது.

    எந்தெந்த ஒப்பந்ததாரரிடம் எவ்வளவு பணம் பெறப்பட்டது. தங்க காசுகள் கொடுத்த நிறுவனங்கள் பட்டியல் குறித்தும் விசாரணை நடத்துகிறார்கள்.

    இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசர் கூறியதாவது:-

    5 ஊழியர்களிடமிருந்து கணக்கில் வராத ரூ.2.46 லட்சம் மதிப்பிலான பணம் - தங்ககாசுகள் குறித்து தொடர்ந்து விசாரணை நடை பெற்று வருகிறது. முழு விசாரணைக்கு பிறகு முக்கிய தகவல்கள் கிடைக்கும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக நுழைந்து 8 மணி நேரம் நடத்திய சோதனை ஊழியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சி, ஸ்ரீரங்கம் ஆகிய வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி லஞ்ச பணத்தை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×