search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரவுடி ஸ்ரீதர் உடல் பிரேத பரிசோதனைக்கு பின் காஞ்சீபுரம் சுடுகாட்டில் தகனம்
    X

    ரவுடி ஸ்ரீதர் உடல் பிரேத பரிசோதனைக்கு பின் காஞ்சீபுரம் சுடுகாட்டில் தகனம்

    செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்கு பிறகு ரவுடி ஸ்ரீதரின் உடல் அவரது மகளிடம் ஒப்படைக்கப்பட்டது. நேற்றே இறுதிச்சடங்குகள் நடத்தப்பட்டு காஞ்சீபுரம் சுடுகாட்டில் உடல் தகனம் செய்யப்பட்டது.
    செங்கல்பட்டு:

    காஞ்சீபுரம் அருகே உள்ள திருப்பருத்திகுன்றம் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதர் (வயது 49). பிரபல ரவுடியான இவர் மீது ஆள் கடத்தல், நில அபகரிப்பு, கொலை உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி அம்பேத்கர் வளவன் கொலை வழக்கில் கோர்ட்டில் ஆஜராகாததால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.

    வெளிநாட்டில் தலைமறைவாக இருந்த அவர் கடந்த 4-ந் தேதி கம்போடியாவில் தற்கொலை செய்துகொண்டார். அவரது உடலை காஞ்சீபுரத்துக்கு கொண்டுவர அவரது மகள் மற்றும் உறவினர்கள் முயற்சி மேற்கொண்டனர்.

    அதன்படி நேற்று முன்தினம் கம்போடியாவில் இருந்து மலேசியா வழியாக ஸ்ரீதரின் உடல் சென்னைக்கு கொண்டுவரப்பட்டது. ஸ்ரீதரின் உடலை அவரது மகளிடம் அதிகாரிகள் ஒப்படைத்தனர். காஞ்சீபுரம் போலீசார் ஸ்ரீதரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    ஸ்ரீதரின் தம்பி செந்தில், மகள் தனலட்சுமி மற்றும் டிரைவர் தீனா ஆகியோர் நேற்று காலை செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் ஸ்ரீதரின் உடலை அடையாளம் காட்டினர். செந்தில் ஏற்கனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். ஸ்ரீதர் உடலை அடையாளம் காட்டுவதற்காக அவர் பரோலில் வந்து இருந்தார்.

    இறந்தது ஸ்ரீதர் தான் என உறுதிப்படுத்திய பிறகு அவரது உடலை டாக்டர் கார்த்திகேயன் தலைமையிலான மருத்துவ குழுவினர் பிரேத பரிசோதனை செய்தனர். ஸ்ரீதர் உடல் கெட்டுப்போகாமல் இருக்க கம்போடியா நாட்டில் ‘எம்பார்மிங்’ செய்யப்பட்டு இருந்தது. இதனால் ஸ்ரீதர் இறந்து 13 நாட்கள் ஆனாலும் உடல் கெடாமல் இருந்தது.

    அவரது முக்கிய உடல் உறுப்புகள் ஆய்வுக்காக சென்னையில் உள்ள உடற்கூறு ஆய்வகத்துக்கும், சில உறுப்புகள் செங்கல்பட்டு மருத்துவ கல்லூரி ஆய்வகத்துக்கும் அனுப்பப்பட்டன. இந்த ஆய்வறிக்கை 20 நாட்களில் கிடைக்கும் என டாக்டர்கள் தெரிவித்தனர். இதில் அவர் எப்படி இறந்தார் என்பது தெரியவரும்.

    சுமார் 1½ மணி நேரம் நடந்த பிரேத பரிசோதனைக்கு பின்னர் ஸ்ரீதரின் உடலை அவரது மகளிடம் போலீசார் ஒப்படைத்தனர். மதியம் 1.55 மணியளவில் ஸ்ரீதரின் உடல் ஆம்புலன்சில் ஏற்றப்பட்டு, 3 மணியளவில் காஞ்சீபுரம் திருப்பருத்திக்குன்றத்தில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டுவரப்பட்டது.

    அங்கு குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் என ஏராளமானோர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். பல்வேறு கட்சி பிரமுகர்களும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

    போலீசார் இன்றே இறுதி சடங்குகள் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டனர். இதனைத்தொடர்ந்து நேற்று மாலையே அவரது உடலுக்கு இறுதி சடங்குகள் நடத்தப்பட்டன. இரவு 9.40 மணி அளவில் அவரது வீட்டு அருகே உள்ள சுடுகாட்டில் உடல் தகனம் நடந்தது. உடலுக்கு ஸ்ரீதரின் மகன் சந்தோஷ்குமார் தீ மூட்டினார்.

    அசம்பாவிதங்களை தவிர்க்க காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி உத்தரவின்பேரில், காஞ்சீபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு முகிலன் மேற்பார்வையில் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
    Next Story
    ×