search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவை, திருப்பூர், நீலகிரியில் பலத்த மழை
    X

    கோவை, திருப்பூர், நீலகிரியில் பலத்த மழை

    கோவை,திருப்பூர், ஊட்டியில் பலத்த மழை பெய்தது. இதனால் இரவில் கடுங் குளிர் வீசியது. தாழ்வான வீடுகளில் மழை வெள்ளம் புகுந்தது.

    கோவை:

    கோவையில் நேற்று காலை முதலே மேக கூட்டம் திரண்டு மழை வருவது போல் காணப்பட்டது. திடீரென மதியம் 2.30 மணிக்கு மழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து விட்டு, விட்டு மாலை 5 மணி வரை கொட்டியது. இதே போல் வால்பாறை மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை கொட்டியது.

    இந்த மழையின் காரணமாக ரோடுகளில் தாழ்வான இடங்களில் தண்ணீர் குட்டை போல் தேங்கி நின்றது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் பெரும் சிரமம் அடைந்தனர்.

    தீபாவளி பண்டிகையொட்டி ஏராளமான பேர் நகரில் திரண்டதாலும், மழையின் காரணமாகவும் கோவையில் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    துணி மற்றும் நகை எடுக்க வந்திருந்த பொதுமக்கள் குடையுடன் வந்திருந்தனர். தொடர் மழையின் காரணமாக குளிர்ந்த காற்று வீசியது. இரவில் கடுமையான குளிர் நிலவியது.

    கோவை மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு-

    தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்-80, சின்னகல்லார்-50, கோவை தெற்கு-29, வால்பாறை தாலுகா அலுவலகம்-22, கோவை விமான நிலைய பகுதி-22.90, வால்பாளை பி.ஏ.பி.-19, சின்கோனா-10, சூலூர்-8.30, கோவை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 241.20 மில்லி மீட்டர் மழை பெய்தது.

    நீலகிரி மாவட்டத்தில் நேற்று பகல் 11 மணி முதல் மதியம் 3 மணி வரை மழை பெய்தது. மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. இரவிலும் மழை கொட்டியது.

    ஊட்டியில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக 2-வது சீசனுக்காக தாவரவியல் பூங்காவில் உள்ள மலர்செடிகள் அழுகி வருகிறது.

    திருப்பூர் மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக மாலை நேரத்தில் மழை கொட்டி வருகிறது. நேற்றும் வழக்கம் போல் மாலை 4 மணி முதல் 5 மணி வரை 2 மணி நேரம் பலத்த மழை கொட்டியது. இதனால் ரோடுகளில் மழை வெள்ளம் ஆறாக ஓடியது. வாகனங்கள் அனைத்தும் மெதுவாக சென்றது.

    இதே போல் உடுமலை பகுதியிலும் பலத்த மழை கொட்டியது. இதன் காரணமாக உடுமலை-பழனி ரோடு நாராணயன் காலனியில் உள்ள சுமார் 250 வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்தது.

    அந்த வீடுகளில் வசிக்கும் பொதுமக்கள் இரவு முழுவதும் தண்ணீரை வெளியே அகற்றினர். இதே போல் உடுமலை அடுத்த ராகல்பாவி ஊராட்சி ஜெ.ஜெ. நகர் குடியிருப்பில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு மழைநீர் செல்லும் வழியில் அடைப்பு ஏற்பட்டதால் ஊருக்குள் மழை வெள்ளம் புகுந்து வீடுகளை சூழ்ந்தது.

    இதுப்பற்றி தெரியவந்ததும் அதிகாரிகள் விரைந்து சென்று பொக்லைன் எந்திரம் மூலம் மழை நீர் வடிகாலை தூர் அகற்றி வெள்ளத்தை வெளியேற்றினர். பின்னர் இரவு 11 மணி அளவில் மழை வெள்ளம் படிப்படியாக குறைய தொடங்கியது

    வெள்ளம் சூழ்ந்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கு இரவு உணவு, மற்றும் குடிநீர் வழங்கப்பட்டது. பின்னர் காலையில் நிலவேம்பு கசாயம் கொடுக்கப்பட்டது.

    தொடர் மழையின் காரணமாக கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டத்தில் உள்ள அணைகள், ஏரிகள், குளங்கள், கிணறுகள் வேகமாக நிரம்பி வருகிறது. மேலும் நிலத்தடி நீர் மட்டமும் உயர்ந்து வருகிறது.

    Next Story
    ×