search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திசையன்விளை வடக்கு பஜாரில் ரோட்டில் மழைநீர் குளம்போல் தேங்கி கிடப்பதை படத்தில் காணலாம்.
    X
    திசையன்விளை வடக்கு பஜாரில் ரோட்டில் மழைநீர் குளம்போல் தேங்கி கிடப்பதை படத்தில் காணலாம்.

    நெல்லை மாவட்டத்தில் பரவலாக மிதமான மழை - அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

    நெல்லை மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. அணைப்பகுதியிலும் மிதமான மழை பெய்வதால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் வாட்டி வந்த‌து. இந்த நிலையில் கடந்த‌ 3 நாட்களாக மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. அணைப்பகுதியிலும் மிதமான மழை பெய்வதால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. நெல்லை மாவட்டத்தில் நேற்று காலையில் இருந்தே வானம் மேக மூட்டத்துடன் காண‌ப்பட்டது. எனினும் கடும் முறுக்கலுடன் வெயிலின் தாக்கம் இருந்தது.

    இந்த நிலையில் மாலையில் பரவலாக மழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மணிமுத்தாறு, நம்பியாறு, கொடுமுடியாறு, அடவிநயினார் அணைப்பகுதியில் கனமழை பெய்தது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இன்று காலை நிலவரப்படி பாபநாசம் அணையின் நீர்மட்டம் 82.30 அடியாகவும், சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 79.07 அடியாகவும், மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 48.10 அடியாகவும் உள்ளன.

    இதே போல் கடனா அணையின் நீர்மட்டம் 62.80 அடியாகவும், ராமநதி அணையின் நீர்மட்டம் 67.25 அடியாகவும், கருப்பாநதி அணையின் நீர்மட்டம் 58.63 அடியாகவும் உள்ளது. குண்டாறு அணை ஏற்கனவே நிரம்பி விட்டது.

    மாவட்டத்தில் அதிகபட்சமாக நம்பியாறு அணைப்பகுதியில் 34 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. மற்ற இடங்களில் பெய்த மழை விபரம் மில்லிமீட்டரில் வருமாறு:-

    கொடுமுடியாறு-20, அம்பை-18, நாங்குநேரி-13, பாளை-9, சிவகிரி-7.70, சங்கரன்கோவில்-7, அடவிநயினார்-7, மணிமுத்தாறு-6.80, குண்டாறு-6, கருப்பாநதி-1, சேர்மாதேவி-1, ஆய்க்குடி-1.

    திசையன்விளை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக அக்கினி வெயிலுக்கு இணையாக வெயில் அடித்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தார்கள். பூமியில் நீர்மட்டம் நாளுக்கு நாள் குறைந்து வந்தது. அக்டோபர் மாதம் தொடங்கி 10 நாட்களுக்கு மேல் ஆகியும் ஒரு மழை கூட பெய்யவில்லையே என மழையை மக்கள் எதிர்பார்த்தனர்.

    நேற்று காலையில் இருந்தே வெயில் கடுமையாக அமைந்தது. இந்நிலையில் மதியம் 12.45 மணி முதல் 1.30 மணி வரை காற்று மற்றும் இடிமின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் திசையன்விளை, உவரி, மன்னார்புரம் இட்டமொழி, பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    மழை காரணமாக தெருக்கள் மற்றும் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சிரமம் அடைந்தனர். திசையன்விளை வடக்கு பஜாரில் சாலையில் முட்டளவிற்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. வாரச்சந்தை மற்றும் தினசரி சந்தை வளாகம் சேறும் சகதியுமாக மாறியது.


    Next Story
    ×