search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மர்ம காய்ச்சலுக்கு ஒரே நாளில் 3 மாணவிகள்- மாணவன் பலி
    X

    மர்ம காய்ச்சலுக்கு ஒரே நாளில் 3 மாணவிகள்- மாணவன் பலி

    சேலம் மாவட்டத்தில் மர்ம காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சலுக்கு மாணவ, மாணவிகள் தொடர்ந்து இறந்து வருகின்றனர். இன்று காலை மேலும் 3 மாணவிகள் மர்ம காய்ச்சலுக்கு பலியாகி உள்ளனர்.
    சேலம்:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள கூட்டாத்துப்பட்டி பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மனைவி சத்யா. இவர்களுக்கு 2 மகள்கள், 1 மகன் உள்ளனர்.

    இந்த நிலையில், மூத்த மகள் கீர்த்தி(வயது 8), அதே பகுதியில் உள்ள பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தாள். பள்ளிக்கு சென்று வந்த கீர்த்திக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. பின்னர் பெற்றோர் மருந்து, மாத்திரைகள் வாங்கி கொடுத்து பார்த்த பிறகும் காய்ச்சல் குணமாகவில்லை.

    இதனால் கீர்த்தியை பெற்றோர் சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து டாக்டரிடம் காண்பித்தனர். டாக்டர் பரிசோதனை செய்து பார்த்தபோது, மர்ம காய்ச்சல் தொற்றி இருப்பது தெரியவந்தது. இது பற்றி டாக்டர், மாணவியின் பெற்றோரிடம் தெரிவித்து, மருத்துவமனையில் சேர்க்கும்படி அறிவுரை வழங்கினார். அதன்படி, கீர்த்தியை மருத்துவமனை வார்டில் சேர்த்தனர். அங்கு தொடர்ந்து டாக்டர்கள், சிகிச்சை அளித்து வந்தனர்.

    இன்று காலை மாணவி கீர்த்தி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தாள். மகள் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதது அங்கிருந்தவர்களை கண்கலங்க வைத்தது.

    அது போல் சேலம் அருகே உள்ள நாக்கியம்பட்டி பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவருடைய மகள் இலக்கியா(6). அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வந்தாள்.

    இந்த நிலையில் இலக்கியாவுக்கு மர்ம காய்ச்சல் ஏற்பட்டது. இதனால் கடந்த 4 நாட்களுக்கு முன்பு, சேலம் அரசு மருத்துவமனையில் இலக்கியாவை சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் மர்ம காய்ச்சலை குணப்படுத்து வதற்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால், நள்ளிரவு 12 மணி அளவில் குழந்தை இலக்கியா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தாள்.

    சேலம் அருகே உள்ள ஓமலூர் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார். இவருடைய மகள் அபிநயா(9) மர்ம காய்ச்சலுக்கு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இன்று அதிகாலை காலை 3 மணிக்கு மாணவி அபிநயா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தாள்.

    நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் பகுதியை சேர்ந்தவர் கதிரேசன். இவரது மகன் சபரி ராஜன் (வயது 15). இவன், நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான்.கடந்த சில நாட்களாக மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சபரிராஜன் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். ஆனால் இன்று காலை 11 மணி அளவில் சிகிச்சை பலன் அளிக்காமல் சபரிராஜன் பரிதாபமாக இறந்தான். மாணவன் உடலை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.



    சேலம் அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் அடுத்தடுத்து 3 மாணவிகள் மற்றும் 1 மாணவன் மர்மகாய்ச்சலுக்கு இறந்துள்ள சம்பவம் பெற்றோர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×