search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பரோல் முடிந்து பெங்களூர் சிறைக்கு புறப்பட்டார் சசிகலா
    X

    பரோல் முடிந்து பெங்களூர் சிறைக்கு புறப்பட்டார் சசிகலா

    பரோல் காலம் முடிந்ததையடுத்து சசிகலா இன்று சென்னையில் இருந்து பெங்களூர் சிறைச்சாலைக்கு புறப்பட்டுச் சென்றார். அவரை உறவினர்கள் கண்ணீர்மல்க விடைகொடுத்து வழியனுப்பி வைத்தனர்.
    சென்னை:

    ஜெயலலிதாவின் தோழி சசிகலா, சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை பெற்றதைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் 15-ந்தேதி பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார். உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் கணவர் நடராஜனை அருகில் இருந்து கவனிப்பதற்காக, சசிகலாவுக்கு சிறை நிர்வாகம் 5 நாட்கள் பரோல் கொடுத்தது.

    இதையடுத்து கடந்த 6-ந்தேதி பெங்களூரில் இருந்து கார் மூலம் சென்னை வந்த அவர், தியாகராய நகரில் உள்ள தனது அண்ணன் மகள் கிருஷ்ணபிரியா வீட்டில் தங்கியிருந்தார். 7-ந்தேதி முதல் நேற்று 11-ந் தேதி வரை அவர் தினமும் பெரும்பாக்கத்தில் உள்ள குளோபல் மருத்துவமனைக்கு சென்று கணவர் நடராஜனை பார்த்து வந்தார். டாக்டர்களிடம் தனது கணவர் உடல் நிலை பற்றி விசாரித்தார்.

    சசிகலா பரோலில் இருக்கும் 5 நாட்களும் எந்தவித அரசியல் நடவடிக்கைகளிலும் ஈடுபடக்கூடாது, ஊடகங்களுக்கு பேட்டி கொடுக்கக் கூடாது என்பன போன்றவை உள்பட 18 நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தன. இதனால் அ.தி.மு.க. அமைச்சர்கள், எம்.எல். ஏ.க்கள், நிர்வாகிகள் யாரும் அவரை சந்திக்கவில்லை.

    5 நாட்களும் அவர் தனது குடும்ப உறுப்பினர்களை மட்டுமே சந்தித்து மனம் விட்டு பேசினார். அவர் வேறு எந்த நடவடிக்கைகளிலாவது ஈடுபடுகிறாரா? என்று மத்திய-மாநில உளவுத்துறையினர் ரகசியமாக கண்காணித்தனர். இதனால் சசிகலாவின் சென்னை வருகை குறுகிய வட்டத்துக்குள்ளேயே இருந்தது.

    இந்த நிலையில் சசிகலாவுக்கு பெங்களூர் சிறை நிர்வாகம் வழங்கிய 5 நாள் பரோல் நேற்றிரவு 12 மணியுடன் முடிந்தது. இதையடுத்து அவர் மீண்டும் சிறை செல்லும் நடவடிக்கைகள் தொடங்கின. இன்று காலை 9 மணிக்கு சசிகலா தி.நகர் வீட்டில் இருந்து பெங்களூருக்கு புறப்பட்டார்.

    அவருக்கு அவரது உறவினர்கள் கண்ணீர் மல்க விடை கொடுத்தனர். திவாகரனின் மகன் ஜெய்ஆனந்த் கண்ணீர் வழிந்தோட தனி காரில் ஏறி சசிகலா காருக்கு முன்னதாக சென்றார். சசிகலா காரில் உறவினர்கள் டாக்டர் வெங்கடேஷ், விவேக் இருந்தனர்.

    தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களில் ஏழுமலை தவிர செந்தில்பாலாஜி, வெற்றிவேல், தங்கத்தமிழ்ச்செல்வன் உள்பட 17 பேரும் இன்று காலையே தி.நகர் வீட்டுக்கு வந்திருந்தனர். அவர்கள் கை கூப்பி வணங்கி சசிகலாவை வழி அனுப்பினார்கள்.

    மாவட்ட செயலாளர்கள் கலைராஜன், செந்தமிழன், திருவேற்காடு சீனிவாசன், அம்பத்தூர் பகுதி செயலாளர் வேதாசலம், சி.ஆர். சரஸ்வதி, இரா.தெய்வேந்திரன், முன்னாள் கொறடா திருச்சி மனோகரன், தொட்டியம் ராஜசேகரன், பச்சைமால், நடிகர் குண்டு கல்யாணம் உள்பட ஏராளமான நிர்வாகிகள் வந்திருந்து சசிகலாவை வணங்கி வழி அனுப்பினார்கள்.

    சசிகலா கார் வீட்டை விட்டு வெளியில் வந்ததும், அ.தி.மு.க. தொண்டர்கள் வாழ்த்து கோ‌ஷம் எழுப்பினார்கள். சசிகலா கார் சென்ற வழிநெடுக பல இடங்களில் அ.தி.மு.க. தொண்டர்கள் திரண்டு நின்று வாழ்த்து கோ‌ஷமிட்டப்படி இருந்தனர். அவர்களுக்கு சசிகலா கை கூப்பி வணக்கம் தெரிவித்தார். உஸ்மான் சாலையில் தொண்டர் ஒருவர் தன் பெண் குழந்தைக்கு பெயர் சூட்டும்படி கூறினார்.

    அந்த குழந்தைக்கு “ஜெயஸ்ரீ” என்று சசிகலா பெயர் சூட்டினார். பிறகு அவர் கார் பூந்தமல்லி, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சீபுரம் கூட்டு ரோடு, வாலாஜா டோல்கேட், வேலூர் சத்துவாச்சாரி ஆவின் பாலகம், பள்ளிகொண்டா டோல்கேட், ஆம்பூர் பை-பாஸ் வழியாக சென்றது. வழி நெடுக அவருக்கு அவரது ஆதரவாளர்கள் வரவேற்பு அளித்தனர்.

    இதையடுத்து வாணியம்பாடி டோல்கேட், பர்கூர், கிருஷ்ணகிரி பை-பாஸ், சூளகிரி, ஓசூர் பை-பாஸ் சென்றார். வழியில் ஒரு இடத்தில் வாகனத்தை நிறுத்தி மதிய உணவு சாப்பிட்டார். பிறகு சிறிது நேரம் ஓய்வு எடுத்தார்.

    இன்று மாலை 5 மணிக்குள் அவர் சிறைக்கு வந்துவிட வேண்டும் என்று ஏற்கனவே பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறை நிர்வாகம் அறிவுறுத்தியிருந்தது. எனவே 4 மணிக்குள் சிறைக்கு சென்றுவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அப்போது பரோல் முடிந்து வந்ததற்கான உரிய ஆவணங்கள் சிறை அதிகாரிகளிடம் தாக்கல் செய்யப்படும். இதைத் தொடர்ந்து சசிகலா மீண்டும் ஜெயிலில் அடைக்கப்படுவார்.

    சசிகலாவுக்கு வழங்கப்பட்டுள்ள 4 ஆண்டுகள் தண்டனையில் இதுவரை 8 மாதங்கள் மட்டுமே கழிந்துள்ளது. எனவே இன்னும் 3¼ ஆண்டுகள் சிறை வாசத்தை சசிகலா அனுபவிக்க வேண்டியதுள்ளது.

    Next Story
    ×