search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தாக்குதலில் காயம் அடைந்த ஏழுமலை எம்.எல்.ஏ.வுக்கு தினகரன் ஆறுதல்
    X

    தாக்குதலில் காயம் அடைந்த ஏழுமலை எம்.எல்.ஏ.வுக்கு தினகரன் ஆறுதல்

    தாக்குதலில் காயம் அடைந்த ஏழுமலை எம்.எல்.ஏ.வை தினகரனும், அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்களும் சந்தித்து ஆறுதல் கூறினர்.
    திருவள்ளூர்:

    அ.தி.மு.க. அம்மா அணி துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனின் ஆதரவாளரும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட பூந்தமல்லி தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஏழுமலை நேற்று முன்தினம் இரவு திருவள்ளூரை அடுத்த வெள்ளவேடு அருகே கட்சி நிர்வாகி ஒருவரது வீட்டில் நடந்த துக்க நிகழ்ச்சிக்கு சென்றார்.

    அவர் காரில் திரும்பிய போது அதே பகுதியை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் நைனா கண்ணு திடீரென ஏழுமலையின் காரை வழிமறித்து உருட்டுக் கட்டையால் தாக்கினார்.

    இதில் காரின் கண்ணாடி உடைந்து நொறுங்கியது. இந்த தாக்குதலில் ஏழுமலையின் வாயில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் ஏழுமலையை, நேற்று இரவு டி.டி.வி. தினகரன் மற்றும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் தங்க தமிழ்ச்செல்வன், செந்தில் பாலாஜி, பழனியப்பன், கலைச்செல்வன் உள்ளிட்ட 17 பேரும் மொத்தமாக அணி திரண்டு வந்து சந்தித்தனர்.

    அவர்கள் ஏழுமலைக்கு ஆறுதல் கூறி தாக்குதல் குறித்து கேட்டறிந்தனர். பின்னர் டி.டி.வி. தினகரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு பூந்தமல்லி தொகுதி எம்.எல்.ஏ. ஏழுமலையின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. தற்போது துக்க நிகழ்ச்சிக்கு சென்று திரும்பியவரை மீண்டும் தாக்கியுள்ளனர்.

    பூந்தமல்லி முன்னாள் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினரான மணிமாறன் தற்போது ஓ.பி.எஸ். அணியில் உள்ளார். அவருக்கு இந்த முறை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தராததால் அவரது தூண்டுதலின் பேரிலேயே இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளதாக குற்றம்சாட்டுகிறேன்.

    ஆனால் அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை. இந்த சம்பவம் குறித்து ஓரிரு நாளில் நடவடிக்கை எடுக்கவில்லையெனில் நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டி வரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தங்கதமிழ்ச்செல்வன் நிருபர்களிடம் கூறும்போது,‘எடப்பாடி அரசு அதிகார மமதையில் டி.டி.வி. தினகரன் ஆதரவாளர்களை தாக்குகின்றனர். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு கெட்டுவிட்டது. டெங்கு நோய் தலைதூக்கி உள்ளது.

    நீட் தேர்வில் அனிதா மரணத்திற்கு இன்னும் தீர்வு கிடைக்கவில்லை. எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் வெற்றி பெற்று மீண்டும் சட்டசபைக்கு செல்வோம்.

    முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் தங்களது பதவிகளை காப்பாற்றவே நினைக்கிறார்கள் மக்கள் பிரச்னை குறித்து கவலைப்படவில்லை. இந்த அரசு இருக்கக்கூடாது, முதலமைச்சரை மாற்றுவது தான் எங்கள் இலக்கு’ என்றார்.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை மாற்ற வேண்டும் என்று தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரும் பொறுப்பு கவர்னராக இருந்த வித்தியாசாகர் ராவிடம் மனு அளித்தனர்.

    பின்னர் 18 எம்.எல். ஏ.க்களும் புதுவை மற்றும் கர்நாடாவில் உள்ள சொகுசு விடுதியில் தங்கி இருந்தனர். சில தினங்களுக்கு பின்னர் அவர்கள் தங்களது சொந்த தொகுதிகளுக்கு திரும்பினர்.

    இதைத் தொடர்ந்து தினகரன் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் அனைத்திலும் 18 எம்.எல்.ஏ.க்களும் கலந்து கொண்டனர்.

    இந்த நிலையில் தாக்குதலில் காயம் அடைந்த ஏழுமலை எம்.எல்.ஏ.வை தினகரனும், அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்களும் சந்தித்து ஆறுதல் கூறி இருக்கிறார்கள். தொடர்ந்து எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் தினகரனுடன் அணி திரண்டு இருக்கிறார்கள்.

    Next Story
    ×