search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேட்டூர் அருகே ஆள்மாறாட்டத்தில் கணவன்-மனைவி கொலை: கல்லூரி மாணவி படுகாயம்
    X

    மேட்டூர் அருகே ஆள்மாறாட்டத்தில் கணவன்-மனைவி கொலை: கல்லூரி மாணவி படுகாயம்

    மேட்டூர் அருகே ஆள்மாறாட்டத்தில் தம்பதி கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
    மேட்டூர்:

    சேலம் மாவட்டம், மேட்டூர் அடுத்த கொளத்தூர் தாலுகா கருங்கலூர் அருகே உள்ள கோமாளிகாடு பகுதியை சேர்ந்தவர் குருசாமி (வயது 70). இவரது மனைவி தங்கம்மா(65).

    இவர்களது மகள் முத்துமணியை, அதே பகுதியை சேர்ந்த மாரிமுத்து என்பவருக்கும் திருமணம் செய்து கொடுத்தனர். மகளும், மருமகன் மாரிமுத்தும் அந்த பகுதியிலேயே வசித்து வருகிறார்.

    இவர்களுக்கு ஒரு மகள், 2 மகன்கள் உள்ளனர். மகள் சங்கீதா(21). இவர் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள ஒரு தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.எஸ்.சி. முடித்து விட்டு பி.எட். படித்து வருகிறார்.

    மூத்த மகன் சசிகுமார் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். 2-வது மகன் ராஜசேகர் மேட்டூரில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார்.

    இந்த நிலையில் சசிக்குமாருக்கு உடல் நிலை சரியில்லை என தெரிகிறது. மர்ம காய்ச்சல் இருந்ததால் அவரை பெற்றோர் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அவர் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பொது வார்டில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

    வீட்டில் மகள் சங்கீதாவும், மகன் ராஜசேகரும் தனியாக இருந்ததால், அவர்களுக்கு துணையாக இருக்கும்படி தனது மாமனார், மாமியாரிடம் மாரிமுத்து கூறி விட்டு சென்றார். இதனால் குருசாமியும், தங்கம்மாவும் தங்களது பேரன், பேத்திக்கு துணையாக இருக்க இரவு மருமகன் மாரிமுத்து வீட்டுக்கு வந்தனர்.

    இரவு குருசாமி, தங்கம்மா, பேத்தி சங்கீதா ஆகிய 3 பேரும் வீட்டின் வெளியில் கட்டிலில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர். பேரன் ராஜசேகர் வீட்டுக்குள் பூட்டி விட்டு தூங்கிக் கொண்டிருந்தார்.

    அப்போது, நள்ளிரவு வேளையில் அங்கு பயங்கர ஆயுதங்களுடன் வந்த ஒரு மர்மகும்பல், வீட்டின் வெளியே கட்டிலில் படுத்து தூங்கிக் கொண்டிருந்த குருசாமியையும், அவரது மனைவி தங்கம்மாவையும் அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களால் வெட்டி சாய்த்தது. இருவரது தலை, கழுத்து, நெஞ்சு, கை, கால் உள்ளிட்ட இடங்களில் மர்ம கும்பல் வெறித்தனமாக வெட்டியது. இதில் ஒரு கை தனியாக துண்டானது. ஒரு கையில் இருந்த விரல்கள் தனித்தனியாக துண்டாகி சிதறியது. தாத்தா, பாட்டியின் கதறல் சத்தம் கேட்டு, சங்கீதா எழுந்தார். அவரையும் கை, கால்களில் மர்மகும்பல் வெட்டியது.

    இந்த சம்பவத்தில் குருசாமியும், தங்கம்மாவும் தனது பேத்தி கண்முன்பே ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பிணமானார்கள். இரண்டு பேரும் இறந்து விட்டதை உறுதி படுத்திக் கொண்ட மர்ம கும்பல் பின்னர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது.

    கொலை கும்பல் அரிவாளால் வெட்டியதால் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சங்கீதா கதறி அழுதார். அவரது அழுகுரல் சத்தத்தை கேட்டு, தூங்கிக் கொண்டிருந்த அக்கம் பக்கத்தினர் எழுந்து அங்கு ஓடி வந்தனர். உடனே, அவர்கள் சங்கீதாவை மீட்டு மேட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். மேட்டூர் அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அங்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும், சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜன் சம்பவ இடத்திற்கு வாகனத்தில் விரைந்து வந்து, பார்த்து விசாரணை நடத்தினார். மேலும், அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள், உறவினர்கள் என பல பேரிடம், தப்பி ஓடிய கொலை கும்பல் குறித்து விசாரணை நடத்தினார்.

    இதையடுத்து கொளத்தூர் போலீசார், கொலையுண்ட இருவரது உடலையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த கொலை சம்பவம் குறித்து அவர்களது மருமகன் மாரிமுத்து கூறியதாவது:-

    எனது தந்தை தனமூர்த்திக்கு அந்த பகுதியில் 1.30 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்திற்காக எனது தந்தைக்கும், அவருடைய பங்காளிகளுக்கும் சொத்து தகராறு இருந்து வந்தது. இந்த சொத்து தகராறு சம்பந்தமாக கோர்ட்டில் வழக்கும் நடந்து வருகிறது.

    இந்த நிலையில் எனது மகன் சசிகுமாருக்கு உடல் நிலை சரியில்லாததால் இங்கு வந்துவிட்டோம். அதனால் மகள் பாதுகாப்பிற்காக எனது தந்தை தனமூர்த்தியையும், தாய் சின்னப்பொண்ணுவையும் அனுப்பி வைத்தேன்.

    அப்போது எனது மனைவியின் தந்தை குருசாமியும், தாய் தங்கம்மாவும் அங்கு வீட்டுக்கு பாதுகாப்புக்கு சென்றதால் எனது தாய், தந்தை எங்களுடன் ஆஸ்பத்திரியிலேயே தங்கி விட்டனர்.

    இதனால் எனது பெற்றோரை கொலை செய்ய வந்த கும்பல் ஆள்மாறாட்டத்தில் எனது மாமனார், மாமியாரையும் கொலை செய்து விட்டு தப்பி ஓடி விட்டனர். என்னுடைய அப்பா, அம்மாவை கொலை செய்ய வந்த கும்பல் மாற்றி கொலை செய்து விட்டனர்.

    இவ்வாறு அவர் கூறினர்.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜன் கொலை கும்பலை உடனடியாக கண்டுபிடித்து கைது செய்ய மேட்டூர் டி.எஸ்.பி.க்கு தலைமையில், தனிப்படை அமைத்து உத்தரவிட்டுள்ளார்.

    இந்த தனிப்படையில் 3 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், 10-க்கும் மேற்பட்ட சப்-இன்ஸ்பெக்டர்கள், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்த தனிப்படை போலீசார் தப்பி ஓடிய கொலை கும்பலை தீவிரமாக தேடி வருகிறார்கள். அதுபோல் எஸ்.பி.சி.ஐ.டி., ஓ.சி.ஐ.யூ, கிரைம் பிரிவு உள்ளிட்ட உளவு பிரிவு போலீசாரும் ரகசியமாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    முதற்கட்டமாக தனிப்படை போலீசார், மாரிமுத்து கூறியபடி, அவருடைய பங்காளிகள் சில பேரை பிடித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மேட்டூர் அருகே ஆள்மாறாட்டத்தில் தம்பதி கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×