search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழகத்தில் வருகிற ஆட்சி பா.ஜ.க. ஆட்சி: பொன்.ராதாகிருஷ்ணன்
    X

    தமிழகத்தில் வருகிற ஆட்சி பா.ஜ.க. ஆட்சி: பொன்.ராதாகிருஷ்ணன்

    தமிழகத்தில் வருகிற ஆட்சி பா.ஜ.க. ஆட்சியாக இருக்கும் என மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

    நெல்லை:

    நெல்லை கிழக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் பாளை ஜவகர் திடலில் நேற்று மாலை மாற்றுகட்சியினர் முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் தலைமையில் பா.ஜ.க.வின் இணையும் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் தயா சங்கர் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர் தமிழ்ச்செல்வன், அமைப்பு செயலாளர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன், தேசிய பொதுச்செயலாளர் முரளிதரராவ், மாநில தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் ஆகியோர் பேசினர்.

    மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேசும்போது கூறியதாவது:-

    தமிழகத்தில் 50 ஆண்டுகளாக திராவிட கட்சிகள் ஆட்சி செய்து வளர்ச்சியை தடுத்தன. இந்த கூட்டத்தை பார்க்கும் போது, தூய்மையான, நேர்மையான நல்ல ஆட்சி வேண்டும் என்று வந்து இருப்பது தெரிகிறது. மொழியை சொல்லி தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. அதன்பிறகு மொழிப்போர் தியாகிகளை கைவிட்டு விட்டது.

    ஒவ்வொரு கால கட்டத்திலும் ஒரு தேடல் இருந்து கொண்டு இருந்தது. தற்போது ஊழலற்ற, நேர்மையான ஆட்சி தேவை என்ற தேடல் இருக்கிறது. மற்ற மாநிலங்களுடன் தமிழகத்தை ஒப்பிட்டு பார்க்கும்போது தமிழகம் வளரவில்லை. வீழ்ச்சி அடைந்துள்ளது.

    மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சி மக்களை ஒற்றுமைப்படுத்தி வருகிறது. மோடி, குஜராத் மாநிலத்தில் 13 ஆண்டுகள் ஆட்சி செய்தார். அதன்பிறகு தான் பிரதமராக பொறுப்பேற்றார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் சிறப்பான ஆட்சி நடந்து வருகிறது. தமிழகத்துக்கு பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளன.

    பாரதிய ஜனதா ஆட்சியில் தங்க நாற்கரை சாலை திட்டத்தில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 4 வழிச்சாலைகள் அமைக்கப்பட்டன. மதுரை கன்னியாகுமரி வரை இரட்டை ரெயில்பாதை திட்டத்துக்கு ரூ.4 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த வழிப்பாதை மின்மயமாக்கப்படுகிறது.

    சென்னையில் இருந்து தூத்துக்குடி வழியாக கன்னியாகுமரிக்கு கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதிய ரெயில்பாதை அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்து இருக்கிறோம். அதேபோல் திருவனந்தபுரத்தில் இருந்து கடல் மார்க்கமாக சென்னை வரை கப்பல் போக்குவரத்து தொடங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. தற்போது தமிழகத்தின் நிலை என்ன? என்று எண்ணிப்பார்க்க வேண்டும். கிழக்கு கடற்கரை சாலைக்கு ரூ.10 ஆயிரம் கோடி மத்திய மந்திரி நிதின் கட்கரி ஒதுக்குவதற்கு சம்மதம் தெரிவித்தார். ஆனால் அந்த சாலை திட்டத்துக்கு இதுவரை தமிழக அரசு ஒப்புதல் கொடுக்க வில்லை.

    தற்போது தமிழகம் மிகப்பெரிய சரிவை சந்தித்து வருகிறது. இந்த சரிவில் இருந்து தமிழகத்தை காப்பாற்ற வேண்டும். இந்தியாவில் 29 மாநிலங்கள் உள்ளன. இதில் 13 மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி நடக்கிறது. தமிழகத்தில் வருகிற ஆட்சி பா.ஜ.க. ஆட்சியாக இருக்கும். அதற்காக நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பேசும்போது, “தமிழகத்தில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த அனைத்து கட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தோம். ஆனால் அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவில்லை. டெங்கு காய்ச்சல் பாதிப்பால் ஏராளமானவர்கள் உயிரிழந்து வருகிறார்கள். இனியும் அரசு தாமதிக்காமல் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்றார்.

    கூட்டத்தில் நயினார் நாகேந்திரன் தலைமையில் மாற்று கட்சியை சேர்ந்த ஏராளமானவர்கள் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தனர். அவர்களை மத்திய மந்திரி பொன.ராதாகிருஷ்ணன் சால்வை அணிவித்து வரவேற்றார்.

    Next Story
    ×