search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பள்ளிப்பட்டு அருகே கிராமத்தில் வெள்ளம் புகுந்தது: 150 குடும்பத்தினர் தவிப்பு
    X

    பள்ளிப்பட்டு அருகே கிராமத்தில் வெள்ளம் புகுந்தது: 150 குடும்பத்தினர் தவிப்பு

    சித்தூர் மாவட்டத்தில் இருந்து வெளியேறிய மழை வெள்ளம் கால்வாய் வழியாக பள்ளிப்பட்டு அருகே உள்ள 150 வீடுகளை சூழ்ந்தது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர்.

    பள்ளிப்பட்டு:

    ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள அம்மாபள்ளி அணை நிரம்பியது.

    இதையடுத்து அம்மாபள்ளி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இதனால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

    இதற்கிடையே சித்தூர் மாவட்டத்தில் இருந்து வெளியேறிய மழை வெள்ளம் கால்வாய் வழியாக பள்ளிப்பட்டு அருகே உள்ள ஆர்.கே.பேட்டையை அடுத்த தேவலம்பாபுரம் கிராமத்துக்குள் நேற்று இரவு புகுந்தது.

    சுமார் 150 வீடுகளை காட்டாற்று வெள்ளம் சூழ்ந்தது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர். நேரம் செல்ல செல்ல கிராமத்துக்குள் தண்ணீர் வரத்து மேலும் அதிகமானது.

    இதை தொடர்ந்து கிராம மக்கள் அருகில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தங்க வைக்கப்பட்டனர். தகவல் அறிந்ததும் நரசிம்மன் எம்.எல்.ஏ., ஆர்.டி.ஓ. ஜெயராமன், தாசில்தார் தமிழ்ச் செல்வி மற்றும் அதிகாரிகள் விரைந்து வந்தனர்.

    கிராமத்தினர் அனைவரையும் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தினர். பின்னர் அவர்களுக்கு தேவையான உணவு, தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுத்தனர்.

    இன்று காலை கிராமத்துக்குள் புகுந்த வெள்ள நீர் வடிந்தது. மேலும் சித்தூரில் பலத்த மழை பெய்ததால் மீண்டும் காட்டாற்று வெள்ளம் கிராமத்துக்குள் புகுந்து விடுமோ என்று பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். மழை வெள்ளம் வரும் பகுதியில் கால்வாய் அருகே தடுப்பணை கட்டினால் திடீர் வெள்ளத்தை சமாளிக்க முடியும் என்று கிராம மக்கள் தெரிவித்தனர்.

    கொசஸ்தலை ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கையடுத்து கரையோர கிராம மக்களுக்கு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

    இது தொடர்பாக கலெக்டர் சுந்தரவல்லி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    ஆந்திரமாநிலம், அம்மா பள்ளி அணையிலிருந்து 1,300 கனஅடி தண்ணீர் கொசஸ்தலை ஆற்றில் திறந்துவிடப்பட உள்ளதால் கொசஸ்தலையயாற்றின் கரையோரம் உள்ள மக்கள் கவனமாக இருக்க வேண்டும்.

    வெளியகரம், நெடியம், சாமந்தவாடா தரைப் பாலத்திற்கு மேல் தண்ணீர் செல்வதால் இரவு நேரத் தில் பாலத்தை கடக்க முயலவேண்டாம் என எச்சரிக்கப்படுகிறார்கள். மேலும், பாதுகாப்பு பணியில் வருவாய்த்துறை, காவல் துறை, தீயணைப்புத் துறை மற்றும் பொதுப்பணித் துறை அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    Next Story
    ×