search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முல்லைப்பெரியாறு அணையில் மூவர் குழு ஆய்வு
    X

    முல்லைப்பெரியாறு அணையில் மூவர் குழு ஆய்வு

    முல்லைப்பெரியாறு அணையில் 15 மாதங்களுக்கு பிறகு மூவர் குழு வரும் 16-ந் தேதி ஆய்வு நடத்த உள்ளது.
    கூடலூர்:

    முல்லைப்பெரியாறு அணையில் 142 அடிவரை தண்ணீர் தேக்கிக் கொள்ளலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பிறகு அணையை கண்காணிக்க மூவர் குழு அமைக்கப்பட்டது. இக்குழுவிற்கு உதவியாக 5 பேர் கொண்ட துணைக்குழு நியமிக்கப்பட்டு 3 மாதத்திற்கு ஒருமுறை இக்குழு ஆய்வு நடத்தி அறிக்கை அளித்து வருகிறது.

    தற்போது சிவராஜம் என்பவரது தலைமையிலான மூவர்குழு செயல்பட்டு வருகிறது. முல்லைப் பெரியாறு அணையில் கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக நீர்மட்டம் அதிகரித்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    இந்நிலையில் அணையில் மேற்கொள்ள வேண்டிய பராமரிப்பு பணிகள் குறித்து மத்திய நீர்வள ஆணையர் செயற்பொறியாளர் ராஜேஸ் தலைமையிலான துணைக்குழு நாளை ஆய்வு செய்கிறது.

    இக்குழுவில் தமிழகத்தின் சார்பில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சுப்பிரமணியன், உதவி செயற்பொறியாளர் சாம்இர்வின், கேரள அரசு சார்பில் நீர்பாசன செயற்பொறியாளர் ஜார்ஜ் டேணியல், உதவி பொறியாளர் பிரசீது ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

    இக்குழுவினர் வழக்கம் போல் மெயின் அணை, பேபி அணை, ‌ஷட்டர், கேலரி ஆகிய பகுதிகளில் பார்வையிட்டு அதன் அறிக்கையை மூவர் குழுவிடம் சமர்பிப்பார்கள்.

    இதனைத் தொடர்ந்து வரும் 16-ந் தேதி அணை பாதுகாப்பு அமைப்பின் தலைமை பொறியாளர் சிவராஜன் தலைமையிலான மூவர்குழு ஆய்வு நடத்த வருகிறது.

    இக்குழுவில் தமிழகத்தின் சார்பில் பொதுப்பணித்துறை கூடுதல் செயலாளர் பிரபாகர், கேரள அரசின் சார்பில் நீர்வள ஆதார அமைப்பின் செயலர் டிங்கு பிஸ்வால் இடம்பெற்றுள்ளனர். 15 மாதங்களுக்கு பிறகு மூவர்குழு பெரியாறு அணையில் ஆய்வு நடத்த உள்ளதால் இது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் மூவர் குழு ஆய்வு நடத்தி சென்ற பிறகு தற்போதுதான் வர உள்ளது. அப்போது தமிழகத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன. குறிப்பாக வல்லக்கடவில் இருந்து பெரியாறு அணைக்கு வரும் வனப்பாதையை சீரமைக்க அனுமதி வேண்டும்.

    கேரள வனத்துறையினரின் தொடர் கெடுபிடிகளை கண்டிக்க வேண்டும். அணைப் பகுதியில் துண்டிக்கப்பட்ட மின் இணைப்பை மீண்டும் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வைக்கப்பட்டன.

    இந்த கோரிக்கைகளுக்கு தற்போது நடைபெறும் ஆய்விற்கு பிறகாவது தீர்வு கிடைக்குமா? என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.
    Next Story
    ×