search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உச்சநீதிமன்றம் - அரசின் நடவடிக்கையால் பட்டாசு தொழில் முடங்கும் அபாயம்: உற்பத்தியாளர்கள் வேதனை
    X

    உச்சநீதிமன்றம் - அரசின் நடவடிக்கையால் பட்டாசு தொழில் முடங்கும் அபாயம்: உற்பத்தியாளர்கள் வேதனை

    டெல்லியில் பட்டாசு வெடிக்கவும், விற்பனை செய்யவும் உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்த உத்தரவால் சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
    விருதுநகர்:

    சிவகாசி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 850-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. இதில் நேரடியாகவும், மறைமுகமாகவும் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை பெற்று வருகின்றனர்.

    பட்டாசு உற்பத்திக்கு அரசு பல்வேறு வகையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளதால் அத்தொழில் அண்மை காலமாக நலிவடைந்து வருகிறது.

    பட்டாசு வெடிப்பதால் ஒளி மற்றும் காற்று மாசு ஏற்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தீபாவளி, தசரா உள்ளிட்ட பல்வேறு பண்டிகை காலங்களில் தென்னிந்தியாவை விட, வட இந்தியாவில்தான் பட்டதாசு விற்பனை அதிகமாக இருக்கும்.

    குறிப்பாக டெல்லி, மராட்டியம், குஜராத், ராஜஸ்தான், அரியானா ஆகிய மாநிலங்களில் மட்டும் பல ஆயிரம்கோடி அளவுக்கு பட்டாசு விற்பனை நடந்து வருகிறது.

    இம்மாநிலங்களுக்கு சிவகாசியில் இருந்துதான் 90 சதவீத பட்டாசுகள் சப்ளை செய்யப்படுகின்னறன.

    கடந்த ஒரு மாதமாக சிவகாசியில் இருந்து வடமாநிலங்களுக்கு பட்டாசுகள் லாரி மூலம் கொண்டு செல்லப்பட்டன. சுமார் ரூ. 2 ஆயிரம் கோடி மதிப்பிலான பட்டாசுகள் இதுவரை வடமாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளன.

    தீபாவளிக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் திடீரென தலைநகரான டெல்லியில் பட்டாசு விற்பனைக்கு உச்சநீதின்றம் தடை விதித்துள்ளது பட்டாசு விற்பனையாளர்களை வேதனை அடைய செய்துள்ளது.

    இதுகுறித்து தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்க பொதுச்செயலாளர் மாரியப்பன் கூறியதாவது:-

    மத்திய அரசு பட்டாசு உற்பத்திக்கு 28 சதவீத ஜி.எஸ்.டி. வரி விதித்துள்ளது. இதன் காரணமாக பட்டாசு விலைகள் கணிசமாக உயர்ந்துள்ளன. கடந்த ஆண்டு சிவகாசியில் ரூ. 4 ஆயிரம் கோடி மதிப்பில் இருந்த பட்டாசு உற்பத்தி இந்த ஆண்டு ரூ. 2 ஆயிரம் கோடி உற்பத்தி என்ற அளவில் குறைந்துள்ளது.

    பெரும்பாலான வடமாநிலங்களில் பட்டாசு விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் மொத்த விற்பனையாளர்களிடம் இருந்து ஆர்டர்கள் வரவில்லை. தொண்டு நிறுவனங்கள், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக கூறி பட்டாசு விற்பனைக்கு தடை கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன.

    கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் டெல்லியில் பட்டாசு விற்பனைக்கு நீதிமன்றம் தடை விதித்திருந்தது. இது தொடர்பாக நாங்களும் டெல்லி பட்டாசு விற்பனையாளர்களும நீதி மன்றத்தில் கோரிக்கை விடுத்ததையடுத்து கடந்த மாதம் 12-ந்தேதி முதல் பட்டாசு விற்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில் நேற்று மீண்டும் பட்டாசு விற்பனைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. தீபாவளி முடிந்து நவம்பர் 1-ந்தேதிக்கு பிறகு பட்டாசு கடைகளை திறக்கலாம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    தீபாவளி முடிந்து கடையை திறப்பதும் ஒன்றுதான். திறக்காமல் இருப்பதும் ஒன்றுதான். இந்த ஆண்டு ரூ. 2 ஆயிரம் கோடி மதிப்பிலான பட்டாசுகள் வட மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

    சிலர் ரொக்கமாகவும், கடனாகவும் பட்டாசுகளை அனுப்பியிருக்கலாம். உச்சநீதிமன்றம் - அரசின் தடை உத்தரவால் பட்டாசு விற்பனை தடைபட்டு மீண்டும் உற்பத்தி நிறுவனங்களுக்கே பட்டாசுகள் திரும்பி வரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மும்பையிலும் இதேபோன்று தடை விதிக்கப்பட்டால் பட்டாசு விற்பனை பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்தும்.

    தமிழகத்தில் சென்னை, மதுரை, நெல்லை, கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பட்டாசு விற்பனை கடைகளுக்கு தற்காலிக லைசென்சு இதுவரை வழங்கப்படவில்லை. இதனால் பட்டாசு விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது.

    உச்சநீதிமன்றம், அரசு நடவடிக்கையால் பட்டாசு தொழில் முற்றிலும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பல லட்சம் தொழிலாளர்களும் இதனால் வேலை இழப்பார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சிவகாசியை சேர்ந்த பட்டாசு ஆலை உரிமையாளர் செல்வராஜன் என்பவர் கூறுகையில், கடந்த 2016-ம் அண்டு முதல் இந்த ஆண்டு செப்டம்பர் வரை ஏற்கனவே டெல்லியில் பட்டாசு விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது உச்சநீதிமன்றம் நவம்பர் 1-ந்தேதி வரை பட்டாசு விற்க தடை விதித்துள்ளது.

    தீபாவளி பண்டிகை காலங்களில்தான் பட்டாசு விற்பனை நன்றாக இருக்கும். ஆனால் டெல்லியில் பட்டாசு விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் 20 சதவீத பட்டாசு விற்பனை பாதிக்கப்படும். இந்த ஆண்டு சிவகாசியில் இருந்து ரூ. 2 ஆயிரம் கோடி மதிப்பிலான பட்டாசுகள் வடமாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளன. இந்த தடை உத்தரவால் பட்டாசுகள் தேக்கம் அடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்றார்.

    Next Story
    ×