search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஹெலிகாப்டர் விபத்தில் மரணம்: தமிழக ராணுவ வீரரின் உடல் சொந்த ஊரில் அடக்கம்
    X

    ஹெலிகாப்டர் விபத்தில் மரணம்: தமிழக ராணுவ வீரரின் உடல் சொந்த ஊரில் அடக்கம்

    அருணாசலபிரதேசத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிர் இழந்த தமிழக ராணுவ வீரர் பாலாஜியின் உடல் அவரது சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது.
    பூந்தமல்லி:

    அருணாசலபிரதேச மாநிலம் தவாங் அருகே, கடந்த 6-ந் தேதி, இந்திய விமானப்படைக்கு சொந்தமான எம்.ஐ.17 ரக ஹெலிகாப்டர் பணியில் ஈடுபட்டிருந்தபோது தரையில் விழுந்து நொறுங்கியது.

    இதில், சென்னை நீலாங்கரையை சேர்ந்த பாலாஜி (வயது 34), உள்பட 2 ராணுவ வீரர்களும், 5 விமானப்படை வீரர்கள் என 7 பேர் உயிர் இழந்தனர்.

    ஹெலிகாப்டர் விபத்தில் உயிர் இழந்த ராணுவ வீரர் பாலாஜியின் உடல் நேற்று காலை விமானம் மூலம் சென்னை கொண்டுவரப்பட்டது.

    பின்னர் அவரது உடல் சென்னை விமான நிலையத்தில் இருந்து, போரூரை அடுத்த கொளப்பாக்கத்தில் உள்ள அவரது அண்ணன் வீட்டுக்கு ராணுவ மரியாதையுடன் எடுத்து செல்லப்பட்டது.

    அவரது உடல் வைக்கப்பட்டு இருந்த பெட்டியை கண்டு அவரது மனைவி, தாய், தந்தை, உறவினர்கள் மற்றும் அந்த பகுதி மக்கள் என அனைவரும் கதறி அழுத சம்பவம் காண்போரின் நெஞ்சை உருக்கும் வகையில் இருந்தது.

    காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா, அமைச்சர் பெஞ்சமின் ஆகியோர் நேரில் வந்து பாலாஜியின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

    அப்போது அவர்கள், தமிழக அரசு சார்பில் ரூ.20 லட்சத்திற்கான காசோலையை பாலாஜியின் குடும்பத்தினரிடம் வழங்கினர்.

    அதன் பின்னர் இணை கமிஷனர் சந்தோஷ் குமார், துணை கமிஷனர் சர்வேஷ்ராஜ் ஆகியோர் தலைமையில் போலீசார் பாலாஜியின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள். ஆலந்தூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. தா.மோ.அன்பரசன் நேரில் வந்து பாலாஜியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

    அதனை தொடர்ந்து தென் பிராந்திய ராணுவத்தின் தலைமை அதிகாரி லெப்டினல் ஜெனரல் ஆர்.கே.ஆனந்து, பாலாஜியின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

    இதையடுத்து, பாலாஜியின் உடல் அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனத்தில் வைத்து அப்பகுதியில் உள்ள சுடுகாட்டிற்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு 24 குண்டுகள் முழங்க பாலாஜியின் உடலுக்கு முழு ராணுவ மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

    பாலாஜி உடல் வைக்கப்பட்டிருந்த பெட்டி மீது போர்த்தி இருந்த தேசிய கொடி அவரது பெற்றோரிடம் கொடுக்கப்பட்டது.

    ராணுவ வீரர் பாலாஜி உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் வந்து அஞ்சலி செலுத்தினர்.

    ராணுவ வீரர் பாலாஜி குறித்து அவரது உறவினர்கள் கூறியதாவது:-



    இறந்து போன பாலாஜிக்கு கண்மணி என்ற மனைவியும், பிரக்யூன் (6), விகாஷ் (4) என்ற இரு மகன்களும் உள்ளனர்.

    பாலாஜிக்கு சிறு வயது முதலே ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்ற கனவு இருந்து வந்தது. இதற்காக அவர் அயராது உழைத்தார்.

    ஒரு முறை உடல் தகுதி தேர்விலும், மற்றொரு முறை ஓட்டப்பந்தயத்திலும் தோல்வி அடைந்தார். இருப்பினும் மூன்றாவது முயற்சியில் வெற்றி பெற்று ராணுவத்தில் சேர்ந்தார். அவர் ராணுவத்தில் சேர்ந்து 17 வருடங்கள் ஆகி விட்டது.

    தினமும் இரவு நேரத்தில் வேலை முடிந்தவுடன் மனைவி மற்றும் குழந்தைகளுடன் ஒருமுறையாவது செல்போனில் பேசி விடுவார். ஒரு மாத விடுமுறையில் சென்னைக்கு வந்து தனது குடும்பத்துடன் தீபாவளியை கொண்டாட திட்டமிட்டு இருந்தார். இதற்காக அவர் 8-ந் தேதி சென்னை வர முடிவு செய்திருந்தார்.

    சம்பவத்தன்று அந்த ஹெலிகாப்டரில் செல்ல வேண்டிய ஒருவருக்கு உடல் நலம் சரியில்லாத காரணத்தால், நாம் நாளை ஊருக்கு செல்ல இருக்கிறோம் கடைசியாக இந்த பணியை செய்துவிட்டு செல்லலாம் என்று பாலாஜி சென்றார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக ஹெலிகாப்டர் விபத்தில் பாலாஜி இறந்து விட்டார்.

    ஆண்டுதோறும் 1 மாத விடுமுறையில் சென்னைக்கு வந்து தனது குடும்பத்துடன் தீபாவளியை கொண்டாடி விட்டு செல்வார். ஆனால் இந்த தீபாவளி பண்டிகைக்கு முன்பு அவரது உடல் மட்டும் தான் சென்னைக்கு வந்துள்ளது.

    இவ்வாறு அவரது உறவினர்கள் உருக்கத்துடன் தெரிவித்தனர்.

    Next Story
    ×