search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கம்போடியாவில் தற்கொலை செய்த ரவுடி ஸ்ரீதர் உடலை இந்தியா கொண்டு வருவதில் சிக்கல்
    X

    கம்போடியாவில் தற்கொலை செய்த ரவுடி ஸ்ரீதர் உடலை இந்தியா கொண்டு வருவதில் சிக்கல்

    கம்போடியாவில் தற்கொலை செய்த ஸ்ரீதரின் உடலை காஞ்சீபுரம் கொண்டு வருவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளதாக கூறப்படுகின்றது.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் அடுத்த திருப்பருத்திக்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீதர் (45) சாராய வியாபாரியான இவர் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட தொழில்களில் ஈடுபட்டார்.

    பின்னர் நில உரிமையாளர்களை மிரட்டி அடி மாட்டு விலைக்கு நிலங்களை வாங்கி வேறோருவருக்கு அதனை அதிக விலைக்கு விற்று பல கோடி ரூபாய் சொத்து சேர்த்த நிலையில் பல்வேறு கொலைச் சம்பவங்களில் ஈடுபட்டதால் போலீசாரின் தீவிர கண்காணிப்பு வளையத்தில் இருந்தார்.

    இதனால் ஸ்ரீதர் போலி பாஸ்போர்ட் மூலம் துபாய் தப்பிச்சென்றார்.

    அங்கிருந்தபடியே பல்வேறு குற்ற நடவடிக்கைளில் ஈடுபட்டதாலும் வழக்குகளில் முறையாக நீதிமன்றங்களில் ஆஜர் ஆகாததாலும் ஸ்ரீதர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.

    அவரைப் பற்றிய விபரங்கள் சர்வதேச விமான நிலையங்களுக்கு அனுப்பப்பட்டு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் ஸ்ரீதர் கம்போடியா நாட்டில் கடந்த 4-ந் தேதி தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியானது.

    காஞ்சீபுரத்தில் இருந்து அவரது வழக்கறிஞர் மலையூர் புருஷோத்தமன் மற்றும் ஸ்ரீதரின் மகள் தனலட்சுமி ஆகியோர் கம்போடியா சென்ற நிலையில் ஸ்ரீதரின் உடலை காஞ்சீபுரம் கொண்டு வருவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளதாக கூறப்படுகின்றது.

    இது குறித்து இன்று காலை கம்போடியாவில் உள்ள ஸ்ரீதரின் வழக்கறிஞர் மலையூர் புருஷோத்தமனை மாலை மலர் நிருபர் வாட்ஸ்அப் காலில் தொடர்பு கொண்டு பேசியபோது அவர் கூறியதாவது:-

    ஸ்ரீதரின் மரணம் குறித்து கம்போடிய போலீஸ் அளித்த விபரங்கள் குறித்த ஆவணங்கள் போன்றவற்றை காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு உள்ளிட்டோரிடம் அளித்து ஸ்ரீதரின் உடலை முறைப்படி காஞ்சீபுரம் கொண்டு வர அவரின் மகள் தனலட்சுமி ஆவணங்களுடன் இந்தியா புறப்பட்டுள்ளார். இன்று காலை அவர் காஞ்சீபுரம் சென்று விட்டதாக தகவல் வந்துள்ளது.

    மாவட்ட நிர்வாகம் முறையான ஆவணங்களை அளித்த பின்னர் ஸ்ரீதரின் உடல் இந்தியா கொண்டு வரப்படும். மேலும் கம்போடியாவில் சனி, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் அரசுப் பணிகள் ஏதும் நடக்காது என்ற நிலையில் உடலை கொண்டு வர திங்கட்கிழமை முதல் விரைவான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார்.

    இந்நிலையில் எல்லப்பா நகர், திருப்பருத்திக்குன்றம் பகுதிகளில் உள்ள ஸ்ரீதரின் வீட்டிற்கு வந்து செல்லும் நபர்கள் யார் யார் என ரகசிய போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டிருப்பதால் அப்பகுதிகளில் ஆள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்படுகின்றது.

    மேலும் மாவட்டம் முழுவதும் ஸ்ரீதர் தொடர்புடைய ரவுடிகள் அசம்பாவித சம்பவங்களில் ஈடுபடுவதை தடுக்க போலீசார் தீவிர கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    கம்போடியாவில் ஸ்ரீதர் இருந்த போது பணவரத்து முற்றிலும் தடுக்கபட்டிருந்ததாலும் அங்குள்ள ஆடம்பர சூதாட்ட விடுதிகளில் சூதாடி பல லட்சக்கணக்கான ரூபாய்களை ஸ்ரீதர் இழந்ததாலும் மன உளைச்சலில் இருந்ததாகவும் அதனால் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகின்றது.
    Next Story
    ×