search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவை அரசு ஆஸ்பத்திரியில் காய்ச்சல் வார்டில் சிகிச்சை பெற்று வருபவர்களை படத்தில் காணலாம்.
    X
    கோவை அரசு ஆஸ்பத்திரியில் காய்ச்சல் வார்டில் சிகிச்சை பெற்று வருபவர்களை படத்தில் காணலாம்.

    திருப்பூரில் வைரஸ் காய்ச்சலுக்கு 9-ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு

    திருப்பூரில் வைரஸ் காய்ச்சலுக்கு 9-ம் வகுப்பு மாணவன் பலியானார். கோவை அரசு ஆஸ்பத்திரியில் டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    கோவை:

    கேரளாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு டெங்கு காய்ச்சலில் ஏராளமான பேர் பாதிக்கப்பட்டனர். குறிப்பாக கோவை மாவட்ட எல்லையில் அமைந்துள்ள பாலக்காடு மாவட்டத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் டெங்குவால் பாதிக்கப்பட்டனர்.

    அங்குள்ள ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற இடம் இல்லாததால் டெங்குவால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஆஸ்பத்திரிகளுக்கு வந்து சென்றனர்.

    இதையடுத்து டெங்கு காய்ச்சல் கோவை மாவட்டத்திலும் வேகமாக பரவியது. குறிப்பாக கேரள எல்லையோர கிராமங்களில் முதலில் பரவிய டெங்கு காய்ச்சல் தற்போது மாவட்டம் முழுவதும் பரவியது வருகிறது.

    கோவையில் டெங்கு காய்ச்சல் பரவிய நேரத்தில் பலத்த மழை பெய்தது. இதனால் கொசு உற்பத்தி அதிகமாகி டெங்குவின் தாக்கமும் அதிகரித்தது. இதனால் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் காய்ச்சல் காரணமாக ஏராளமான பேர் சிகிச்சைக்கு வந்தனர்.

    இதன் காரணமாக கோவை அரசு ஆஸ்பத்திரியில் தனி வார்டு அமைத்து டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. டெங்கு காய்ச்சல் காரணமாக கோவை மாவட்டத்தில் இதுவரை 36 பேர் இறந்து உள்ளனர். வைரஸ் காய்ச்சலுக்கு 14 பேர் இறந்து உள்ளனர். இது தவிர வைரஸ் காய்ச்சலுக்கு 14 பேரும் பலியாகி உள்ளனர்.

    தற்போது டெங்கு காய்ச்சலுக்கு 38 பேரும், வைரஸ் காய்ச்சலுக்கு 176 பேரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    டெங்குவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். இது தவிர வைரஸ் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டவர்களின் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு அவர்களுக்கும் டெங்கு பாதிப்பு இருக்கிறதா? என்று கண்காணித்து வருகிறார்கள்.

    அவ்வாறு யாராவது டெங்குவால் பாதிக்கப்பட்டு இருந்தால் அவர்களை உடனடியாக தனி வார்டுக்கு மாற்றி சிகிச்சை அளித்து வருகிறார்கள். மேலும் தனியார் ஆஸ்பத்திரிகளிலும் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சலுக்கு 500-க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இதே போல் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் 76 பேர் வைரஸ் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களில் யாருக்காவது டெங்கு இருப்பது தெரிந்தால் உடனடியாக அவர்களை கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து வருகிறார்கள்.

    திருப்பூர் அருகே உள்ள நெருப்பெரிச்சல் ஜி.எம். நகரை சேர்ந்த கணேசன் என்ற கட்டிட தொழிலாளியின் மகன் கவுதம்ராஜ் (14). இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சில நாட்களாக காய்ச்சல் காரணமாக அவதிப்பட்டு வந்த மாணவரை அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு காய்ச்சல் குணமாகவில்லை இதையடுத்து திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். ஆனாலும் தொடர்ந்து காய்ச்சல் இருந்தது.

    இதையடுத்து பெற்றோர் மீண்டும் கவுதம்ராஜை திருப்பூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாணவர் கவுதம் ராஜ் நேற்று பரிதாபமாக இறந்தார்.

    இதே போல் ஊட்டி அரசு ஆஸ்பத்திரியிலும் ஏராளமான பேர் வைரஸ் காய்ச்சலுக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் யாருக்காவது டெங்கு இருந்தால் அவர்களையும் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து வருகிறார்கள். டெங்கு காய்ச்சலுக்கு 2 பேர் ஊட்டியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    கோவை அரசு ஆஸ்பத்திரியில் கோவை, திருப்பூர், ஊட்டி ஆகிய 3 மாவட்டங்களில் டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுதவிர மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் நோயாளிகள் கூட்டம் அலைமோதுகிறது.



    Next Story
    ×