search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அப்துல்கலாம் மணிமண்டபத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்
    X

    அப்துல்கலாம் மணிமண்டபத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்

    கடந்த நான்கு நாட்களில் மட்டும் அப்துல் கலாம் மணிமண்டபத்தை 1½ லட்சத்திற்கும் அதிகமானோர் பார்வையிட்டு சென்றனர்.
    ராமேசுவரம்:

    முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் நினைவிடம் ராமேசுவரம் அருகே பேய்கரும்பு பகுதியில் உள்ளது. இங்கு மத்திய அரசின் பாதுகாப்பு துறை சார்பில் அப்துல்கலாம் மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது. இதனை சில மாதங்களுக்கு முன்பு பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

    மணிமண்டபத்தில் அப்துல் கலாமின் சாதனைகள், அவருடைய அரிய புகைப்படங்கள், வீணை வாசிப்பது போன்ற சிலை மற்றும் அவரது வாழ்க்கை வரலாறு குறித்த அரிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

    இதனை நாள்தோறும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பார்வையிட்டு செல்கின்றனர்.

    ராமேசுவரம் கோவிலுக்கு வரும் வடமாநில பக்தர்கள் அப்துல்கலாம் மணிமண்டபத்தை தவறாமல் வந்து பார்த்து செல்கின்றனர்.

    பொதுமக்கள் மணி மண்டபத்தை பார்வையிட அரசு சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ராமேசுவரம் கோவிலில் இருந்து பஸ் வசதி மற்றும் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.

    இந்த நிலையில் சரஸ்வதி பூஜை, விஜயதசமி, காந்தி ஜெயந்தி என தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை விடப்பட்டது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் சேர்ந்த லட்சக்கணக்கானோர் ராமேசுவரம் கோவிலுக்கு வந்தனர். சாமி கும்பிட்டு விட்டு அவர்கள் தனுஷ்கோடி, அப்துல் கலாம் மணிமண்டபம் போன்ற இடங்களை பார்வையிட்டனர். கடந்த 4 நாட்களில் மட்டும் அப்துல் கலாம் மணிமண்டபத்தை 1½ லட்சத்திற்கும் அதிகமானோர் பார்வையிட்டு சென்றுள்ளனர்.
    Next Story
    ×