search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தர்மபுரியில் ஏரி உடைந்து வயலில் தண்ணீர் புகுந்ததால்நெற்பயிர்கள் மூழ்கி இருக்கும் காட்சி
    X
    தர்மபுரியில் ஏரி உடைந்து வயலில் தண்ணீர் புகுந்ததால்நெற்பயிர்கள் மூழ்கி இருக்கும் காட்சி

    சேலத்தில் 3-வது நாளாக இரவில் கொட்டிய கனமழை - வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது

    சேலம் மாவட்டத்தில் 3-வது நாளாக இரவில் கனமழை பெய்ததால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. தர்மபுரியில் ஏரி உடைந்து நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது.
    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் 3-வது நாளாக நேற்று இரவு கனமழை பெய்தது. மாநகரில் அஸ்தம்பட்டி, கன்னங்குறிச்சி, அரிசிபாளையம், சாமிநாதபுரம், ஜங்சன், கிச்சிப்பாளையம், கொண்டலாம்பட்டி, சீலநாயக்கன்பட்டி, அம்மா பேட்டை உள்பட பல பகுதிகளில் கனமழை பெய்தது. மழை நீருடன் சாக்கடை நீரும் கலந்து சாலையில் ஆறாக ஓடியது.

    இதில் கிச்சிப்பாளையம் நாராயணன் காலனி, பெரமனூர், பொன்னம்மாபேட்டை, அரிசிபாளையம், சிவதாபுரம் உள்பட பல பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. வீடுகளுக்குள் புகுந்த தண்ணீரை பாத்திரங்கள் மூலம் வீட்டில் வசித்தவர்கள் அப்புறப்படுத்தினர். இதில் பெரும்பாலானோர் இரவில் தூங்க முடியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டது.

    இந்த கனமழைக்கு தாக்கு பிடிக்க முடியாமல் சேலம் அரிசிபாளையம் கிருஷ்ணன் தெருவில் உள்ள சரவணன் என்பவருக்கு சொந்தமான 2 மாடிவீடு இடிந்து விழுந்தது. அதன் அருகே நின்ற சரவணனின் கார் மற்றும் பைக் சேதமானது.

    மேலும் இடிந்த சுவர் அந்த வழியாக சென்ற மின்வயரில் விழுந்ததால் மின்கம்பங்கள் சாய்ந்தன. அப்போது மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனால் அந்த பகுதியில் இரவு முழுவதும் மின்சாரம் இல்லாததால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.

    ஏற்காட்டில் நேற்றிரவு 9 மணி அளவில் தொடங்கிய மழை இன்று அதிகாலை வரை நீடித்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக ஏற்காட்டில் 52.4 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. இதனால் ஏற்காட்டில் கடும் குளிர் நிலவுகிறது. மழையைத் தொடர்ந்து மின்தடை ஏற்பட்டதால் விடிய, விடிய கொசுக்கடியால் பொதுமக்கள் தவித்தனர்.

    ஏற்காட்டில் பெய்த தொடர்மழையால் காபி கொட்டைகள் சேதமடைந்து செடிகளிலிருந்து உதிரும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் கமலா ஆரஞ்சு உற்பத்தி அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர். இன்று காலையில் ஏற்காட்டில் வானம் மப்பும், மந்தாரமுமாக காட்சி அளித்ததுடன் லேசான தூரலும் நீடித்ததால் ரம்மியமான சூழல் நிலவுகிறது.

    சேலம் புறநகரில் வாழப்பாடி, காடையாம்பட்டி, ஆனைமடுவு, சங்ககிரி, ஓமலூர், மேட்டூர் உள்பட பல பகுதிகளில் 3-வது நாளாக பலத்த மழை பெய்தது. இதனால் ஏரி மற்றும் குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதில் வாழப்பாடியில் அதிகபட்சமாக 29.2 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளது. காடையாம்பட்டி 27, ஆனைமடுவு 25, சங்ககிரி 23.1, ஓமலூர் 22.6, மேட்டூர் 19.8, சேலம் 18.5, கெங்கவல்லி 16.4, வீரகனூர் 16, பெத்தநாயக்கன்பாளையம் 15, கரியகோவில் 12, ஆத்தூர் 7.6, எடப்பாடி 6.6, தம்மம்பட்டி 5.2, சேலம் மாவட்டம் முழுவதும் மொத்தம் 296.4 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    தர்மபுரி மாவட்டத்தில் நேற்றிரவு தொடங்கிய மழை 3-வது நாளாக இன்று காலை வரை நீடித்தது. இதில் தர்மபுரி கலெக்டரேட் பகுதியில் 76 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளது. ஒகேனக்கல் 74, தர்மபுரி டவுன் 61, பாலக்கோடு 59, பாப்பிரெட்டிப்பட்டி 40, மாரண்டஅள்ளி 38, பென்னாகரம் 20, அரூரில் 2.2 மி.மீட்டர் மழையும் பெய்துள்ளது.

    இந்த மழையால் வத்தல் மலையிலிருந்து அதிக அளவில் தண்ணீர் தம்மனம்பட்டி வெள்ளாட்சி ஏரிக்கு வந்தது. இந்த ஏரி கடந்த சில மாதங்களாக தூர்வாரும் பணி நடந்து வந்தது. தற்போது வரை பணி நிறைவு பெறாத நிலையில் மதகு பகுதியில் நேற்றிரவு திடீர் உடைப்பு ஏற்பட்டதால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    இதனால் அந்த பகுதியில் 70 ஏக்கர் பரப்பளவில் உள்ள நெல் மற்றும் பருத்தி பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது. 3 கிணறுகளையும் மணல் மூடியது. இதனால் அந்த பகுதி விவசாயிகள் கவலையில் ஆழ்ந்து உள்ளனர். மேலும் உடைப்பு ஏற்பட்ட பகுதியை உடனே சீரமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 3-வது நாளாக நேற்று மழை பெய்தது. இதில் பாரூர் பகுதியில் அதிகபட்சமாக 56.4 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளது. தளி 45, பெணுகொண்டாபுரம் 52.3, கிருஷ்ணகிரி 52, தேன்கனிக்கோட்டை 26, ஓசூர் 8, அஞ்செட்டி 10.4, நெடுங்கல் 29, போச்சம்பள்ளி 19, சூளகிரி 6, ஊத்தங்கரையில் 5.6 மி.மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது.
    Next Story
    ×