search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னையில் டெங்கு காய்ச்சலால் 200 பேர் பாதிப்பு
    X

    சென்னையில் டெங்கு காய்ச்சலால் 200 பேர் பாதிப்பு

    சென்னையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 200 பேர் அரசு மருத்துவமனைகிளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    சென்னை:

    தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அனைத்து மாவட்டங்களிலும் முன் எச்சரிக்கை சுகாதார நடவடிக்கைகளை மேற்கொண்டதால் உயிர் இழப்பு பெருமளவு தடுக்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த காலங்களை விட டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளது.

    இந்த ஆண்டின் தொடக்கம் முதல் இதுவரையில் சுமார் 8 ஆயிரம் பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்புயுள்ளனர்.

    கோவை, கன்னியாகுமாரி, நெல்லை மாவட்டங்களில் தொடக்கத்தில் டெங்கு காய்ச்சல் அதிகமாக இருந்தது. தீவிர நடவடிக்கையின் மூலம் அங்கு கட்டுப்படுத்தப்பட்டது. இதையடுத்து சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் தற்போது அதிகமாக காணப்படுகிறது. சென்னை மற்றும் காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும் டெங்கு காய்ச்சல் தாக்கம் அதிகரித்துள்ளது.

    சென்னையில் டெங்கு காய்ச்சலுக்கு பள்ளி மாணவர்கள் 2 பேரும் கல்லூரி மாணவி ஒருவரும் பலியாகி இருக்கிறார்கள். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தாக்கி வரும் ‘ஏடிஸ்’ கொசுக்களை ஒழிக்க நடவடிக்கை எடுத்த போதிலும் கட்டுப்படுத்த முடியவில்லை.

    பள்ளி, கல்லூரிகளில் உள்ள குடிநீர் தொட்டிகள், வீடுகளில் உள்ள தொட்டிகள், பாத்திரங்களில் தண்ணீரை சேமித்து வைப்பதில் இருந்து இக்கொசுக்கள் பெருமளவு உற்பத்தியாகின்றன. மேலும் டயர், தேங்காய் சிரட்டை, ஆட்டு உரல் போன்றவற்றில் தேங்கும் மழை நீரில் இருந்தும் உற்பத்தியாகி பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன.

    சென்னையில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் காய்ச்சல் வார்டுகள் தற்போது நிரம்பி வழிகின்றன. ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் தினமும் காய்ச்சல் பாதிக்கப்பட்டு புறநோயாளிகளாக 150 பேர் சிகிச்சை பெற்று செல்கின்றனர். 25 பேர் வார்டுகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் நிலை உள்ளது. தற்போதைய நிலவரப்படி அங்கு 20 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    வார்டுகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு நிலவேம்பு குடிநீர், சுடச்சுட கஞ்சி போன்ற நீர் ஆகாரம் வழங்கப்படுவதாக மருத்துவமனை முதல்வர் நாராயணமூர்த்தி தெரிவித்தார்.

    ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் இதைவிட அதிகளவு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர். தினமும் அங்கு காய்ச்சல் புறநோயாளியாக 250 பேர் சிகிச்சை பெற்று செல்கின்றனர். 150 பேர் உள் நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெறுகின்றனர். டெங்கு பாதித்தவர்கள் 20 பேர் வரை சிகிச்சை பெறுகின்றனர்.

    இதுகுறித்து ஸ்டான்லி ஆஸ்பத்திரி டீன் பொன்னம்பல நமச்சிவாயம் கூறுகையில், கடந்த சில நாட்களாக காய்ச்சல் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை கூடுதலாக உள்ளது. முன்பு டெங்குக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 4, 5 என இருந்தது. இப்போது 10-க்கும் அதிகமாக இருக்கிறது.

    டெங்கு பாதித்தவர்களுக்கு தட்டணுக்கள், ரத்தக்குறைவாக இருந்தால் உடனே ஏற்றுவதற்கு வசதியாக தட்டணுக்கள், ரத்தம் தேவையான அளவு உள்ளது. இங்கு காய்ச்சல் பாதித்த பெரியவர்களுக்கு 2 வார்டும், குழந்தைகளுக்கு 2 வார்டும் ஒதுக்கப்பட்டுள்ளன என்றார்.

    எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையிலும் டெங்கு காய்ச்சலுக்கு சிறப்பு வார்டு அமைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. சென்னையில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருவதால் சுகாதாரத்துறை தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கியுள்ளது. பொது மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

    கே.கே.நகர் ராணி அண்ணா நகர் பகுதியில் இன்று சுகாதாரப்பணி தீவிரப்படுத்தப்பட்டது. அமைச்சர்கள் வேலுமணி, விஜயபாஸ்கர் ஆகியோர் தலைமையில் கொசு ஒழிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. அமைச்சர்கள் வீடு வீடாக சென்று நிலவேம்பு குடிநீர் வழங்கினார்கள்.

    சிறப்பு மருத்துவ முகாமை தொடங்கி வைத்து காய்ச்சல் பாதித்தவர்களுக்கு மருந்து- மாத்திரைகள் வழங்கப்பட்டன. அந்த பகுதியில் உள்ள ஒரே பிளாக்குகளில் 1404 வீடுகளில் வசிக்கும் சுமார் 5 ஆயிரம் பேருக்கு டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.

    208 சுகாதார பணியாளர்கள் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்கள் வீடு வீடாக சென்று சேமித்து வைத்துள்ள தண்ணீரில் கொசுக்கள் இருக்கிறதா என்று ஆய்வு மேற்கொண்டனர்.

    கொசு ஒழிப்பு பணியில் அமைச்சர்களுடன் வி.என்.ரவி, எம்.எல்.ஏ., சுகாதாரத்துறை செயலாளர் ராதா கிருஷ்ணன், மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன், துணை கமிஷனர் விஜயலட்சுமி, சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தைசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×