search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை போதைப் பொருள் நகரமாக மாறிவிட்டது: ராமதாஸ்
    X

    சென்னை போதைப் பொருள் நகரமாக மாறிவிட்டது: ராமதாஸ்

    பள்ளி மாணவர்கள் சீரழிவு, சென்னை போதைப் பொருள் நகரமாக மாறிவிட்டது என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
    சென்னை: 

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- 

    இந்திய வரலாற்றில் பல நல்ல விஷயங்களுக்காக இடம் பிடித்துள்ள சென்னை மாநகரம் இப்போது போதைப்  பொருட்கள் தாராளமாக கிடைக்கும் நகரம் என்பதற்காக வரலாற்றில் இடம் பிடித்துவிடும் போலிருக்கிறது. அந்த  அளவுக்கு சென்னையில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் விற்பனை தலைவிரித்தாடும் நிலையில், அதைத்  தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது. 

    சென்னை உட்பட தமிழகம் முழுவதும் போதைப் பொருட்கள் விற்பனை எந்த அளவுக்கு பெருகியுள்ளது  என்பதற்கு  அண்மையில் ஊடகங்களில் வெளியான இரு செய்திகள் தான் எடுத்துக்காட்டு ஆகும். சென்னை பெருங்குடியில் ஒரே  அறையில் கஞ்சா புகைத்துக் கொண்டிருந்த 10 இளைஞர்கள் கைது செய்யப்பட்டதாகவும், அவர்களிடமிருந்து 8 கிலோ  கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதாகவும் சில நாட்களுக்கு முன் நாளிதழ்களில் செய்தி வெளியாகியிருந்தது.  

    சில ஆண்டுகளுக்கு முன்பு வரை சென்னையில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில இடங்களில் மட்டும் தான் கஞ்சா விற்பனை  செய்யப்பட்டு வந்தது. சென்னையில் எங்கெல்லாம் கஞ்சா விற்கப்படுகிறது என்பதை ஆதாரங்களுடன் வெளியிட்டு  அதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி பலமுறை நான் வலியுறுத்தியுள்ளேன். ஆனால், அதையெல்லாம்  காவல்துறையினர் கண்டுகொள்ளாததன் விளைவாக இப்போது சென்னையில் அனைத்து இடங்களிலும் கஞ்சா விற்பனை  செய்யப்படுகிறது.  

    குறிப்பாக பள்ளி மாணவர்களை இலக்கு வைத்து பள்ளிகளுக்கு அருகில் கஞ்சா விற்பனை செய்யப்படுகிறது. சென்னை  மெரினா கடற்கரை பட்டாணி, சுண்டல்களுக்கு மட்டுமின்றி கஞ்சாவுக்கும் புகழ் பெற்ற இடமாக மாறி வருகிறது.  இதனால் மாணவர்களும், சிறுவர்களும் கஞ்சா போதைக்கு அடிமையாகி வருவதும், குற்றச் செயல்களில் ஈடுபடுவதும்  மிகவும் கவலை அளிக்கிறது. சென்னை உள்ளிட்ட நகரங்களிலுள்ள பணக்கார கல்வி நிறுவனங்களில் பயிலும்  பணக்கார மாணவர்களின் உதவியால் விலை உயர்ந்த, மிகவும் ஆபத்தான போதைப் பொருட்கள் மாணவர்களின்  கைகளில் கிடைக்கத் தொடங்கியுள்ளன.  

    கஞ்சா சென்னை முழுவதும் கிடைக்கும் நிலையில், மற்ற உயர்வகை போதை மருந்துகள் எழும்பூர், தரமணி, கிண்டி,  சைதாப்பேட்டை, அடையாறு, திருவல்லிக்கேணி உள்ளிட்ட இடங்களிலும், புறநகர் பகுதிகளில் மதுரவாயல்,  பூந்தமல்லி, வண்டலூர், சோழிங்கநல்லூர் உள்ளிட்ட இடங்களில் போதை மருந்து விற்பனை தடையின்றி நடைபெற்று  வருகிறது. வாடிக்கையாளர்களின் அறைகளுக்கே போதை மருந்தை கொண்டு சென்று வழங்குவதும் நடக்கிறது.  இந்த விவரங்கள் அனைத்தும் போதைப் பொருட்களை பயன்படுத்துபவர்களை விட, காவல்துறையினருக்கு நன்றாகத்  தெரியும். ஆனாலும், குட்கா விற்பனையை கண்டுகொள்ளாமல் இருந்ததற்காக ஆட்சியாளர்களுக்கும்,  காவல்துறைக்கும்  என்னென்ன பலன்கள் கிடைத்தனவோ, அதைவிட பலமடங்கு அதிக பலன்கள் கிடைப்பதால்  அவர்கள் கண்டுகொள்ள மறுக்கின்றனர்.  

    இதனால் போதை வணிகம் கட்டுப்பாடின்றி வளர்ந்து கொண்டிருக்கிறது. இளைய தலைமுறையினரை போதைப் பொருட்களின் பிடியிலிருந்து மீட்க வேண்டிய கடமையும் பொறுப்பும் அரசுக்கு உள்ளது.  எனவே, சென்னையில் போதைப்பொருள் விற்பனையை ஒடுக்குவதுடன், பாதிக்கப்பட்டவர்களை மீட்க போதை மீட்பு  மையங்களையும் அதிக அளவில் அரசு திறக்க வேண்டும். 

    இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
    Next Story
    ×