search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆண் குழந்தையை ரூ.5 லட்சத்துக்கு விற்க முயற்சி: கைதான நர்சு சஸ்பெண்டு
    X

    ஆண் குழந்தையை ரூ.5 லட்சத்துக்கு விற்க முயற்சி: கைதான நர்சு சஸ்பெண்டு

    ஆண் குழந்தையை ரூ.5 லட்சத்துக்கு விற்க முயற்சி செய்தது தொடர்பாக கைதான கிராம சுகாதார செவிலியர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.
    கூடலூர்:

    நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே உள்ள சேரங்கோடு பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவரது மனைவி புவனேஸ் வரி (வயது 36). இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த புவனேஸ்ரிக்கு கடந்த 17-ந் தேதி கொளப்பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 3-வதாக ஆண் குழந்தை பிறந்தது.

    இதற்கிடையே குடும்ப வறுமை காரணமாக குழந்தையை வளர்க்க முடியாது என்றும், எனவே குழந்தையை விற்க முடிவு செய்துள்ளேன் என்று சுகாதார நிலைய செவிலியர் எலிசபெத்திடம் (48) புவனேஸ்வரி கூறினார்.
    இதையடுத்து குழந்தையை விற்க எலிசபெத் , கூடலூர் கோத்தர்வயலை சேர்ந்த ரேஸ்மாபானுவை (55) தொடர்பு கொண்டு பேசினார். இதனால் ரேஸ்மாபானு, எருமாடு பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் (45), கதிரேசன் (49) ஆகியோரை சந்தித்து பேசினார். இதைதொடர்ந்து அவர்கள் 4 பேரும் குழந்தையை விற்க பலரிடம் பேசியுள்ளனர்.

    இந்த நிலையில் கொளப்பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் குழந்தையை விற்க முயற்சி நடப்பதாக கூடலூர் குழந்தைகள் பாதுகாப்பு மைய ஒருங்கிணைப்பாளர் தவமணிக்கு தகவல் கிடைத்தது. அவர் தேவாலா மகளிர் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனாகுமாரி, மற்றும் போலீசார் குழந்தை விற்பனை கும்பலை பிடிக்க திட்டமிட்டனர். இதனால் போலீசார் குழந்தையை வாங்குவது போல் ரேஸ்மாபானுவிடம் பேசினர். ரூ.5 லட்சத்துக்கு விலை பேசப்பட்டது. இதற்கிடையே நர்சு எலிச பெத், புவனேஸ்வரியை தொடர்பு கொண்டு குழந்தையை  துணை சுகாதார நிலையத்துக்கு கொண்டு வர கூறினார்.

    இதை கேள்விப்பட்ட போலீசார் மாறுவேடத்தில் அங்கு சென்று கண்காணித்தனர். அப்போது குழந்தையுடன் இருந்த நர்சு எலிச பெத், ரவிசந்திரன், கதிரேசன் ஆகிய 3பேரை போலீசார் கையும் களவுமாக பிடித்து குழந்தையை மீட்டனர். இந்த சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்ட ரேஸ்மா பானுவை கூடலூரில் போலீசார் கைது செய்தனர்.



    கைதான 4 பேரிடம் ஊட்டி குழந்தைகள் கடத்தல் பிரிவு ஆய்வாளர் அக்பர் ஜான் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். 4 பேரும் பந்தலூர் நீதிபதி பாலமுருகன் முன்பு ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இதற்கிடையே இந்த வழக்கில் கைதான  கொளப்பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலைய நர்சு எலிசபெத்  பணியில் இருந்து சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.
    Next Story
    ×