search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் வேலூர் கல்லூரி மாணவர் - கேரள போலீசார் விசாரணை
    X

    ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் வேலூர் கல்லூரி மாணவர் - கேரள போலீசார் விசாரணை

    வேலூர் மாவட்டத்தில் ஐ.எஸ். தீவிரவாத அமைப்புகளுக்கு ஆட்களை சேர்க்கும் கும்பல் பதுங்கியுள்ளதா? என்பது குறித்து கேரள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேலூர்:

    கல்லூரி மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் கல்வி பயிலும் மாணவர்களை குறி வைத்து அவர்களை, ஐ.எஸ். மற்றும் தீவிரவாத அமைப்புகளில் சேருவதற்காக மூளைச் சலவை செய்யும் கும்பல் நாடு முழுவதும் ஊடுருவியுள்ளது. இந்தக் கும்பல், வேலூர் மாவட்டத்தில் தற்போது ஊடுருவியுள்ளதாக தகவல் வெளியானதால், மாவட்டம் முழுவதும் உளவுத்துறை போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

    கேரள மாநிலம் மலப்புரம் பகுதியை சேர்ந்தவர் அப்துல் நசீப் (வயது 22). இவர், வேலூரில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார். கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் விடுமுறையை யொட்டி, சொந்த ஊருக்கு சென்றார். பின்னர், ஆகஸ்ட் 11-ந் தேதி மீண்டும் கல்லூரிக்கு செல்வதாக தனது குடும்பத்தாரிடம் தெரிவித்துவிட்டு வந்தார். ஆனால் கல்லூரிக்கு வரவில்லை எனக் கூறப்படுகிறது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு அப்துல் நசீப் தாயாருக்கு தொலைபேசி ஒன்று வந்தது. அதில் பேசிய நபர், அப்துல்நசீப் ஐ.எஸ். இயக்கத்தில் சேர்ந்து விட்டதாகவும், அவரைத் தேட வேண்டாம் எனவும் கூறியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது தாயார் மாணவனின் அறையில் சோதனை செய்த போது அதில் ஐ.எஸ். அமைப்புக்கு ஆதரவான சி.டி.க்கள் துண்டுபிரசுங்கள் இருந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த மாணவனின் தாயார் கல்லூரி நிர்வாகத்தில் தொடர்பு கொண்டு மாணவர் விவரம் குறித்து கேட்டார். அப்போது ஆகஸ்டு முதல் வாரத்தில் வீட்டுக்கு சென்ற மாணவர் அதன்பிறகு கல்லூரிக்கு வரவில்லை என தெரிவித்தனர்.

    இதையடுத்து, கேரள மாநிலம் மலப்புரம் போலீஸ் சூப்பிரண்டு தேபேஷ்குமாரிடம் மாணவனின் தாயார் புகார் அளித்தார். மாணவனின் முழு விவரம் குறித்து விசரிக்க கேரள போலீஸ் தனிப்படை அமைத்தனர்.

    கேரள தனிப்படை, உளவுத்துறை இது தொடர்பாக விசாரணை நடத்த வேலூர் வந்தனர். வேலூரில் முகாமிட்டு விசாரணை நடத்தினர்.தொடர்ந்து வாணியம்பாடி, ஆம்பூர், குடியாத்தம் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர விசாரணை நடத்தினர்.

    இது குறித்து உளவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    கல்லூரி மாணவர்களை ஆசை வார்த்தைகள் கூறி ஐ.எஸ். உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளுக்கு ஆட்களை தேர்வு செய்வதாக தகவல் வந்துள்ளது. கல்லூரிகளில் மாணவர்களை சந்திக்க வரும் நபர்கள் குறித்த விவரங்களை சேகரிக்கும் பணி நடந்து வருகிறது. அதேபோல், பார்வையாளர்கள் நேரத்தில் மாணவர்களை தனியாக சந்தித்துப் பேசும் நபர்கள் குறித்தும், அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவானக் காட்சிகளையும் ஆராய்ந்து வருகிறோம்.

    கேரள மாணவர் அப்துல்நசீப் கடந்த ஆகஸ்ட் 11-ந் தேதி கேரளாவிலிருந்து புறப்படும் திருவனந்தபுரம்- ஐதராபாத் விரைவு ரெயிலில் பயணம் செய்துள்ளார். காட்பாடியில் இறங்க வேண்டிய அவர், ஐதராபாத் வரை சென்று அங்கிருந்து விமானம் மூலம் ஈரானுக்கு சென்றுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இதற்கிடையே, வேலூர் மாவட்டத்தில் ஐ.எஸ். உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளுக்கு ஆட்களை சேர்க்கும் கும்பல் பதுங்கியுள்ளதா? என்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

    மாவட்ட எல்லைப் பகுதி, தொலைவில் உள்ள குடியிருப்புகள், விடுதிகள், மாவட்டத்தை ஒட்டியுள்ள வனப் பகுதிகளில் போலீஸ் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர் என்றார்.

    உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் சேர கேரளாவில் இருந்து பலர் ஈராக், சிரியா, ஈரான் உள்ளிட்ட நாடுகளுக்கு சென்றுள்ளனர். இவர்கள் குறித்து கேரள போலீசாரும் தேசிய புலனாய்வு அமைப்பும் (என்.ஐ.ஏ) தொடர்ந்த விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×