search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஞ்சீபுரம்: வீட்டில் பதுக்கிய பட்டாசு வெடித்தது- கணவன்-மனைவி கருகினர்
    X

    காஞ்சீபுரம்: வீட்டில் பதுக்கிய பட்டாசு வெடித்தது- கணவன்-மனைவி கருகினர்

    காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே வீட்டில் பதுக்கிய பட்டாசு வெடித்ததில் கணவன் மற்றும் மனைவி கருகினர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள கனிகண்டீஸ்வரர் கோவில் தெருவில் வசித்து வருபவர் பூபதி (வயது 44). இவரது மனைவி கோமளா (40). பூபதி, வீட்டின் ஒரு பகுதியில் அனுமதியின்றி பட்டாசு தயாரித்தார். அதனை கோவில் திருவிழா மற்றும் விசே‌ஷ நிகழ்ச்சிகளுக்கு விற்பனை செய்து வந்தார்.

    தீபாவளி பண்டிகை நெருங்குவதையடுத்து அவர் ஏராளமான பட்டாசுகள் தயாரித்து குடோனில் வைத்து இருந்ததாக தெரிகிறது.

    இன்று காலை பூபதியை பார்ப்பதற்காக அதே பகுதியில் வசித்து வரும் அவரது அண்ணன் மகன் மோகன் (30) அங்கு வந்தார்.

    அப்போது திடீரென குடோனில் இருந்து பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில் வீட்டின் மேற்கூரை ஓடுகள் பல மீட்டர் தூரத்துக்கு பறந்து விழுந்தன. மேலும் வீடு முழுவதும் இடிந்து தீப்பிடித்தது. இதில் அங்கிருந்த பூபதி, அவரது மனைவி கோமளா, மோகன் ஆகியோர் உடல் கருகினர்.

    வெடிச்சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர். அவர்கள் உயிருக்கு போராடிய பூபதி உள்பட 3 பேரையும் மீட்டு காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    தகவல் அறிந்ததும் காஞ்சீபுரம் தீயணைப்ப வீரர்கள் விரைந்து வந்து வீட்டில் பிடித்த தீயை அணைத்தனர். மேலும் அங்கிருந்த பட்டாசுகள் மற்றும் பட்டாசு தயாரிக்க வைக்கப்பட்டு இருந்த மூலப்பொருட்களை தண்ணீர் ஊற்றி செயல் இழக்க செய்தனர். பட்டாசு வெடித்ததில் அருகில் இருந்த வீடுகளும் சேதம் அடைந்து உள்ளன.

    தீயில் கருகிய பூபதியின் மனைவு கோமளா, மோகன் நிலைமை மோசமாக உள்ளது. அவர்களுக்கு சென்னை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    பட்டாசுகள் வெடித்த உடன் வீட்டில் பெரிய அளவில் தீப்பிடிக்காமல் கட்டிடம் மட்டும் முழுவதும் இடிந்து உள்ளது. தீயணைப்பு வீரர்கள் உடனடியாக விரைந்து செயல் பட்டதால் வீட்டில் இருந்த மற்ற பட்டாசுகள் வெடிக்க வில்லை. இதனால் பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்படவில்லை.

    மோகனின் மனைவியின் சீமந்த நிகழ்ச்சி நாளை நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க அழைப்பதற்காக பூபதி வீட்டுக்கு அவர் வந்தார். அப்போது பட்டாசு விபத்தில் சிக்கி விட்டார். பூபதியின் 2 மகன்கள் இன்று காலை உறவினர்களுடன் கோவிலுக்கு சென்று விட்டனர். இதனால் அவர்கள் தப்பி விட்டனர்.

    பூபதி, வீட்டில் பட்டாசு தயாரிப்பதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்ததாக தெரிகிறது. ஆனால் அவர் காஞ்சீ புரத்தை அடுத்த கலவை பகுதியில் பட்டாசு தயாரிக்க அனுமதி பெற்று வீட்டில் பட்டாசுகள் பதுக்கி வைத்து உள்ளார். தற்போது பட்டாசு வெடித்து சிக்கிக் கொண்டார்.

    இது குறித்து விஷ்ணு காஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×