search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலையுண்ட சுகுமார், கொலை நடந்த அடுக்குமாடி குடியிருப்பு
    X
    கொலையுண்ட சுகுமார், கொலை நடந்த அடுக்குமாடி குடியிருப்பு

    நுங்கம்பாக்கத்தில் கள்ளக்காதலை தடுத்த காவலாளி கொலை: வேலைக்கார பெண்- ஆட்டோ டிரைவர் கைது

    நுங்கம்பாக்கம் அடுக்குமாடி குடியிருப்பில் கள்ளக்காதலை தடுத்த காவலாளியை கொலை செய்த வழக்கில் வேலைக்கார பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
    சென்னை:

    சென்னை நுங்கம்பாக்கம் மேல்பாடி முத்து தெருவில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. அதில் 3 தளங்களில் 8 வீடுகள் உள்ளன.

    இந்த குடியிருப்பில் கோடம்பாக்கம் வரதராஜபுரத்தை சேர்ந்த சுகுமார் (வயது56) காவலாளியாக பணியாற்றி வந்தார். அதே அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் கீழக்கரையை சேர்ந்த லட்சுமி (35). என்ற பெண் வீட்டு வேலை செய்து அங்கேயே தங்கி வருகிறார்.

    இந்த குடியிருப்பின் மொட்டைமாடி பகுதியில் அந்த பகுதியை சேர்ந்த சிலர் இரவு நேரத்தில் மது அருந்தி சமூக விரோத செயலில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு குடிபோதையில் மொட்டை மாடியில் இருந்த வாலிபர்களிடம் காவலாளி சுகுமார் அங்கிருந்து வெளியேறும்படி தகராறு செய்துள்ளார்.

    இந்த நிலையில் நேற்றிரவு சுகுமார் இரவு காவல் பணியில் ஈடுபட்டிருந்தார். நள்ளிரவு ஒரு மணியளவில் லட்சுமி ஒரு வாலிபருடன் குடியிருப்புக்குள் நுழைந்தார்.

    அந்த வாலிபருக்கும் லட்சுமிக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்ததால் உல்லாசமாக இருப்பதற்காக மொட்டை மாடிக்கு வந்துள்ளனர். இதனை காவலாளி பார்த்து விட்டதால் என்ன செய்வது என்று புரியாமல் இருவரும் திகைத்தனர்.

    இரவு நேரத்தில் வேறு ஒரு வாலிபருடன் மொட்டைமாடியில் இருக்க அனுமதிக்க மாட்டேன் என்று சுகுமார் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் கள்ளக்காதலனுக்கும் காவலாளிக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது.

    ஆத்திரம் அடைந்த கள்ளக்காதலன் செங்கல்லால் சுகுமார் தலையில் அடித்துள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் பிணமானார்.

    காலையில் காவலாளியை குடியிருப்பில் உள்ளவர்கள் தேடினார்கள். அவர் மொட்டை மாடியில் பிணமாக கிடந்துள்ளது தெரிய வந்தது.

    இதுகுறித்து நுங்கம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

    காவலாளி நள்ளிரவில் கொலை செய்யப்பட்டது குறித்து குடியிருப்பு வாசிகளிடம் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் போலீசாருக்கு கிடைத்தன.

    கள்ளக்காதலனுடன் சேர்ந்து வேலைக்கார பெண் லட்சுமி இந்த படுகொலையில் ஈடுபட்டது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்காதலன் பாசித் (33) தலைமறை வாகிவிட்டார். ஆட்டோ டிரைவரான அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
    Next Story
    ×