search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை நவம்பர் 15-ந்தேதி நிறைவடையும்: மு.க.ஸ்டாலின்
    X

    தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை நவம்பர் 15-ந்தேதி நிறைவடையும்: மு.க.ஸ்டாலின்

    தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை நவம்பர் 15-ந்தேதி நிறைவடையும் என்று அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.
    சென்னை:

    தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை நவம்பர் 15-ந்தேதி நிறைவடையும் என்று அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.

    இதுகுறித்து தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர் கூறி இருப்பதாவது:-

    தி.மு.க.வின் 15-வது தேர்தலை முறைப்படி நடத்திட வேண்டியிருப்பதை முன்னிட்டு அதற்கான நடைமுறைகள் தொடங்கியுள்ளன. ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 140 வார்டு கழகங்களையும் 1 கோடியே 10 லட்சத்திற்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் உறுப்பினர்களையும் கொண்ட தி.மு.க. தொடக்க காலம் முதல் பாதுகாத்து வரும் ஜனநாயக மரபின் தொடர்ச்சியாக, 15-வது தேர்தலுக்குத் தயாராகும் நிலையில், புதிய உறுப்பினர்களைச் சேர்த்தல்-புதுப்பித்தல் ஆகிய அடிப்படைப் பணிகளைத் தொடங்குகிறது.

    தி.மு.க.வின் கட்டுப்பாடுகளை கண்ணியமாகக் கடைப்பிடித்துக் கடமையாற்ற வேண்டியது நமது பொறுப்பு. அதனால்தான் இந்த இயக்கம் வெற்றிகளையும் தோல்விகளையும், பாராட்டுகளையும் தூற்றுதல்களையும், நெருக்கடிகளையும் சோதனைகளையும் எதிர்கொண்ட போதும் எவராலும் வீழ்த்திட முடியாத பேரியக்கமாக உயர்ந்து நிற்கிறது. இதனை ஏற்க முடியாதவர்களும் எரிச்சல்காரர்களும், தி.மு.க.வில் குடும்ப ஆதிக்கம் இருக்கிறது. குடும்பத்தினர்தான் அங்கே பதவிகளைப் பெறுகிறார்கள் என்று பேசி வருகிறார்கள்.

    அவர்களுக்கெல்லாம் பணிவோடு நாம் சொல்லக்கூடிய பதில், ஆம்.. இது குடும்ப கட்சிதான். என் தாத்தாவும் தி.மு.க., என் அப்பாவும் தி.மு.க, நானும் தி.மு.க., என் மகனும் தி.மு.க., நாளை என் பேரனும் தி.மு.க.தான் என்று கூறி குடும்பம் குடும்பமாக இந்த இயக்கத்தில் தொடர்ந்து செயலாற்றி வருகிறார்கள். அந்த வகையில், இது குடும்ப கட்சிதான். எந்த ரத்த உறவுமுறையும் இல்லாதவர்களும் புதிய உறுப்பினராக சேர்ந்தால், அவர்களும் தி.மு.க.வின் ரத்த நாளமாகி, தி.மு.க. குடும்பத்தின் அங்கமாகி விடுகிறார்கள். அந்தவகையிலும் இது குடும்பக்கட்சிதான். நம் மீது அவதூறுச் சேற்றை அள்ளி வீசுவோருக்கு நாம் அளிக்க வேண்டிய பதில் இதுதான்.

    தி.மு.க. உறுப்பினர் சேர்த்தலும், புதுப்பித்தலும் செப்டம்பர் 16-ந்தேதி தொடங்கி, நவம்பர் 15-ந்தேதியுடன் நிறைவடைகிறது. அதன்பிறகு, கழக அமைப்புகளுக்கான 15-வது தேர்தல் உள்கட்சி ஜனநாயகப்படி நடைபெறும்.

    வெற்றி பெறுகிறவரும் என் உடன்பிறப்புதான்-வெற்றி வாய்ப்பினை இழப்பவரும் என் உடன்பிறப்பு தான் என்று சொன்ன கருணாநிதியின் இந்த வார்த்தைகளை நாம் அனைவரும் நினைவில் கொண்டு, உறுப்பினர் சேர்த்தல்-புதுப்பித்தல் ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும்.

    தி.மு.க. உறுப்பினர்கள் அனைவரும் புதுப்பிக்கவும், புதிய உறுப்பினர்கள் ஆர்வமுடன் சேரவும் விரைந்து செயல்பட வேண்டுகிறேன். பலதுறைகளையும் சார்ந்த இளைஞர்கள், பெண்கள், பொதுநலனில் அக்கறையுள்ளோர் அனைவரிடமும் கழகத்தின் கொள்கைகளையும், தமிழினத்தின் மேன்மைக்காக ஆற்றியுள்ள செயல்களையும் எடுத்துக்கூறி அவர்களின் முழு ஒப்புதலுடன் உறுப்பினராக்குங்கள்.

    நமது உயிருக்கு நிகரானது இந்த இயக்கம். அந்த இயக்கத்தின் உதிரமாக இருப்பவர்கள் உறுப்பினர்கள். எனவே, இந்த இயக்கத்திற்குப் புது ரத்தம் பாயும் வகையில் உறுப்பினர் சேர்ப்பினை வெற்றிகரமாக அமைந்திட உழைத்திடுங்கள்.

    இவ்வாறு அந்த கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×