search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்தில் பலியான அ.தி.மு.க. பிரமுகர் உடலுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அஞ்சலி செலுத்திய காட்சி
    X
    விபத்தில் பலியான அ.தி.மு.க. பிரமுகர் உடலுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அஞ்சலி செலுத்திய காட்சி

    விபத்தில் பலியான அ.தி.மு.க. பிரமுகர்களின் உடல்களுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அஞ்சலி

    அவினாசி விபத்தில் பலியான அ.தி.மு.க. பிரமுகர்களின் உடல்களுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்.
    எடப்பாடி:

    சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் ஒன்றியம் பள்ளிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஜேம்ஸ் என்கிற ராமு (வயது 59). அ.தி.மு.க. பிரமுகரான இவர் கச்சுப்பள்ளி ஊராட்சி முன்னாள் தலைவராகவும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவராகவும் இருந்தார். இவருடைய மனைவி செல்லம்மாள். இவர்களுக்கு புகழேந்தி, ராமச்சந்திரன் என்ற 2 மகன்களும், ஜெயந்தி என்ற ஒரு மகளும் உள்ளனர்.

    ராமு கூட்டுறவு சங்க வேலையாக விமானம் மூலம் டெல்லி செல்வதற்காக நேற்று காலை காரில் கோவை சென்று கொண்டிருந்தார். அவருடன் அ.தி.மு.க. பிரமுகர்களான திருச்செங்கோடு வேளாண்மை விவசாயிகள் உற்பத்தி விற்பனையாளர்கள் சங்க இயக்குனர் கதிர்வேல், கச்சுப்பள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாளர் ரத்தினம், முத்துசாமி ஆகியோரும் சென்றனர். அவனாசி அருகே சென்ற போது அவருடைய கார் மீது அரசு பஸ் மோதியது. இதையடுத்து கார் பாலத்தில் இருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ராமு, கதிர்வேல், ரத்தினம், முத்துசாமி ஆகியோர் பரிதாபமாக இறந்தனர்.

    தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (சனிக்கிழமை) கிருஷ்ண கிரியில் நடைபெறும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து நேற்று விமானம் மூலம் கோவை வந்தார். இதையடுத்து அவர் கார் மூலம் சேலம் மாவட்டத்திற்கு வந்தார். இதற்கிடையில் விபத்தில் அ.தி.மு.க. பிரமுகர்கள் பலியானார்கள் குறித்து கேள்விப்பட்டதும் அவர்களுடைய வீட்டுக்கு சென்று அஞ்சலி செலுத்த முதல்-அமைச்சர் முடிவு செய்தார்.

    இதையடுத்து முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விபத்தில் பலியான கொங்கணாபுரம் பகுதியை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர்களான ராமு, கதிர்வேல், ரத்தினம், முத்துசாமி ஆகியோரது வீடுகளுக்கு நேரிடையாக சென்றார்.

    பின்னர் இறந்தவர்களின் உடல்களுக்கு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்.

    விபத்தில் இறந்த அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் கந்தசாமி உடலுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்.


    பின்னர் அவர்களுடைய குடும்பத்தினர்களுக்கு ஆறுதல் கூறினார்.

    நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளரும், திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க தலைவருமான கந்தசாமி திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே நடந்த கார் விபத்தில் உயிரிழந்தார். அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று இரவு பள்ளிபாளையம் அருகே பாதரையில் உள்ள கந்தசாமி வீட்டுக்கு வந்தார். அவருடைய உடலுக்கு முதல்-அமைச்சர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

    பின்னர் அவருடைய குடும்பத்தினருக்கு அவர் ஆறுதல் கூறினார். அவருடன் அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா, எம்.எல்.ஏ.க்கள் பாஸ்கர் (நாமக்கல்), தென்னரசு (ஈரோடு), நாமக்கல் கலெக்டர் ஆசியா மரியம், மாவட்ட வருவாய் அலுவலர் பழனிசாமி, தாசில்தார் ரகுநாதன் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அதைத்தொடர்ந்து விபத்தில் இறந்த கந்தசாமியின் உடல் பாதரையில் உள்ள மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. விபத்தில் இறந்த கந்தசாமிக்கு பாப்பாத்தி என்ற மனைவியும், சிவகாமி என்ற மகளும் உள்ளனர்.
    Next Story
    ×