search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கிளார்க் பணிக்கு ரூ.16 ஆயிரம் லஞ்சம்: சோளிங்கர் பால் கூட்டுறவு சங்க செயலாளர் கைது
    X

    கிளார்க் பணிக்கு ரூ.16 ஆயிரம் லஞ்சம்: சோளிங்கர் பால் கூட்டுறவு சங்க செயலாளர் கைது

    கிளார்க் பணிக்கு ரூ.16 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சோளிங்கர் பால் கூட்டுறவு சங்க செயலாளர் கைது செய்யப்பட்டார்.
    வேலூர்:

    வேலூர் மாவட்டம் அரக்கோணம் அடுத்துள்ள வெங்குப்பட்டு ஆயிலம் பாடி கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 29). இவர், சோளிங்கர் பால் கூட்டுறவு சங்கத்தில் கடந்த 5 ஆண்டுகளாக தற்காலிக பணியில் உதவியாளராக (கிளார்க்) வேலை செய்து வருகிறார்.

    இந்த நிலையில், தற்காலிக உதவியாளர் பணியை நிரந்தரம் செய்வதற்காக ராஜேந்திரன் விண்ணப்பித்திருந்தார். பணி நிரந்தரம் செய்வதற்காக, கூட்டுறவு சங்க செயலாளர் விஜய ராகவன் (வயது 46), ரூ.20 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.

    அவ்வளவு பணம் தன்னிடம் இல்லை என்று ராஜேந்திரன் முதலில் கூறியுள்ளார். பிறகு அவர்களுக்குள் ‘பேரம்’ நடந்தது. முடிவில் ரூ.16 ஆயிரம் கொடுத்தால் மட்டுமே பணி நிரந்தரம் செய்ய முடியும் என்று விஜயராகவன் கூறியதாக தெரிகிறது.

    லஞ்சம் கொடுக்க விரும்பாத ராஜேந்திரன், இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். போலீசார், கூட்டுறவு சங்க செயலாளரை வலை விரித்து பிடிக்க முடிவு செய்தனர். அதன்படி, ரசாயனம் தடவிய ரூ.16 ஆயிரத்தை ராஜேந்திரனிடம் போலீசார் கொடுத்து அனுப்பினர்.

    லஞ்ச ஒழிப்பு ஏ.டி.எஸ்.பி. பாலசுப்பிரமணியம் தலைமையிலான போலீசார் மாறு வேடத்தில், சோளிங்கர் பால் கூட்டுறவு சங்க அலுவலகத்திற்கு சென்றனர். கூட்டுறவு செயலாளர் விஜயராகவன், லஞ்ச ஒழிப்பு போலீசார் வந்திருப்பதை அறியாமல் ராஜேந்திரனிடம் இருந்து லஞ்ச பணத்தை பெற்றுக் கொண்டார்.

    அப்போது, அங்கு பதுங்கி இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், கூட்டுறவு சங்க செயலாளர் விஜயராகவனை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    முதற்கட்ட விசாரணையில், ராஜேந்திரனை தவிர்த்து பால்கூட்டுறவு சங்கத்தில் தற்காலிகமாக பணிபுரியும் 17 பேரிடம், பணி நிரந்தரம் செய்வதாக கூறி செயலாளர் விஜயராகவன் தலா ரூ.10 ஆயிரம் என மொத்தம் ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் வாங்கியது தெரியவந்துள்ளது.

    இந்த லஞ்ச பணத்தில் கூட்டுறவு சங்க தலைவராக உள்ள நாகராஜூக்கும் பங்கு உள்ளதாக கைதான விஜயராகவன் கூறியுள்ளார். அதன்படி, கூட்டுறவு சங்க தலைவர் நாகராஜிடமும் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×