search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விடுதலை சிறுத்தைகளின் சுயாட்சி மாநாடு: 14 தீர்மானங்கள் நிறைவேற்றம்
    X

    விடுதலை சிறுத்தைகளின் சுயாட்சி மாநாடு: 14 தீர்மானங்கள் நிறைவேற்றம்

    விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று நடைபெற்ற மாநில சுயாட்சி மாநாட்டில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாநில சுயாட்சி மாநாடு சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று மாலை 4 மணிக்கு தொடங்கியது.

    மத்தியில் உண்மையான கூட்டாட்சியை நிறுவவும், மாநிலங்களில் சுயாட்சி நிர்வாகத்தை உருவாக்கவும் ஜனநாயகத்தை பாதுகாக்கவும் அனைத்து ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைக்கும் வகையில் இந்த மாநாடு நடத்தப்பட்டது. மாநாட்டுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தலைமை தாங்கினார்.

    கேரள முதல்-மந்திரி பிரணாய்விஜயன், புதுச்சேரி முதல்-மந்திரி நாராயணசாமி, தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், திராவிடர்கழக தலைவர் கி.வீரமணி, தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில செயலாளர் ஜி.ராம கிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் இரா.முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    மாநில சுயாட்சி மாநாட்டில் திரளாக பங்கேற்க வேண்டும் என்று திருமாவளவன் அழைப்பு விடுத்து இருந்தார். அவரது அழைப்பை ஏற்று தமிழகம் முழுவதும் உள்ள விடுதலை சிறுத்தைகள் சென்னையில் குவிந்தனர். பஸ், கார், ரெயில் மூலம் சென்னைக்கு வந்த அவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்றனர்.

    இந்த மாநாட்டில், மத்திய - மாநில அரசு உறவுகளை  ஆய்வுசெய்ய ஆணையம் அமைக்க வேண்டும். கல்வி தொடர்பான அதிகாரங்களை மீண்டும் மாநில பட்டியலில் சேர்க்க வேண்டும். இந்தியாவில் அதிபர் ஆட்சி முறையை திணிக்கும் முயற்சிகளை கைவிட வேண்டும். பேரவை, நாடாளுமன்றத்துக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் முயற்சிகளை கைவிட வேண்டும். மாநிலங்களுக்கு பொருளாதார தற்சார்பு நிலையை உருவாக்க வேண்டும். நிதி நிர்வாக அதிகாரங்களை மாநிலங்களுக்கு வழங்க வேண்டும். மாநிலங்களுக்கு சமமான பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும். இந்தி, சமஸ்கிருத திணிப்பை கைவிட்டு தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும். ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
    Next Story
    ×