search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அண்ணா-ஜெயலலிதாவின் கொள்கைகளுக்கு விரோதமாக ஆட்சி நடக்கிறது: நாஞ்சில் சம்பத்
    X

    அண்ணா-ஜெயலலிதாவின் கொள்கைகளுக்கு விரோதமாக ஆட்சி நடக்கிறது: நாஞ்சில் சம்பத்

    அண்ணா மற்றும் ஜெயலலிதாவின் கொள்கைகளுக்கு விரோதமாக ஆட்சி நடைபெறுகிறது என்று நெல்லையில் நடந்த பொதுக்கூட்டத்தில் நாஞ்சில் சம்பத் பேசினார்.

    நெல்லை:

    அ.தி.மு.க. (அம்மா) அணி சார்பாக அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் பாளையங்கோட்டை மார்க்கெட் திடலில் நடந்தது. இந்த கூட்டத்தில் கொள்கை பரப்பு துணைச்செயலாளர் நாஞ்சில் சம்பத் கலந்து கொண்டு பேசியதாவது:-

    சிவனடியார்களுக்கு கார்த்திகை மாதம் சிறந்தது. கிறிஸ்தவர்களுக்கு டிசம்பர் மாதம் சிறந்தது. இஸ்லாமியர்களுக்கு நோன்பு இருக்கும் ரமலான் மாதம் சிறந்தது. ஆனால் திராவிடர்கள் அனைவருக்கும் அண்ணா பிறந்த செப்டம்பர் மாதம் சிறந்தது.

    அன்றைய அரசியலில் காமராஜரும், அண்ணாவும் எதிர் எதிர் துருவத்தில் இருந்தாலும், மக்கள் பிரச்சினை, நாடு என்று வரும் போது ஒன்றுபட்டு நின்றார்கள். அந்த அரசியல் நாகரீகம் இன்று இல்லை. முதல்வர் பதவிக்காக எந்த பாவமும் செய்யலாம் என்று செய்து விட்டு அதை போக்க ஆற்றிலும் மூழ்குகிறார்கள்.

    அன்று பாராளுமன்றத்தில் அண்ணா இருந்து பேசிய இடத்தில் ஜெயலலிதா அமர்ந்து பேசினார். அப்போது நாட்டு மக்களுக்காக, தமிழர்களுக்காக அவர்கள் குரல் கொடுத்தார்கள். ஜெயலலிதா பேசும் போது, இடையில் மணி அடித்து அமர சொன்னதற்காக இது 7½ கோடி தமிழர்களுக்கு அவமரியாதை என்று வெளிநடப்பு செய்தார். ஆனால் இன்று ஜி.எஸ்.டி., நீட், உதய் திட்டம் என்று தமிழர்களுக்கு எதிரான திட்டத்துக்கு ஆட்சியாளர்கள் வரவேற்பு கொடுக்கிறார்கள்.

    எடப்பாடி அரசு ஊழல் அரசு என்று கூறி ‘தர்மயுத்தம்’ நடத்தப்போவதாக அறிவித்த பன்னீர்செல்வம் அதே அரசில் துணை முதல்வராக உள்ளார். கலெக்டராக இருந்து விட்டு தாசில்தாராக வேலை பார்க்கவும் தயார் என்று இருக்கிறார். இது எதற்காக என்று உங்களுக்கு தெரியும்.

    ஜெயலலிதா ஆட்சியில் கொண்டு வரப்பட்ட அம்மா உணவகம், லேப்-டாப் திட்டம் கைவிடப்பட்டு விட்டது. அம்மா திட்டங்களை நிறைவேற்ற கூறினால் பொய் வழக்கு போடுகிறார்கள். அண்ணா பெயரை சொல்லி நடைபெறும் இந்த ஆட்சி அண்ணா, அம்மா கொள்கைகளுக்கு விரோதமாக நடக்கிறது. இந்த ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அதற்காகத்தான் டி.டி.வி. தினகரன் திருச்சியில் மாபெரும் கூட்டத்தை கூட்டினார். இதுதான் அ.தி.மு.க. என்பதற்கு அங்கு கூடிய கூட்டம் தான் சாட்சி. யார் எந்த ஆற்றில் மூழ்கினாலும் தொண்டர்கள் சும்மா விடமாட்டார்கள். நாங்கள் டி.டி.வி.தினகரனை முதல்வர் ஆக்கியே தீருவோம்.

    இவ்வாறு நாஞ்சில் சம்பத் பேசினார்.

    Next Story
    ×