search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குமரியில் மழை நீடிப்பு: பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளின் நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்வு
    X

    குமரியில் மழை நீடிப்பு: பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளின் நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்வு

    குமரி மாவட்டத்தில் பலத்த மழை காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளின் நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்ந்துள்ளது.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. மழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது.

    இதனால் கடந்த மாதம் வரை ஒற்றை இலக்கத்தில் இருந்த வந்த குமரி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் இந்த மாதம் முதல் அதிகரிக்க தொடங்கியது. குறிப்பாக பேச்சிப்பாறை மற்றும் பெருஞ்சாணி அணைகளின் நீர்மட்டம் முறையே 12 மற்றும் 20 அடியாக உயர்ந்தது.

    மாவட்டத்தில் மழை நீடித்ததால் அணைகளில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டது. அப்போது நீர்வரத்து அதிகமாக இருந்ததால் பேச்சிப்பாறை அணையின் நீர் மட்டம் நேற்று 18.60 அடியாக உயர்ந்தது. அதன்பின்பும் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 2086 கனஅடியாக இருந்தது. இதனால் இன்று காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 21 அடியை தாண்டியது.

    இது போல பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் நேற்று காலை 42.30 அடியாக இருந்தது. இங்கும் நீர்வரத்து வினாடிக்கு 1885 கன அடியாக இருந்தது. இதன்காரணமாக பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 45.10 அடியாக உயர்ந்தது. இரு அணைகளின் நீர்மட்டமும் ஒரே நாளில் சுமார் 3 அடி வரை உயர்ந்தது விவசாயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    அணைகளின் நீர்மட்டம் உயர்ந்தது போல மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் உயரும் அளவுக்கு அனைத்து பகுதிகளிலும் பரவலாக சாரல் மழை பெய்தபடி இருந்தது. நேற்று கன்னியாகுமரி முதல் களியக்காவிளை வரை அனைத்து பகுதிகளிலும் மழை கொட்டியது. இதில் அதிக பட்சமாக பாலமோரில் 10.8 செ.மீ. அளவுக்கு மழை பெய்தது.

    இது போல மற்ற பகுதிகளில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பேச்சிபாறை-67.2, பெருஞ்சாணி-53.2, சிற்றார் 1-53.2, சிற்றார் 2- 93, பொய்கை அணை-1.6, மாம்பழத்துறையாறு- 19, புத்தன் அணை- 52.6, முள்ளங்கினாவிளை-44, கோழிப்போர் விளை- 36.2, சுருளோடு-31.2, நாகர்கோவில்-4.8,

    குமரி மாவட்டத்தில் பெய்து வரும் மழையாலும், கேரளாவில் பெய்யும் மழையாலும் குமரியின் குற்றாலம் என்று அழைக்கப்படும் திற்பரப்பு அருவியில் வெள்ளம் கொட்டுகிறது.

    நேற்றும், இன்றும் அருவியை தாண்டி தண்ணீர் ஆர்ப்பரித்து பாய்கிறது. இதனால் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க அச்சப்பட்டனர். மழை காரணமாக குமரி மாவட்டத்தில் ஓடும் அனைத்து ஆறுகளிலும் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.

    குமரி மாவட்டத்தில் இன்று காலையிலும் மழை பெய்தபடி உள்ளது. பலத்த மழையாக இல்லாமல் சாரல் மழையாக பெய்து வருகிறது.

    இதனால் மாவட்டம் முழுவதும் இதமான சீதோஷ்ணம் நிலவுகிறது.
    Next Story
    ×