search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    20-ந்தேதி எடப்பாடி பழனிசாமி வருகை: மயிலாடுதுறை துலா கட்டத்தில் பலத்த பாதுகாப்பு
    X

    20-ந்தேதி எடப்பாடி பழனிசாமி வருகை: மயிலாடுதுறை துலா கட்டத்தில் பலத்த பாதுகாப்பு

    மயிலாடுதுறையில் நடைபெற்று வரும் காவிரி மகா புஷ்கர விழாவில் புனித நீராட வருகிற 20-ந்தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வருவதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.
    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறையில் நடைபெற்று வரும் காவிரி மகா புஷ்கர விழாவில் புனித நீராட வருகிற 20-ந்தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வருவதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது குறித்து திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி துலாக்கட்டத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

    புஷ்கர விழாவில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் பல லட்சம் பக்தர்கள் புனித நீராட திரண்டதால் துலாக்கட்டம் பகுதியில் நெரிசல் ஏற்பட்டது. காவிரி ஆற்றில் இன்று அல்லது நாளை மயிலாடுதுறை பகுதிக்கு தண்ணீர் வந்துவிடும் என்பதால் தண்ணீர் வந்தால் பக்தர்கள் பாதுகாப்பாக எவ்வாறு நீராட அனுமதிப்பது என்பது குறித்தும், வரும் 20-ந்தேதி எடப்பாடி பழனிசாமி புனித நீராட வருவதாலும், அன்று மகாளய அமாவாசை என்பதாலும் அரசு சார்பில் உள்ளூர் விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது. அதனால் வி.ஐ.பி. வந்து செல்வதற்கான பாதைகள், கூட்டம் அதிகமாக இருந்தால் எவ்வாறு பாதுகாப்பை பலப்படுத்துவது? என்பது குறித்து திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி வரதராஜுலு நேற்று நேரில் ஆய்வு செய்தார். தஞ்சை சரக டிஐஜி லோகநாதன், நாகை எஸ்.பி. சேகர் தேஷ்முக், டி.எஸ்.பி .கலிதீர்த்தான் ஆகியோர் உடனிருந்தனர்.

    பின்னர் நாகை எஸ்.பி. சேகர் தேஷ்முக் கூறியதாவது:-

    மயிலாடுதுறையில் காவிரிபுஷ்கரம் விழாவில் புனிதநீராட பக்தர்கள் சராசரியாக தினமும் வந்து சென்றதால் பெரிய அளவில் நெரிசல் ஏற்படாமல் இருந்தது. கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் விடுமுறை என்பதால் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநில பக்தர்கள் மிக அதிக அளவில் ஒரே நேரத்தில் திரண்டதால் கூட்டம் அதிகமாக உள்ளது. கடந்த இரண்டு நாட்களாக 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். காவிரியில் மயிலாடுதுறை பகுதிக்கு தண்ணீர் இன்று (18-ந்தேதி) வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தண்ணீர் வந்தால் நெரிசல் இன்றியும், பக்தர்கள் பாதுகாப்பாக நீராடி செல்வதற்கான ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்து வருகிறோம்.

    வரும் 20-ந்தேதி தமிழக முதல்வர் வரும் அன்று மகாளய அமாவாசையையொட்டி கூட்டம் அதிகமாக இருந்தால் எவ்வாறு போக்குவரத்தை சரிசெய்வது, காவிரிதுலாக்கட்டத்தில் பக்தர்கள் நெரிசலின்றி நீராடி செல்வதற்கான பாதுகாப்பு குறித்து ஆலோசித்து வருகிறோம். ஞாயிற்றுக்கிழமையான நேற்று மதியம் 2 மணி வரையில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் புனித நீராடி சென்றுள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மயிலாடுதுறை துலா கட்டத்தில் காவிரி மகாபுஷ்கர விழாவையொட்டி இன்று 7-வது நாளாக ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர். தொடர்ந்து பக்தர்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர். 24 மணி நேரமும் பக்தர்கள் நீராட வசதி செய்யப்பட்டுள்ளது.
    Next Story
    ×