search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜெயலலிதா மறைவுக்கு பின் முதியோர் உதவித்தொகை நிறுத்தம்
    X

    ஜெயலலிதா மறைவுக்கு பின் முதியோர் உதவித்தொகை நிறுத்தம்

    ஜெயலலிதா மறைவுக்கு பின் பெண்களுக்காக அவர் தீட்டிய திட்டங்கள் எல்லாம் படிப்படியாக தேய்ந்து வருகின்றன. மேலும் முதியோர் உதவித்தொகை பெரும்பாலானவர்களுக்கு நிறுத்தப்பட்டுள்ளது.
    சென்னை:

    தமிழக அரசு சார்பில் ஆதரவற்றோர், விதவைகள், முதியோர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

    தி.மு.க. ஆட்சியில் மாதம் ரூ.500 வழங்கப்பட்ட இந்த உதவி தொகையை 2011-ம் ஆண்டு முதல்வராக பொறுப்பேற்ற ஜெயலலிதா ரூ.1000 ஆக உயர்த்தி வழங்கினார்.

    இந்த திட்டம் ஆதரவற்ற பெண்கள், முதியவர்களுக்கு மிகவும் உதவியாக இருந்து வந்தது. மகன்கள்,மகள்கள் இருந்தும் ஆதரவற்று இருக்கும் முதியோர்கள் மாதம் ரூ.1000 உதவி தொகை மூலம் தங்களது தேவைகளை சமாளித்து வந்தார்கள்.

    அதே போல கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் விதவை பெண்களுக்கு இந்த நிதி உதவி குடும்பம் நடத்த மிகவும் உதவியாக இருந்தது. அரசின் உதவித்தொகை மாதந்தோறும் பயனாளிகளின் வங்கி கணக்கில் போடப்பட்டு வந்தது.

    மணியார்டர் மூலம் அனுப்புவதால் பல்வேறு முறைகேடுகளுக்கு வழி வகுத்ததால் முதியோர் உதவி தொகையை வங்கியில் பெற ஜெயலலிதா ஏற்பாடு செய்தார்.

    தமிழகம் முழுவதும் பல லட்சம் முதியவர்கள் இதனால் பயன் அடைந்து வந்தனர்.

    முதியோர் உதவி தொகையை சிலர் தவறான முறையில் பெறுவதாக வந்த புகாரை தொடர்ந்து ஆண்டு தோறும் வருவாய்த்துறை மூலம் பயனாளிகள் இருப்பிடம் ஆய்வு செய்யப்பட்டன. இந்த ஆய்வின் போது ஆயிரக்கணக்கான முதியவர்களுக்கு வழங்கப்பட்ட உதவி தொகை திடீரென நிறுத்தப்பட்டது.

    இந்த நிலையில் 2016-ம் ஆண்டு மீண்டும் முதல்வரான ஜெயலலிதா முதியோர், விதவைகள் உதவிதொகை உள்ளிட்ட பெண்களுக்கான அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தினார். மகப்பேறு திட்டம், பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் போன்றவற்றிற்கு கூடுதலாக நிதி ஒதுக்கினார்.

    ஆனால் அவரது மறைவுக்கு பின் பெண்களுக்காக அவர் தீட்டிய திட்டங்கள் எல்லாம் படிப்படியாக தேய்ந்து வருகின்றன. முதியோர் உதவித்தொகை பெரும்பாலானவர்களுக்கு நிறுத்தப்பட்டுள்ளது.

    கடந்த 5, 8 வருடங்களாக உதவி தொகை பெற்று வந்த பெண்களுக்கு உதவி தொகை நிறுத்தப்பட்டதால் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.

    விதவைகளுக்கு வழங்கப்பட்ட உதவி தொகை கூட முறையாக கிடைக்கவில்லை. பிள்ளைகள் ஆதரவு இல்லாமல் தனியாக வசிக்கும் லட்சகணக்கான ஆண், பெண் முதியோர்களுக்கு மாதம் மாதம் வழங்கப்பட்ட உதவி தொகை கடந்த சில மாதங்களாக கிடைக்கவில்லை. இதனால் வயதான காலத்தில் உதவி தொகை கேட்டு தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகிறார்கள்.

    சென்னையில் உள்ள எல்லா தாசில்தார் அலுவலகங்களிலும் இந்த பிரச்சினை நீடித்து வருகிறது. பல ஆண்டுகளாக பெற்று உதவித் தொகை திடீரென நிறுத்தப்பட்டது ஏன்? என்று தெரியாமல் கஷ்டப்படுகிறார்கள்.

    இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் கூறும்போது, “பெண்களுக்கு எப்போதும் உறுதுணையாக இருந்து வந்தவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா. அவர் மறைவுக்கு பிறகு எங்களுக்கு உதவி தொகை கிடைக்கவில்லை. நிதி பற்றாக்குறை என்று காரணம் கூறுகிறார்கள்.

    அரசு தரும் ரூ.1000 பணத்தில் கை செலவுகளை செய்து தேவையானவற்றை வாங்கி சாப்பிடுகிறோம். அந்த பணம் நிறுத்தப்பட்டதால் சாப்பாட்டிற்கே கஷ்டமாக இருக்கிறது” என்று தெரிவித்தனர்.

    இது குறித்து வருவாய் துறை அதிகாரி கூறுகையில், “பயனாளிகளுக்கு உதவி தொகை வழங்குவதற்கு தேவையான நிதி ஒதுக்கப்படவில்லை. நிதி பற்றாக்குறையால் இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளது” என்றார்.
    Next Story
    ×