search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆட்சியை கலைக்க நினைக்கும் தினகரனின் சூழ்ச்சி பலிக்காது: வைத்திலிங்கம் எம்.பி. பேச்சு
    X

    ஆட்சியை கலைக்க நினைக்கும் தினகரனின் சூழ்ச்சி பலிக்காது: வைத்திலிங்கம் எம்.பி. பேச்சு

    தி.மு.க.வுடன் சேர்ந்து கொண்டு அ.தி.மு.க. ஆட்சியை கவிழ்க்க நினைக்கும் டி.டி.வி.தினகரனின் சூழ்ச்சி பலிக்காது என்று வைத்திலிங்கம் எம்.பி. பேசினார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை ஆப்ரகாம் பண்டிதர் சாலையில் தெற்கு மாவட்ட அ.தி.மு.க சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கோட்டைப் பகுதிக் கழகச் செயலாளர் புண்ணியமூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட பால்வளத் தலைவர் ஆர்.காந்தி வரவேற்றார்.

    கூட்டத்தில் துணை ஒருங்கிணைப்பாளரும், தெற்கு மாவட்ட செயலாளருமான ஆர்.வைத்திலிங்கம் எம்.பி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    இந்த இயக்கம் விஸ்வரூபம் எடுத்து இன்றைக்கு அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் தமிழகம் முழுவதும் எழுச்சியுடன் நடக்கிறது. தி.மு.க.வை 1967-ம் ஆண்டு ஆட்சியில் அமர்த்திய பெருமை அண்ணாவை சேரும். ஆட்சிக்கு வந்தவுடன் தமிழ்நாடு என்று பெயர் சூட்டியவர் அவர் தான். சீர்த்திருத்த திருமணம் சட்டப்படி செல்லும் என்று தீர்மானம் நிறைவேற்றினார். 2-வது உலகத்தமிழ் மாநாட்டை சென்னையில் நடத்தி தமிழுக்கு பெருமை சேர்த்தார்.

    ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஒரு குடும்பத்தின் கைக்குள் கட்சி சென்றுவிடுமோ? ஏழை மக்களுக்காக பாடுபட்ட கட்சி ஒரு குடும்பத்தினரின் கட்டுப்பாட்டிற்குள் சென்று விடக்கூடாது என்பது தொண்டர்கள் ஏக்கமாக இருந்தது.

    குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு தொண்டர்களின் ஏக்கம் போக்கப்பட்டுள்ளது. இந்த கட்சி யாருக்கும் அடிமை கிடையாது. பிரிந்து சென்றவர்கள், அப்படியே பிரிந்து போய் விடுவார்கள். நாம் ஆட்சிக்கு வந்துவிடலாம் என மு.க.ஸ்டாலின் கனவு காண்கிறார். அவர் என்றைக்கும் முதல்- அமைச்சராக முடியாது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் எண்ணப்படி எடப்பாடி பழனிசாமி ஆட்சியை சிறப்பாக நடத்தி வருகிறார். தி.மு.க.வுடன் சேர்ந்து கொண்டு அ.தி.மு.க. ஆட்சியை கவிழ்க்க நினைக்கும் டி.டி.வி.தினகரனின் சூழ்ச்சி பலிக்காது.

    ஜெயலலிதாவின் சமாதிக்கு டி.டி.வி.தினகரன் சென்று இந்த ஆட்சியை கவிழ்க்க போவதாக சொன்னால் நாளைக்கே பெரும்பான்மையை நிரூபிக்க தயார். ஜெயலலிதா மீது உண்மையான அன்பு, பற்று இருந்தால் ஆட்சியை கவிழ்க்க மாட்டார்கள். ஆட்சியை கவிழ்க்க முயற்சி செய்பவர்களை ஜெயலலிதாவின் ஆன்மா மன்னிக்காது. இந்த கட்சியை எந்த கொம்பனாலும் எதுவும் செய்ய முடியாது. இரட்டைஇலை சின்னத்தை மீட்க போகிறோம். சூழ்ச்சிக்கு துணை போகாமல் ஒற்றுமையாக செயல்படுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×