search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    களியக்காவிளையில் கோடிக்கணக்கில் பண மோசடி: நிதி நிறுவன இயக்குனர்கள் 2 பேர் கைது
    X

    களியக்காவிளையில் கோடிக்கணக்கில் பண மோசடி: நிதி நிறுவன இயக்குனர்கள் 2 பேர் கைது

    களியக்காவிளையில் கோடிக்கணக்கில் பண மோசடி செய்த நிதி நிறுவன இயக்குனர்கள் 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட எல்லையான களியக்காவிளையை அடுத்த பளுகல், மத்தம்பாலையில் ஒரு தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது.

    இங்கு முதலீடு செய்யப்படும் பணத்திற்கு கூடுதல் வட்டி தரப்படும் என்று நிதி நிறுவனத்தினர் அறிவித்தனர். இதையடுத்து களியக்காவிளை, பளுகல், மார்த்தாண்டம், குழித்துறை மற்றும் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்களும் இங்கு ஏராளமான பணத்தை முதலீடு செய்தனர்.

    இதன் மூலம் நிதி நிறுவனத்திற்கு கோடிக்கணக்கில் பணம் சேர்ந்தது. தொடக்கத்தில் நிதி நிறுவனத்தினர், வாடிக்கையாளர்களுக்கு வட்டி பணத்தை முறையான நாட்களில் அளித்து வந்தனர்.

    அதன் பிறகு பணம் முதலீடு செய்தவர்களுக்கு முதிர்வுத்தொகையை அளிப்பது தாமதமானது. இது கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து ஏராளமானோருக்கு பணம் அளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

    இந்த நிலையில் கடந்த 1-ந்தேதி நிதி நிறுவன அலுவலக வாசலில் ஒரு அறிவிப்பு ஒட்டப்பட்டது. ஓணம் பண்டிகைக்காக அலுவலகத்திற்கு விடுமுறை விடப்படுவதாகவும், 4 நாட்களுக்கு பிறகு மீண்டும் திறக்கப்படுமென்றும் அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது.

    ஓணப்பண்டிகை முடிந்த பின்பு அலுவலகம் திறக்கப்பட வில்லை. ஊழியர்களும் வரவில்லை. இதை அறிந்த வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் நிதி நிறுவனம் முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்து களியக்காவிளை மற்றும் கேரள போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமரசம் செய்து போலீசில் புகார் அளிக்க அறிவுறுத்தினர்.

    அதன்படி, நிதி நிறுவனத்தில் பணம் கட்டி ஏமாந்த குமரி மாவட்ட வாடிக்கையாளர்கள் நாகர்கோவிலில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு போலீசிலும், கேரள வாடிக்கையாளர்கள் திருவனந்தபுரம் போலீசிலும் புகார் அளித்தனர்.

    இதுவரை அளிக்கப்பட்ட புகார்கள் மூலம் நிதி நிறுவனம் வாடிக்கையாளர்களிடம் பல கோடிக்கு பண மோசடி செய்திருப்பது தெரிய வந்தது.

    இதையடுத்து நாகர்கோவில் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் டி.எஸ்.பி. பால்துரை, இந்த வழக்கை விசாரித்தார். மேலும் குற்றம் சாட்டப்பட்ட நிதி நிறுவன இயக்குனர் நிர்மலன் உள்பட 18 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வந்தார்.

    குமரி மாவட்டத்தில் மட்டும் இவர்கள் மீது 280 பேர் புகார் கொடுத்துள்ளனர். இந்த புகார்கள் மீதும் விசாரணை நடந்து வருகிறது.

    இதில், நிதி நிறுவன இயக்குனர்கள் அணில் குமார் (வயது 52), இன்னொரு அணில்குமார் (43) ஆகியோர் இன்று கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் டி.எஸ்.பி. பால்துரை விசாரணை நடத்தினார். பின்னர் அவர், கூறும்போது, கைதான இருவரும் மதுரையில் உள்ள பொருளாதார மோசடி வழக்குகளை விசாரிக்கும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவார்கள், என்றார்.

    இதற்கிடையே இந்த நிதி நிறுவன இயக்குனர்கள் திருவனந்தபுரம் சப்-கோர்ட் டில் ஏற்கனவே ஒரு மனுத் தாக்கல் செய்துள்ளனர். அதில், தங்களுக்கு பலநூறு கோடி கடன் இருப்பதாகவும் அதனை திருப்பிக் கொடுக்கும் அளவிற்கு எங்களிடம் பணம் இல்லையென்றும் தெரிவித்துள்ளனர்.

    இந்த மனு வருகிற 18-ந்தேதி விசாரணைக்கு வர இருக்கிறது.

    Next Story
    ×