search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெரம்பலூரில் டெங்கு காய்ச்சலுக்கு பெண் உள்பட 3 பேர் பலி
    X

    பெரம்பலூரில் டெங்கு காய்ச்சலுக்கு பெண் உள்பட 3 பேர் பலி

    பெரம்பலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பெண் உள்பட 3 பேர் பலியாகினர். கிராமம் தோறும் மருத்துவ முகாம்கள் நடத்தி சிகிச்சை அளிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    குன்னம்:

    பெரம்பலூர் மாவட்டம் புதுநடுவலூர் பகுதியை சேர்ந்தவர் அன்பு (வயது 37), விவசாயி. இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அப்பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்றார்.

    அப்போது டாக்டர்கள் டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருந்ததையடுத்து மேல் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டெங்கு காய்ச்சல் வார்டில் அனுமதிக்கப்பட்டு அன்புக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

    இருப்பினும் டெங்கு காய்ச்சலை குணப்படுத்த முடியவில்லை. இதையடுத்து அன்புவை அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் வீட்டிற்கு அழைத்து சென்றனர். இந்நிலையில் நேற்று அன்பு திடீரென இறந்தார்.

    இதே போல் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பெரம்பலூர் அரசு ஆஸ்பத் திரியில் சிகிச்சை பெற்று விட்டு வீடு திரும்பிய பெரம்பலூர் நாரணமங்கலம் பகுதியை சேர்ந்த சுப்பிரமணி என்பவரின் மனைவி சிந்தாமணி (40), பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள கொளக்காநத்தம் பகுதியை சேர்ந்த விவசாயி பிரபாகரன் ஆகியோரும் நேற்று திடீரென இறந்தனர்.

    பெரம்பலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பெண் உள்பட 3 பேர் பலியான சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பலர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக கொசுக்களின் உற்பத்தி அதிகமாகியுள்ளது. ஆனால் அதனை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், சாக்கடை மற்றும் வீடுகளில் கொசு மருந்து அடிப்பது, தேங்கியுள்ள தண்ணீரை அகற்றுவது என எந்தப் பணியும் நடைபெறவில்லை எனவும், இதனால் தான் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 3 பேர் இறந்துள்ளதாகவும் புகார் தெரிவித்துள்ளனர்.

    மேலும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சிகிச்சை பெற சென்றால் முதலுதவி சிகிச்சை அளிப்பது இல்லை என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராமம் தோறும் மருத்துவ முகாம்கள் நடத்தி சிகிச்சை அளிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×